ஒரே இலங்கை ஒரே நாடு என்று வெளியுலகுக்குக் கூறிக்கொண்டு தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கையரசு இந்தியாவோடும் அதன் பகை சக்திகளான பாகீஸ்த்தானுடனும் சீனாவுடனும் கைகோர்த்துக் கொண்டு அவர்களின் அசுர பலத்தோடு செயற்பட்டதை சில சிந்தயுடை சீலர்கள் எடுத்துரைத்துள்ளனர். கடந்த சனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் எழுபதினாயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களும் அடங்கல். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூடக் கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் கணக்குவிடத்தான் பார்க்கிறார்கள்.
எண்ணற்ற தடவைகள் எம்முறவுகள் உணவுக்கும் மருந்துக்கும் சிறிலங்கா அரசிடம் கேட்டு ஏங்கியேங்கி நின்ற போது, சிறிலங்கா அரசு கொடுத்ததெல்லாம் நாசியால் சுவாசிக்க நச்சு, இரசாயனக் குண்டுகளும், பாடையேறிப் போகப் பல்குழல் எறிகணைகளும் மட்டுமே. தாகத்திற்குக் குடிப்பதற்கு தண்ணீர் கூடவில்லாமல் பதுங்கு குழியிலிருந்த அப்பாவிகளுக்கு அரசு விநியோகித்த நிவாரணம் பச்சக் கூண்டோடு பரலோகம் செல்லப் பயணச் சீட்டுத்தான். பாதுகாப்பு வலயமென்று சிறிலங்காப் படையினர் விரித்த வலையினுக்குள் பிணக்குழிகளாகும் பதுங்கு குழிகளும், அடுத்தகணமே அங்கவீனர்களாகும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில், படுகொலை செய்யப்படும் மக்களின் சடலங்களை புதைப்பதற்கு எவருமில்லை. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருக்கும் அப்பாவி மக்களின், அடிப்படை ஜனநாயக உரிமை குறித்து பேச, முடியாவிட்டாலும் குறைந்த அவர்கள் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இழகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!
பாலைவனத்தில் நிற்பவனுக்கு குடிப்பதற்குப் பச்சத்தண்ணீர் தான் அப்போதைய தேவை. அவனிடம் நடந்து என்னருகே வா, நான் பிரியாணியும் பீஷாவும் தருகிறேன் என்று சொல்வது போலதான் இருக்கின்றது இந்த இனவாத இலங்கையரசும் ஐ.நா கூறும் நல்லுலகுகளும். நீங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்கு வாருங்கள், வந்தால் உங்களுக்குப் பொதுமன்னிப்பளித்து, புது வாழ்வளிக்கப்படும் என்று வாய் கிளியக் கத்தி, அதையும் அனைத்துலகத்தின் அனுசரனையுடனும் ஆசீர்வாதத்துடனும் அகோரமான முறையில் சாதித்து முடித்து விட்டனர். அறுபது வருடத்திற்கு மேலாக கரைபுரண்டோடிய இனப்பிரச்சனைக்கு கடந்த முற்ப்பது வருடமாக முனைப்புப்பெற்ற ஆயுதப் போராட்டத்தினை பயங்கரவாதமென்ற பதம்கொண்டு பரிந்துரைக்கும் பண்பாளர்களால் பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை.
