இந்தியப் புலனாய்வு வலையமைப்பின் தீவிர செயற்பாடுகள் உலகெங்கும் விரிந்து செல்கிறது. இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அடுத்ததாக, இலங்கை விவகாரத்திலேயே இந்தியாவின் கரிசனை அதிகளவில் காணப்படுகிறது.
இந்திய அமைதிப் படைக் காலத்தில், துணைக் குழுக்களோடு, தமிழர் கூட்டணியை இணைத்து, புதிய தமிழ் தலைமையொன்றினை உருவாக்க, "றோ' மேற்கொண்ட சதிகளை இன்றைய நிலைவரத்தோடு ஒப்பீடு செய்யலாம்.
தமிழ் அரசியல் களத்திலிருந்து விடுதலைப் புலிகளின் வகிபாகம் முற்றாக அகற்றப்படும் நிலை ஏற்படப்போவதால், தமது அனுசரணையோடு புதிய அவதாரம் எடுத்தால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் இருப்பு தக்க வைக்கப்படுமென்பதே இந்திய அரசியல் விஞ்ஞானிகளின் அறிவுரையாக இருக்கிறது.
ஆனாலும், இந்திய இலங்கை ஒப்பந்த காலப்பகுதியில் இல்லாததொரு சர்வதேச தலையீட்டு நிலைமை இன்று உருவாகி இருப்பதை கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கில் வசந்தத்தை உருவாக்க, கூட்டமைப்பின் ஆதரவு இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அதேவேளை கூட்டமைப்பில் ஏற்படும் விரிசல், மே 13 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில், காங்கிரஸிற்குச் சார்பான தொரு நிலையினை தோற்றுவிக்குமெனவும் மத்திய ஆட்சியினர் கருதுகிறார்கள்.
கூட்டமைப்புக் குழப்பம், சிறிய மாறுதல்களை இலங்கை அரசியல் தளத்தில் ஏற்படுத்தினாலும், சர்வதேச மயப்பட்ட இனப்பிரச்சினையே பாரிய மாற்றங்களை உருவாக்கும்.
சுவீடனின் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட்டின் விஜயத்தை இலங்கை நிராகரித்த விடயம், ஐரோப்பிய ஒன்றியப் பார்வையில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
அத்தோடு வவுனியா சென்று திரும்பிய டேவிட் மிலிபான்ட், பேர்னாட் குச்னர், ஜோன் ஹோம்ஸ் போன்றோர் விடுத்த அறிக்கைகள் அரசின் போர் நிலைப்பாட்டிற்குச் சாதகமாக அமையவில்லை.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கருத்துத் தெரிவிக்கும் அதேவேளை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தை இலங்கை நடத்துவதாக ஐ.நா. சபைக்கான பிரித்தானிய பிரதிநிதி, எதிர் நிலைக்கருத்தொன்றை முன்வைக்கிறார்.
ஒரே குரலில், தீர்மானமொன்று முன்னெடுக்கப்படும் வரை, உறுப்பு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென,
காலத்தை இழுத்தடிக்கும் வகையில் பிரித்தானிய பிரதிநிதியின் விளக்கம் அமைகிறது.
அதாவது தொடர்ச்சியாக பிரகடனம் செய்யப்படும் மூன்று நாள், ஐந்து நாள் காலக்கெடுவிற்கு ஏற்ற வகையில் மேற்குலகம் தாளம் போடுகிறது.
மேற்குலகு வழங்கும் பயங்கரவாத ஒழிப்பிற்கான கால அவகாசம், ஒரு இனத்தையே அழித்து விடுமென்பதை சர்வதேசம் புரிய மறுக்கிறது.
1956 இலிருந்து இற்றைவரை பேரினவாதம் முன்னெடுக்கும் தமிழின அழிப்பினை கருத்தில் கொள்ள விரும்பாத சர்வதேசம், ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட வேண்டுமென்பதில் முனைப்பாக இருக்கிறது.
நவீன காலனித்துவ மனோபாவத்திலிருந்து, இவர்கள் இன்னும் விடுபட வில்லையென்பதை புரிந்து கொண்டால் இரட்டை வேடமிடும் சர்வதேசத்தின் புவிசார் நலனையும் தெரிந்து கொள்ளலாம்.
கூட்டுப் படுகொலைகளோடு, அழிக்கப்படும் தமிழர் பண்பாட்டு, கலாசார விழுமியங்களும்,வாழ்வாதாரச் சொத்தழிவுகளும், அப்பட்டமான இனப்படுகொலை என்கிற வரையறைக்குள் உள்ளடக்கப்படுவதை இந்த சர்வதேசம் இனங்காண மறுக்கிறது.
அவ்வகையான கள யதார்த்த மறுப்புகளே, இவர்களின் பிராந்திய கேந்திர நலன்களை உறுதிப்படுத்துமென நம்புகிறார்கள்.
