இலவு காத்த கிளி போல் இந்தியா உட்படச் சர்வதேச சமூகம் சிங்களவன் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறான் என்று காத்திருக்கிறது. இலவம் மரத்தில் கிடைக்கும் பஞ்சு உயர்தரமானது. இலவமரம் பச்சை வர்ணத்தில் காய் காய்க்கும்.
முற்றிப் பழுத்தபின் அதை உண்ணலாம் என்று கிளி காத்திருக்கும். ஆனால் அந்தக் காய் முற்றிய வுடன் தானாக வெடித்துவிடும். அதற்குள் இருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிடும். காத்திருந்து ஏமாறுவதற்கு உதாரணமாக இலவு காத்த கிளியின் கதையைச் சொல்வார்கள்.
அரசியல் தீர்வுதான் எங்கள் குறிக்கோள் என்கிறான் சிங்களவன். ஆயுதமும் நிதியும் வழங்கும் அவனுடைய நட்பு நாடுகள் அரசியல் தீர்வை நாடும்படி ஆலோசனை கூறுகின்றன. பிள்ளையையும் கிள்ளி அழவைத்தபடி தாலாட்டுப்பாடித் தொட் டிலை ஆட்டுவதற்கு நிகரான செயற்பாடாக இது அமைகிறது.
அதாவது போரையும் ஊக்குவிக்கிறார்கள். அமைதித் தீர்வுக்குமாகக் குரல் கொடுக்கிறார்கள்.சிறிலங்கா அதிபரின் இளவல் பசில் புதுடில்லிக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தனது அரசு ஒரு அரசியல் தீர்வை முன் வைக்கவுள்ளதாகக் கூறிவருகிறார்.
மாவிலாறுப் பிரச்சினை ஆரம்பித்தவுடன் புதுடில்லி சென்ற பசில் அனைத்துக் கட்சிக் குழுவி னர் அமர்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தனது அரசு புலிகளோடு நேரடிப் பேச்சுக் களில் இறங்கப் போவதாகச் சொன்னார். அதுவெறும் வாய்ப்பேச்சாக முடிந்தது. கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்ட பின்பும் இதேரக வாக்குறுதியைப் பசில் புதுடில்லிக்கு வழங்கினார்.
போர் உச்சக்கட்டம் அடைந்து தமிழ் நாட்டில் மிகப்பெரிய கொதிநிலை தோன்றிய போது பசில் புதுடில்லிக்கு ஓடோடிச்சென்றார். புதுடில்லித் தலைவர்களுக்கும் பசிலுக்கும் இடையில் நடந்த இரகசியப் பேச்சுக்கள் பற்றிய விபரங்கள் எமக்கு எட்டவில்லை.
ஆனால் இந்திய மத்திய அரசு தனது கூட்டறிக்கையில் 13 ஆம் திருத்தம் அமுலாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரப்பகிர்வு செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் தனது அரசு அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுப்பதாகப் பசில் சொன்னார். பசில் மற்றும் இந்திய அரசின் கூட்டறிக்கை 2008.10.25 ஆம் நாள் பசில் புதுடில்லி சென்ற பின் வெளியிடப் பட்டது.
அரசியல் பொதி ஒன்றிற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்குச் சிறிலங்கா அரசு இணக்கம் கண்டிருப்பதாகவும், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தேவைப்பட்டால் ஐனாதிபதி ராஜபக்சவே தலைமை தாங்கி அரசியல் தீர்வின் இறுதி வடிவத்தை எட்டுவாரென்றும் அப்போதைய செய்திகள் எடுத்துக் கூறின.
ஏ.பி.ஆர்.சி எனப்படும் அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழு பல வருடங்களாகப் பல அமர்வுகளை மேற்கொண்டுள்ளது. கண்ட பலன் ஒன்றுமில்லை. வெறும் கண்துடைப்பாகவும் பேச்சு மேடையாகவும் அது அமைந்ததுதான் மிச்சம்.
முடிவில்லாத போர் நீடித்துக்கொண்டு செல்லும் அதே வேளையில் அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்ற தனது பழைய பல்லவியைச் சர்வதேச சமூகம் மீண்டும் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதை மறுதலிக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்பது கிடையாது. பயங்கர வாதப் பிரச்சினை ஒன்று தான் உண்டு என்று கூறினார். நான் நடத்துவது போரல்ல பயங்கர வாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கை மாத்திரமே என்று தனது பங்கிற்குச் ஐனாதிபதி கூறியுள்ளார்.
அரசின் முக்கிய பங்காளிகள் தமிழ் சிங்களப் பிரச்சினை இருப்பதை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் படிப்படியாக ஒன்றிணைக்க முடியாத இரு துருவ நிலை இந்தத் தீவின் இனப்பிரச் சினையில் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது.
அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திக்கக்கூட மறுக்கும் சிங்களத் தலைவர்கள் ஒரு படி மேலே போய் தமிழர்களும் முஸ்லிம்களும் வந்தான் வரத்தான்கள் என்றும் இருக்கும் வரை இருக்கலாமே ஒழிய உரிமை பாராட்டக் கூடாது என்று பகிரங்கமாகக் கூறத் தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு இராணுவ வெற்றி மீது அத்தனை நம்பிக்கை. கிழக்கைப் போல் வடக் கையும் கைப்பற்றி இராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தால் பிரச்சினை தானாக மறைந்து விடும் என்று எண்ணுகிறார்கள்.
இந்தச்சிந்தனை சிங்களப் பொதுமக்களையும் பீடித்துள்ளதால் சமரசம் ஏற்படுவது அசாத்தியமாகியுள்ளது. தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்காலக் கூற்றுக்கள் சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா ஒரு சிங்கள நாடு. இனத்துவச் சிறுபான்மையினர் அதிகபட்ச உரிமைக் கோரிக்கைகளை விடுக்கக்கூடாது என்று அவர் கூறியதை மிகவும் துணிச்சலான பேச்சு என்றும் பிறர் சொல்லத் தயங்கியதைச் கூசாமல் கூறிய சிங்கள வீரம் என்றும் ஊடகங்கள் பாராட்டுகின்றன.
ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் பொன்சேகாவுக்கு முக்கியபங்கு உண்டு. அவர் குடும்பத்தில் ஒருவராகக் கணிப்பிடப்படுபவர். அவருடைய இசகுபிசகான பேச்சுக்கள் ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாகவே கொள்ளப்படவேண்டும்.
கொழும்புப் பத்திரிகைகள் தமிழ்நாட்டுத் தலைவர்களை மட்டந்தட்டுவதை வழமையாகக் கொண்டுள்ளன. 2008.10.28 ஆம் திகதி வெளிவந்த டெயிலி மிரர் பத்திரிகையின் கேலிச் சித்திரத்தில் கருணாநிதியின் வாயைப் பெரிய துணியால் மூடிக் கட்டிய மன்மோகன் சிங் கருணாநிதியின் கைகளையும் பின்கட்டாகக் கட்டி நாற்காலியில் பிணைத்துள்ளார்.
மிரட்டும் பார்வையுடன் கருணாநிதிக்குப் பின்னால் நிற்கும் பிரதமர் மன்மோகன்சிங்கையும் கட்டிப் போடப்பட்ட தமிழ் நாட்டு முதலமைச்சரையும் பசில் பின்னுக்கு நின்று வேடிக்கை பார்க்கும் செய்தியை இந்தச் சித்திரம் வெளிப்படுத்துகிறது.
பசில் கருணாநிதியை மத்திய அரசின் மூலம் கட்டில் போட்டு விட்டார் என்று கொழும்பு ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. இந்த இலட்சணத்தில் தமிழ் நாட்டு அரசி யல்வாதிகளைக் கோமாளிகள் என்று பொன் சேகா கூறியதில் ஒன்றும் வியப்பில்லை.
சிங்களவர்களின் ஆழ்மனத்தில் இலங்கைத்தீவு தமக்கு மாத்திரம் சொந்தம் என்ற கோட்பாடு நன்றாக வேரோடியுள்ளது. மகாவம்சத்தின் 06 ஆம் அத்தியாயத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
கௌதம புத்தர் இலங்கையைச் சிங்கள மக்களுக்கு மாத்திரம் தாயகமாகவும், புத்த மதத்தின் இருப்பிட மாகவும் நிலைபெற வழங்கினார். இலங்கையைப் பிறிதொருவருடன் பங்கிட இந்தச் சிந்தனை வயப்பட்ட சிங்களவனால் முடியாது.
எனவே அரசியல் தீர்வு என்பது எட்டாக் கனிதான். சிறிலங்காவின் அமெரிக்கத் தூதுவராக மூன்று வருடங்கள் பதவி வகித்த (1977 - 1979) ஹோவாட் றிகின்ஸ்(Howard Wriggins) இலங்கை விவகாரங்களில் மகாவம்சச் சிந்தனை செலுத்தும் ஆதிக்கம் பற்றி 2002 ஆம் ஆண்டில் எழுதிய தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களை எதிரிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் கணிப்பிடுவதற்கு இந்தப் புராதன காலச்சுவடி காரணமானதை என்னால் ஏற்க முடியவில்லை. இந்தத் தீவின் தலைவிதியை இந்த ஏட்டுச்சுவடி தீர்மானிக்க அனுமதிக்காமல் மக்களும் தலைவர்களும் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.
அண்மைக் காலமாக அரசியல் தீர்வு காணுங்கள் என்று வலியுறுத்தும் முக்கியஸ் தர்களில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் இடமுண்டு. றொபேட் ஓ. பிளேக் (Robert O.Blake) என்ற பெயருடைய இவர் உடல் உயரத்தில் அமெரிக்காவின் தலை சிறந்த பொருளாதாரப் பேராசிரியர் மறைந்த ஜோன் கெனத் கல்பிறெயித்(John Kenneth Galbraith)அவர்களை ஒத்தவர்.