வன்னி மக்களை தன் ஆட்சிக்குட்பட்ட மக்களென்றும், அவர்களை பயங்கரவாத்திலிருந்து மீட்பதற்கன யுத்தமென்று பிரச்சாரப்படுத்தி, இந்தயுத்ததினை முன்னெடுத்து அவர்களை அழித்தொழித்து, அங்கவீணப்படுத்தியது அரசதரப்பு. ஆயினும் அவர்களுக்குரிய மிகச்சாதாரண விடயமான உணவையும் மருந்தையும் கூட அங்கிருக்கும் போதும், இப்போதும் கூட கொடுப்பதற்க்கு முடியாமல் போயிற்று இந்த மகிந்த கூட்டுக் குடும்பத்திற்க்கும், அவர்களுடன் ஒன்றாகி வெண்கொற்றக் குடைபிடிக்கும் குறுந்தாடிக்காரர்ககும். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாணத் துடிக்கும் ஐநா ஐயாக்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதற்க்கும் மகிந்த குடும்பம் மசியவில்லை. மகிந்தா ஊதும் மகுடியை அந்த ஐயாக்கள் ரசிப்பார்களே தவிர, அவர்கள் சொல்லும் எதையும் மகிந்த காதுகொடுத்து என்றுமே கேட்பதில்லை. ஆக இதுவே இப்படியிருக்க எப்படி எம் நெடுங்கால இனப்பிரச்சனைக்குத் தீர்வு தருவார்கலேன்று நாம் நம்பிக்கொண்டிருப்போம்? அதையும் மீறி நேர்மையான தீர்வுக்காக இனச்சிக்களிலுள்ள நேரிய, நெடிய முடிச்சுக்களை அவிழ்த்து அனைவரையும் சமமாக நடத்தி, நாட்டில் எமக்கும் முழுச்சுதந்திரத்தினையும் இவர்கள் தருவார்களென்று எம்மில் எவராவதொருவர் எண்ணுவாரெனின் அவர் ஒரு அரசியலறிவில் சூனியமானவறென்றே அர்த்தப்பிரவாகமாகும்.
தங்கள் தாயக சுதந்திரத்திற்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அதன் வீரியங்க்கொண்ட ஆயுதப் போராட்டமும் வீச்சாக வளர்ந்தது, தங்களுக்கு எந்த வகையில் வில்லங்கமென்று அறியாத போதிலும், சிறிலங்கா அரசின் ஆலோசணைக்கமைவாக அண்டப் பெருவெளியிலுள்ள நாடுகளிலெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரான தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தது. அதுமட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு "பயங்கரவாத" பட்டஞ்சூட்டி பாரிலியே ஒதுக்கி வைத்தது இந்த பாழ்பட்ட உலகம். உண்மையிலேயே இந்தப் போராட்டம் பயங்கரவாதமென்றாலும் அந்தப் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்க்கு யார் காரணம்? ஆயுதந்தாங்கிய இந்தப் போராட்டம் எதனால், எப்படி உருவானது? என்பதை ஆராயத் தவறிவிட்டார்கள் இந்த மேதாவிகள்.
பயங்கரவாதம் என்றால் என்ன? பயங்கரவாதம் எவ்வாறு தோற்றம் பெறுகிறது? என்பதை எள்முனை அளவுகூட இவர்கள் அறியாததா என்ன, உலத்தின் நீதிகளையும் நெறிமுறைகள் எல்லாவற்றையும் உருவாக்க அறிந்த இந்த அறிஞ்ஞர்களால், இதைப்பற்றியறிய முடியாமல் போயிற்றா? எங்களின் பயங்கரவாதம் பற்றியும் நன்கு அறிந்தவார்கள் அவர்கள். ஆயினும் ஏனோ இன்று வரை மௌனமாக இருந்து வருகின்றனர். எனக்கும் இதைப்பற்றி தெரியாதது. ஏதோ ஒரு உளவியல் நூலில் பயங்கரவாதத்தின் தோற்றம் பற்றி அன்றோருநாள் வாசித்த ஞாபகமிருக்கிறது. தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் அல்லது ஒரு சமூக மக்களின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று பிரபல உளவியல் நிபுணர் சர்த்தர் இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பே வரையறை செய்து விட்டார். ஆக பயங்கரவாதமென்று இவர்களால் வர்ணிக்கப்படும் இந்த ஆயுதப்போராட்டம் பிரபாகரனென்ற தனியொரு மனிதனாலோ, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற குறிப்பிட்ட இயக்கக்குழுவினாலோ முன்னெடுக்கப் படவில்லை. ஒட்டுமொத்த தமிழர் தரப்பின் ஆதங்கமாகவே இந்த ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. ஒட்டுமொத்த தமிழர் தரப்பின் அரசியல் அபிலாசையாகவே, அவர்களின் குரலாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் ஒலித்தது, இன்றும் ஒலிக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இவர்களின் எண்ணத்தில், இந்த பயங்கரவாதச் சூத்திரத்தின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால் ஒட்டுமொத்த தமிழர்களும் பயங்கரவாதிகள் தான். இதில் எவருக்கும் எள்ளளவேனும் எந்தச் சந்தேகமுமில்லை. ஏனெனில் தமிழ் மக்களிலிருந்து தான் புலிகள் பிறப்பெடுத்தார்கள்.