அமெரிக்கப் பேராசிரியர் பிரான்சிஸ் போயில் கூறும், வன்னி மக்களுக்கு உணவுப் பொட்டலம் போடும் வேண்டுகோளையோ அல்லது ஐ.நா. தொண்டர் நிறுவனங்கள் யுத்த வலயத்துள் சென்று உதவி புரிய வேண்டுமென ஜோன் ஹோம்ஸ் விடுக்கும் அவசர மனிதாபிமான கோரிக்கைகளையோ, இந்த உலக மகா சக்திகள் ஏன் செவிமடுக்க மறுக்கின்றன என்கிற விடயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வெள்ளைத் தோல்கள் அழுத்திக் கூறினாலும், போரை நிறுத்தமாட்டோமென்ற இறுக்கமான வெளிப்பாட்டிற்கு, இந்தியாவும் சீனாவும் பக்கபலமாக இருப்பதைத் தெரிந்து கொள்வதால், மிஞ்சிய பகுதியினை அரசு கைப்பற்றும் வரை, அறிக்கைப் போரில் ஈடுபட்டு காலத்தைக் கடத்தலாமென மேற்குலகு முடிவெடுத்துள்ளது.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த பரமேஸ்வரனிற்கு, சில எழுத்து மூலமான வாக்குறுதிகளை பிரித்தானிய அரசு அளித்துள்ளது. அவர் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகளை தீவிர பரிசீலனைக்கு உட்படுத்துவதாக வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்து, போராட்டத்தை இடைநிறுத்தி, தனக்கு ஏற்படவிருந்த இராஜதந்திர சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுள்ளது.
ஆனாலும், முற்றுகைக்கு உள்ளான வன்னி மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. அதை நிறுத்துவதற்குரிய காத்திரமான நகர்வுகள் எதனையும் இந்த மேற்குலகம் மேற்கொள்ள வில்லையென்பதும் அப்பட்டமான உண்மை.
ஐ.நா. சபையின் பயிற்சி மற்றும் ஆய்வுகளிற்கான நிறுவனம் (க்Nஐகூஅகீ) கடந்த 27ஆம் திகதி வெளியிட்ட செய்மதிக் கோள் படங்கள், எறிகணை, வான் வெளித் தாக்குதல்களால் பாதுகாப்பு வலயமென்று அழைக்கப்படும் பகுதிகளில் ஏற்பட்ட குழிகளை அம்பலப்படுத்தியுள்ளன.
அழிக்கப்பட்ட நிரந்தர கட்டிடங்களை திகதி வாரியாக வேறுபடுத்திக் காட்டியது அந்த செய்மதிக் கோளின் கண்கள்.
பத்துப் பக்க அறிக்கையாக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், தவறுதலாக வெளியிடப்பட்டு, பின்னர் மூடப்பட்ட பாதுகாப்புச் சபை அறைக்குள், புதைக்கப்பட்ட இரகசியங்களான.
ஆனாலும், காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களை, இந்த யுனிடார் நிறுவனம் வழங்கிய செய்மதிப் படங்களின் துணையோடு, ஜனவரி 10ஆம் திகதி அம்பலப்படுத்தியது ஐ.நா.சபை. காஸா படங்களை வெளியிட்டதுபோன்று வன்னிப் படங்களை ஏன் ஐ.நா.சபைக்கு சமர்ப்பிக்க வில்லையென இன்னர் சிற்றி பிறஸ் ஊடகவியலாளர் தொடுத்த கேள்விக்கு பாதுகாப்புச்சபை கொடுத்த வியாக்கியானம் மிக வும் வேடிக்கையானது.
அதாவது அழிவுகளிற்கான மதிப்பீடுகளைச் செய்வதற்காக செய்மதிமூலம் எடுக்கப்பட்டபடங்கள், உதவியாக இருக்குமென்பதே ஐ.நா.பாதுகாப்புச் சபைப் பேச்சாளர் கொடுத்த விளக்கமாகும்.
ஆகவே இந்த செய்மதி ஆதாரங்களை, இனப்படுகொலைக்கு எதிராக, அமெரிக்காவில் வழக்குத் தொடுத்திருக்கும் புரூஸ் பெய்ன் பயன்படுத்தினாலும், யுத்தம் முடிவுற்றபின், நிர்மாணப் பணிகளுக்காக இவை பயன்படுத்தப்படப் போகிறதென்பதே உண்மையாகும். ஆதலால், சேகரிக்கப்படும் எல்லாத் தரவுகளும், அவல நிலை குறித்த தகவல்களும், போரை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாக எண்ணக் கூடாது.
இந்தியா நடத்தும் தமிழ் தேசிய விடுதலைக்கெதிரான யுத்தமும், ஐ.நா. பாதுகாப்புச்சபை வரை இவர்கள் நகர்த்தும் இராஜதந்திர போர்களும் மேற்குலகை அசையவிடாமல் கட்டுப்படுத்துகிறது. அதேவேளை சிவப்புச் சீனாவின் பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
தமிழ் நாட்டினூடாக இந்தியாவை நோக்கும் பார்வைக் குறைபாடு மாற்றமடையாமல், புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது.
- சி.இதயச்சந்திரன்-
Comments