தூதுவர் பிளேக் சில சமயங்களில் யோசிக்காமல் பேசும் இயல்பு உடையவர். ஒபாமா வெற்றி பெற்றவுடன் கொழும்பில் நடந்த கொண்டாட் டங்களில் கலந்து பிளேக் சிறிலங்காவின் ஒரு முஸ்லிம் அல்லது தமிழர் சனாதிபதியாக வரும் வாய்ப்பு எதிர்காலத்தில் இருப்பதாகக் கூறினார்.
தூதுவர் றிகின்ஸ் புரிந்து கொண்டளவுக்கு பிளேக் சிறிலங்காவைப் புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படை.ஈழத் தமிழர்களுக்குச் சார்பாகத் தமிழ்நாட்டில் வெகுஜனக் கிளர்ச்சிகள் தோன்றியபோது தூதுவர் பிளேக் சென்னைக்குச் சென்றார்.
கல்விமான்களும் சிறிலங்காவை அவதானிக்கும் ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர் களும் மாணவ சமூகத்தினரும் நிரம்பிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் பிளேக் ஒரு பேருரை ஆற்றினார். சில முக்கிய விடயங்களை அவர் வலியுறுத்திப் பேசினார்.
ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கைகளை வழங்குவது மூலம் கொதிநிலையைத் தணிக்க முடியும். இதற்கு இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். இனத்துவத் தேசியம் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போது சிறிலங்காவுக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும்.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு விரைந்து செயற்படவேண்டும். பிளேக் சொன்னது செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்துள்ளது. இராணுவ நடவடிக்கை தொடர்கிறது.ஈழத்தமிழர்கள் ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்பதற்கு ஒரேயொரு காரணந்தான் உண்டு.
அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தசிங்கள அரசுகள் பொறுப்புணர்வுடன் தமிழர் உரிமைக் கோரிக்கைகளை நேர்மையுடன் பரிசீலிக்கவும் நியாயமான அரசியல் தீர்வை வழங்கவும் மறுத்ததுதான் அந்தக் கார ணம்.
தமிழர்கள் கேட்ட நியாயமான கோரிக்கைகளை சிங்களத்தலைவர்கள் இதய சுத்தியுடன் வழங்கியிருந்தால் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு ஏற்பட இடம் கிடைத்திருக்கமாட்டாது. இந்திய மத்திய அரசின் நுழைவுக்கு சிங்களத் தலைவர்களின் தமிழர் உரிமை மறுப்புக் கொள்கைதான் நேரடிக்காரணம்.
இப்போது புதுடில்லியும் கொழும்பும் ராஜபக்ச சகோதரர்களின் கூற்றுப் படி நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். வாங்கிக்கட்டுபவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.பல்லின, பன்மத, அதியுச்ச அரசியல் உணர்வுமிக்க சிறிலங்கா போன்ற நாட்டில் நிரந்தர அமைதிக்கான அடித்தளம் என்றோ இடப்பட்டிருக்க வேண்டும்.
காலம் கடந்த நிலையில் இருபக்க நிலைப்பாடுகளும் இறுக்கம் அடைந்த நிலையில் அமைதிக்கும் இடமில்லை, அரசியல் தீர்வுக்கும் இடமில்லை. டொனமூர் சீர்திருத்த நாட்கள் தொட்டுக்கடந்த எழுபது வருடமாக ஈழத்தமிழர்கள் அதிகாரப் பகிர்வு, தன்னாட்சி உரித்து, சம அந்தஸ்து என்பனவற்றைக் கோரி வருகிறார்கள்.
ஈழத் தமிழர்களின் இந்த எதிர்பார்ப்புக்களை இராணுவ பலத்தின் மூலம் அடக்கிவிட முடியாது
தோல்வி என்பது அடிமை வாழ்வும், தாழ்ந்த நிலைக்குடியுரிமையும், உரிமைகளற்ற கையறு நிலையும் மாத்திரமே என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.
தமிழ்த் தேசியம் விரைவில் சாகமாட்டாது. அது ஈழத்தில்; ஆரம்பித்து உலகை வியாபித்து நிற்கிறது. தமிழ்த்தேசியம் தொடர்ந்து போராடும் வெற்றி நிச்சயம் என்பது அதற்குத் தெரியும். ஈற்றில் சீர்குலைந்து, அடி அழிந்து போவது சிங்கள தேசம் மாத்திரமே.
போரில் சிங்களவர்கள் பெற்ற வெற்றி மூலம் ஈழத்தமிழர்கள் மீது அரசியல் தீர்வைத் திணிக்க இயலாது. சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கைவிடப்படும் வரை ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர்காலம் காலமாகத் தொடரும்.
-அன்பரசு-thamilkathir
Comments