முப்பது வருடமாக முனைப்புப் பெற்று நீண்ட இந்த ஆயுதப்போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் விலைமதிக்க முடியாத எத்தனையோ அர்ப்பணிப்புக்களை, எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை தாயக விடுதலைக்காக இழந்திருக்கிறார்கள். கெரில்லாப் போர் முறையில் ஆரம்பித்த போராட்டம் தரைப்படை, கடற்ப்புலிப்படை, வான்புலிப்படை என மரபு ரீதியில் வளர்ந்து, பல வீரசாதனைகளையும் சாதித்தது உலகப் போரியல் வரலாற்றிலேயும் தடங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஐந்து, ஆறு வருடத்துக்கு ஒரு முறை ஆட்சிக்கு வரும் தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு அவ்வப்போது அரசியல் ரீதியில் தீர்வுகாண்பதறக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஆர்வம் காட்டினார்கள். திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையான பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தது இதற்க்கான சான்றுகள். தாங்கள் தனியவே ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆயுத மோகங்கொண்ட வன்முறையாளர்கள் அல்லர் என்பதை எண்ணற்ற தடவைகள் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து இரண்டாயிரத்தின் நடுப்பகுதி வரையான இருபது வருடங்களுக்கு மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தது இதற்க்கு சிறந்த சான்றாகும். அத்தோடு விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக முன்னிறுத்தி, விடுதலைப் புலிகளின் தலைமையையே தமிழ்த் தேசியத்தின் தலைமையாகக் ஏற்றுக்கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நின்று போட்டியிட்ட போது, தமிழ் மக்களால் அது அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு தமிழர் தாயகத்தில் அதிகப் பெரும்பாண்மை ஆசனங்கள் வழங்கப்பட்டது. ஆக ஜனநாயக ரீதியாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர் தரப்பு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. தமிழீழ தேசம், தமிழ்த் தேசியம், தமிழீழ தேசியத் தலைவர் என்ற கட்டமைப்புக்குள் முப்பது வருடமாக இந்த வாழ்வோடு ஒத்துப்போய் விட்டார்கள். தமிழினத்தின் வியத்தகு வீரனாக, இனத்தின் விடுதலை ஆன்மாவாக, தமிழினத்தின் மீட்பராகத் தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை. புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துப் பார்த்துக் கருத்துச் சொல்லும் எவருமே தமிழினத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐ நா சபையும் சரி இல்லை அண்டத்தையாளும் அதிகாரிகள் எவராயினும் சரி விதிவிலக்காக முடியாது.
ஆனாலும் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையையும், அவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் தென்னிலங்கை ஜனநாயகப் பிதாமகர்களும், தென்னிலங்கை இனவாதக் கும்பல்களும் என்றுமே மதித்தது மரியாதை செய்ததுமில்லை, அதைப் புரிந்து கொள்ள முயற்ச்சித்ததுமில்லை. மாறாக போராட்டங்களின் தலைமைகளை அழித்து, போராட்டங்களை நசுக்கித் தமிழ் மக்களை அடிமைகொள்ளவே அறுபது வருடமாக அரும்பாடுபட்டு வந்தது, அதை இன்றைய காலத்தில் நிறைவேற்றியதாக மார்தட்டிக் கொள்கின்றது. கொழும்பிலிருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெளநாட்டு மகான்களும், மனிதாபிமானம், மனித உரிமைகள் பற்றி மார்பு நிமிர்த்திப் பேசும் மனிதநேயம் மிக்க மாந்தர்களும் மணவறைச்சிரிப்புடன் மௌனமாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு எங்களின் பிரச்சனைகள் தெரியாததல்ல. எனினும் இதை உள் நாட்டுப் பிரச்சனையயென்று சிறிலங்கா அரசு பூசிய முலாமினை அவர்களால் சீண்ட முடியவில்லை. எங்களை அணுகி அரவணைக்க சிறிலங்கா அரசின் இறையாண்மையென்ற திரைச்சீலை முட்டுக்கட்டையாகவிருந்து தங்களை மறைப்பதாக மறைமுகமாக அவ்வப்போது முனுமுனுத்தனர்.
