இறுதித்தாக்குதலின் பின் பான் கீ மூன் போவதற்கு காத்திருப்பாரானால் அது மரண வலயத்திற்கான பயணமாக இருக்கும் ‐ இன்னர் சிற்றி பிரஸ்


ஐ.நா.வில் இலங்கை தொடர்பான அமர்வு இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளபோதும் அது பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டதாக அமையாது என்று ஐ.நா.விலுள்ள ரஷ்யத் தூதுவர் விராலி சேர்க்கின் தெரிவித்திருக்கிறார்.

கடந்த காலங்களில் போன்று ஐ.நா.வின் அடித்தளத்திலேயே இன்றைய அமர்வும் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆராயப்படவிருப்பதாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகின்ற உத்தியோகபற்றற்ற ஒன்று கூடல்களின் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதால், உடனடியாக உத்தியோக பூர்வமாக பாதுகாப்பு சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என நான்கு சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்த குழு, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பாதுகாப்புக்கான பூகோள மையம் ஆகிய அமைப்புகளே இந்த வலியுறுத்தலை மேற்கொண்டிருந்தன. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோதே ரஸ்யத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டுமா என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இருவேறுபட்ட அபிப்பிராயங்கள் காணப்படுவதாக பான் கீ மூனின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இன்னர் சிற்றி பிரஸுக்கு கூறியுள்ளார்.

தூசிகள் அடங்கிய பின்னரே பான் கீ மூன் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் சிந்திப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட நடவடிக்கையை குறிப்பிட்டதாக தோன்றுகிறது. பான் கீ மூனின் அலுவலகம் ஏனைய தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரிட்டிஷ் தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

வெளியேற விரும்பும் பொது மக்களை புலிகள் அனுமதிக்க வேண்டுமென அவர்களை வலியுறுத்துமாறு பிரிட்டிஷ் தமிழர்களை பான் கீ மூனின் அலுவலகம் கேட்கிறது. அவர்களால் இவ்வாறு செய்ய முடியாது என்று பான் கீ மூனின் ஆலோசகர் கூறியுள்ளார்.

இறுதித்தாக்குதல் நடைபெற்றபின் பான் கீ மூன் போவதற்கு காத்திருப்பாரானால் அந்தப் பயணமானது மரண வலயத்திற்கான பயணமாக இருக்கும் என்று இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது. இதனை ஆலோசகர் ஏற்றுக் கொண்டார்.

மக்கள் 5 வருடங்களுக்கு இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். தாங்கள் நிதிவசதியளிக்கும் முகாம்கள் இனவதை முகாம்களென ஐ.நா. அறிந்தால் சிலசமயம் மாற்றம் தேவைப்படும் என்று சிலர் கூறுகின்றனர். பான் இப்போது போக வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஊடகங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் மோதல் வலயத்திற்குள் செல்வதற்கான வலியுறுத்தலை விடுவிக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டிருக்கக்கூடும் என்பது தொடர்பாக ஐ.நா. ஆலோசகர் கூறியுள்ளார். மோதல் வலயத்திற்குள் விமான மார்க்கமாக உணவுப் பொருட்களைப் போடுமாறு பிரிட்டிஷ் தமிழர்கள் அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், கௌபோய் (அமெரிக்க ஹொலிவூட் திரைப்படங்களில வரும் சாகசக்கார இளைஞன்) போன்று ஐ.நா. செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வில் ரஷ்யத்தூதரகத்தில் இலங்கை விடயம் தொடர்பாக மனித உரிமைக்குழுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. வட இலங்கை அனர்த்தமானது சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் ஏன் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று அவர்கள் முன்வைத்த நியாயத்தை ரஷ்யாவின் துணை நிரந்தரப்பிரதிநிதி ஆச்சரியத்துடன் கேட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவொரு தீவு என்றும் கப்பல்களில் வெளியேற முயற்சிக்கும் மக்கள் இறப்பதாகவும் இது அச்சுறுத்தல் அல்ல என்று அர்த்தப்படுத்தக்கூடாது என்றும் மனித உரிமை குழுக்கள் கூறியுள்ளன. இக்குழுக்கள் சீனாவையும் சந்திக்கவுள்ளன.

அடிக்குறிப்பு:
ஐ.நா.வில் வெள்ளிக்கிழமை ஜப்பானியத் தூதரகம் முன்னால் தமிழர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஜப்பானுக்கு வெட்கம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

இலங்கை அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஜப்பானியத் தூதுவர் யசூசி அகாசி உறுதியளித்துள்ளார்.

Comments