2006ம் ஆண்டு ஆவணி மாதம் சிறிலங்கா இராணுவ இயந்திரம், தங்கள் அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகி, தென்தமிழீழம் சம்பூரிலிருந்து தமிழின அழிப்பினை ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக நீண்ட அந்தச் சமரில் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்க்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினை முற்றாக விட்டுவிட்டுப் பின்வாங்கினர். உத்தியோக பூர்வமாகத் தென்தமிழீழத்தின் ஆதிக்கத்தை இழந்து வடதமிழீழத்திலேயே தங்கள் முழுக்கவனத்தினையும் செலுத்தி வந்தனர். கிழக்கின் உதயதயமென்று சொல்லி அதிலேயே கிறங்கிப் போயிருந்த அரச தரப்பினர் 2008ம் ஆண்டு முற்பகுதியிலேயே வடக்கின் வசந்தத்தைக் காண்பதறக்காண ஆரம்ப கட்ட வேலையில் முனைந்தனர்.
இங்கே நடந்து முடிந்ததாகச் சிறிலங்கா சொல்லும் போரினைப்பற்றி பேசுவது எம் நோக்கமல்ல. அது பற்றிப் படைத்துறை நிபுணர்களாலேயே ஆராய்ந்து பதில் கூறமுடியாது விளிபிதுங்கி நிற்க்க, அதற்க்குள் மூக்கை நுளைத்து, விவஸ்த்தைப்பட நான் விரும்பவில்லை. சில வேளைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்ரேலின் போர் முறையைக் கையாளலாம். இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கெதிரான போரில் வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த சக்தியால், இஸ்ரேல் ஒருமுறை முற்றாகத் தோற்கடிக்கப்பட்டது. எனினும் இஸ்ரேலின் வீரர்கள் எதிரி நாடுகளுக்குள் ஊடுருவி, அந்தந்த நாட்டின் வானூர்திகளைக் கொண்டே அதிரடியாக அந்த நாடுகளைத் தாக்கினர். இதை நான் வாய்யாலத்திற்க்காகச் சொல்லவில்லை, இது வரலாறு. இதையொத்த அதிரடித் தாக்குதல்களை எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளால் நடத்தக்கூடும். இதற்க்கு வலுவாக சிறிலங்காவின் இராணுவத் தளபதியே கருத்துச் சொல்லியிருக்கிறார், விடுதலைப் புலிகள் சிறு குழுக்களாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிடுவார்களே தவிர, இனி அவர்களால் முன்னையதைப் போல தாக்குதல் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். ஆக தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லையென்று அவரே ஒத்துக்கொள்கிறார் போலும். அவரின் அந்தக் கருத்தை ஏற்பதும், நிராகரிப்பதும் உங்கள் தெரிவு. விடுதலைப் புலிகளின் பலமும் இதுதான், அடுத்தவரால் ஆய்வு செய்து கணக்கிட முடியாதது தான்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு அன்றிலிருந்து இன்று வரை அரச தரப்பினர் கவர்ச்சிகரமான பெயர்களைச் சூட்டுவது வழக்கம். (Operation Liberation) ஒப்பறேஷன் லிபறேஷன் தொடக்கம், சந்திரிகா அம்மையாரின் காலத்தில் சமாதானத்திற்க்கான யுத்தமென நீண்டு, இப்போ மனிதாபிமான யுத்தமென நிற்க்கிறது. வடக்கிலே சிறிலங்கா இராணுவ இயந்திரம் மன்னாரில் போரினைத் தொடங்கிய போது, தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்து சென்றது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்க்கே. மாறாக அவர்கள் இந்த அரச இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்க்கு செல்லவில்லை. தொடர்ந்து இராணுவம் முன்னேறி வரவர தள்ளித்தள்ளி இந்த மனிதக் கேடயங்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்றார்களே தவிர ஏனைய இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்க்கு விரும்பி செல்லவில்லை. ஆக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமே தமிழர் தரப்பு தங்களுக்குப் பாதுகாப்பான இடமென ஏற்றுக்கொண்டு அங்கு இடம்பெயர்ந்து.
இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஏழு ஆசியநாடுகளின் முழுப்படைபல ஆதரவுடனும், இராணுவத் தளபாட வளங்கல் சேவை ஒப்பந்தத்துடனும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற ஆதிக்க சக்திகளின் ஆசீர்வாதத்துடன் அரங்கேறிய இனப்படுகொலை யுத்தம் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இந்த மாதத்தில் முற்றுப் பெற்றதாகச் சிறிலங்கா அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றிலிருந்து இன்று வரை தமிழருக்கெதிரான போரில் எத்தனையோ தமிழ் உயிர்களை அரச பயங்கரவாதம் பலியெடுத்த போது ஏறெடுத்துப் பார்த்து, ஏனென்று கேட்காத இந்தக் கேடுகெட்ட உலகத்தினர் திடீரென்று இப்போது வெளிப்பட்டு வந்து விடுதலைப் புலிகளை மட்டும் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், மக்களை மனிதக் கேடயமாகப் பாவிக்கிறார்கள் என்று வாய்க்கு வந்தபடி வெளுத்து வாங்குகிறார்கள். தமிழர்களிடம் சுயாதீனமாக எந்தக் கருத்தையும் கேட்காமல், அவர்களின் அபிலாஷையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீதே மிக மோசமான கருத்து வன்முறையைப் பிரயோகித்து இந்த முப்பது வருட கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான, கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.
சிறிலங்கா அறிவித்தது போல உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக சிறிலங்கா இராணுவம் தோற்கடித்துவிட்டதா? தொடர்ந்து தாயக சுதந்திரத்திற்க்கான போர் இனி நீளாதா? இந்தப் போர் இத்தோடு நசுக்கப்பட்டு விட்டதா? என்ற நெஞ்சு கனத்த கேள்விகள் தான் இப்பொழுது ஈழத்தமிழரின் வாய்களிலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் எம்முறவுகள் மட்டுமின்றி தமிழக தொப்பூள் கொடியுறவுகளும், தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகளிலும் வாழும் தமிழர்களின் உணர்வும், உந்துணையும் இதுதான். இந்த கேடுகெட்ட உலகத்தால் ஈழத்தமிழ்ச் சாதி வஞ்சிக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது இப்பொழுது.
தமிழீழத் தமிழர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் எல்லாப் பொறுப்பினையும் புலிகளின் தலையில் போட்டுவிட்டுத் தாங்கள் ஒதுங்கி இருந்துவிட்டனர். தலைவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார்; பொடியங்கள் விடமாட்டாங்கள், புலிகள் அடிப்பாங்கள் என்ற விளாசல் விமர்சனத்தோடு அவர்கள் பொறுப்பில்லாமல் இருந்துவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் போராடித் தமிழீழம் பெற்றுத்தருவார்கள் தானே என்ற உண்மையான அதீத நம்பிக்கையுன் இருந்துவிட்டனரே தவிர வேறொன்றுமில்லை.
இப்பொழுது எங்களின் இந்த இனப்பிரச்சனை பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் விவாதித்துப் பேசும் நிலை நீண்ட காலத்தில் கனிந்திருக்கிறது. புலம்பெயர் தமிழர்களால் இடைவிடாதகவனயீர்ப்புப் போராட்டங்களால் அந்தந்த நாட்டின் அரசுகள் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளனர். கடந்த 25ம், 26ம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்கான அமர்வில் சிறிலங்காவைப் பற்றியும் பேசப்பட்டது. 25ம் நாளில் தொடங்கிய விவாதம், 26ம் நாள் வரை நீடித்தது. சிறிலங்கா அரசு சார்பாகவும், சுவிற்சிலாந்து அரசு சார்பாகவும் இரு பிரேரணைகள் சபைக்குக் கொடுக்கப்பட்டிருந்து. சிறிலங்கா அரசு சார்பான பிரேரணை விவாதத்திறக்கு வந்ததும், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 17 நாடுகளும் வாக்களித்தனர். எதற்க்குமே வாக்களிக்காமல் 07 நாடுகள் மௌனம் சாதித்தனர். பின்னர் சிறிலங்கா அரசின் வேண்டுகோளான நிதியுதவிக்கு 13 ஆசிய நாடுகளினதும், 13 ஆபிரிக்க நாடுகளினதும், கியூபா போன்ற நாடுகளினதும் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களிக்குகளால் வெற்றிபெற்றது. இதற்க்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோ, ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் இதற்க்கும் மௌனம் சாதித்தனர். இந்த மௌனத்தில் யப்பானும் உள்ளடங்கலென்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். சுவிற்சிலாந்து அரசின் பிரேரணையும் சிறிலங்காவினைப் பற்றியாகவே இருந்தது. சபையின் ஒழுங்கின்படி ஒரு நாட்டினைப்பற்றி விவாதத்திற்க்கு ஒரு தடவையே இடமளிப்பதால் சுவிற்சிலாந்து அரசின் பிரேரணை சபையில் விவாதத்திற்க்கு எடுக்கப்படவில்லை. சுவிற்சிலாந்து அரசின் பிரேரணை தமிழர் தரப்புக்குச் சார்பானாதாக சிலர் எண்ணக் கூடும். அது முற்றிலும் தவறானது. சிறிலங்கா அரசின் பிரேரணையும் சுவிற்சிலாந்து அரசின் பிரேரணையும் சில வேற்றுமைகளே தவிர, பல ஒற்றுமைகளும், பல ஒத்த கருத்துக்களும் இருந்தது என்பதே உண்மை. இதில் எங்குமே தமிழர் தரப்பு, போர்க்குற்றம், இனப்படுகொலை என்ற எந்த வார்த்தைப் பிரயோகமும் பயன்படுத்தப்படவில்லையென்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்றும், கிழக்கிலே உதயமுண்டாகி மீள் குடியேற்றம் முற்றாக முடிவுற்றாதாகவும் அண்டப்புழுகினை சிறிலங்கா தரப்பு அள்ளி விட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் இப்பொழுது இந்தத் தீர்மானம் எம்பக்கமாக வெற்றி பெறாது நாம் தோற்றுப்போனாலும், அடுத்தடுத்த பிரேரணைகளில் என்றோ ஒரு நாள் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஐக்கிய நாடுகள் சபை நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றமில்லை, ஒருதரத்தோடு தீர்ப்புக கூறி வழக்கை முடித்துவிடுவதற்கு. இத்தோடு எல்லாம் முடிவடைந்ததென்று நாம் சலித்துவிடக் கூடாது. ஏனெனில் எங்கோ ஒரு மூலையிலுள்ள முல்லைத்தீவு, முள்ளியவளையில் நடந்த போரினைப்பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் இப்பொழுது பேசும் நிலை வந்திருக்கிறது. உள் நாட்டுப் பிரச்சனையென்று சிறிலங்கா அரசு பூசிய முலாமினை மீறி, சிறிலங்கா அரசு கட்டிய இறையாண்மையென்ற திரைச்சீலையை நீக்கி பாரிலுள்ளவர்கள் இப்போ எம்மைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் திருவாய் திறந்து ஏதோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பிரபலமான உலக ஊடகங்களும் தங்கள் மூடிய கண்களைத் திறந்து பார்க்கிறார்கள், நெடுநாள் அமைதியைக் கலைத்து செய்மதி மூலம் எடுத்த புகைப்படங்களை, காணொளிகளை வெளியிட முனைகிறார்கள். இது சர்வதேச ரீதியான போராட்டத்தின் ஆரம்பமே. இதற்க்கெல்லாம் காரணம் புலம்பெயர் எம்முறவுகளால் முன்னெடுக்கப்படும் இடைவிடாத கவனயீர்ப்புப் போராட்டங்களேயன்றி வேறொன்றுமில்லை.
எது எவ்வாறாயினும் தந்திரங்களையும், தலைமோதும் தடைகளையும் தகர்த்து எம் பொன்னான தாயகமான சுதந்திர தமிழீழத்தினை பெற்றெடுக்கும் வரை நாமெல்லோரும் ஒன்றுசேர்ந்து எம் சக்திக்கேற்ப ஓயாது தொடர்ந்தும் போராடுவோமாக.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மறுபடியும் வெல்லும்”
தாயகத்திலிருந்து,
கவே.கரிகாலன்.
Comments