இந்தக் கட்டத்தில் என் மதிப்பீடு என்னவென்றால், நிலைமை பதற்றமாக இருந்தாலும் அமைதியாக உள்ளது, ஆனால் அது எந்நேரமும் மோசமாகலாம் என்பதே. தீட்சித்துக்கும் பிரபா கரனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிந்தேன். செப்டம்பர் 25ஆம் நாள் அனைத்துப் படைத் தளபதி எனக்களித்த செய்தி: தூதர் (தீட்சித்) மறுநாள் பகல் 11 மணிக்கு பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறார்.
உடனடியாக பிரபாகரனிடம் என் செய்தியைச் சேர்ப்பிக்கச் சொல்லி ஊழியர் ஒருவரை அனுப்பி வைத்தேன். வழி நெடுக அவர் கண்ட காட்சி: இறுதிக் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த திலீபனைக் காண்பதற்காக மாதரும் சிறுமியரும் விளக்குகளும் பூக்களும் ஏந்தி நல்லூர் கோயிலை நோக்கி நீண்ட ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். மக்கள் பெரிதும் உணர்ச்சி வயப்பட்டு இந்தியாவுக்கு எதிராகவும் சிறீலங்காவுக்கு எதிராக வும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். 11 நாள் 58 மணித் துளிகள் பட்டினிக்குப் பின் செப்டம்பர் 26 காலை 10 மணிக்கு திலீபன் மறைந்தார். தீட்சித்தும் பிரபாகரனும் சந்திப்பதற்குக் குறித்த நேரத்துக்கு இரு மணித் துளிகள் முன்னதாக இந்த இறப்பு நிகழ்ந்தது. அப்போது பிரபா கரன் என் தலைமையகத்துக்கு வந்து கொண்டிருந்தார். புலிப் படையின் தூதுக் குழுவினரிடம் தூதர் நிபந்தனைகள் விதித்த நிலையில் இந்தச் சந்திப்பு முடிவேதும் எடுக்காமலே மாலை 3.30 மணியளவில் முடிந்து விட் டது. அடுத்த சந்திப்பு செப்டம் பர் 28இல் நடைபெறும் என்று பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.
திலீபன் இறந்த செய்தி தெரிந்தவுடன், கந்தசாமி கோயி லில் கூடியிருந்த மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்கியது. அரசுக்குச் சொந்தமான இரு பேருந்துகள் எரிக்கப்பட்டன. எல்லா முக்கிய இடங்களிலும் சாலைச் சந்திகளிலும் மக்கள் கூடி விட்டார்கள். தீட்சித்தும் பிரபாகரனும் சந்திக்க விருந்த இடத்திலிருந்து வெறும் நூறு கெஜம் தொலைவிலிருந்த இராணுவச் சாவடி அருகிலும் பெருங்கூட்டம் கூடிவிட்டது.
என் இராணுவக் காவல்துறை அதிகாரியால் கூட்டத்தைக் கலைந்து போகச் செய்ய முடிய வில்லை. யாழ்ப்பாண மக்கள் காவல் நிலையங் களை மறியல் செய்தார்கள். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமான தொடர்வண்டிச் சேவைகள் மறியல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசியல், அரசுறவியல் நிலையில் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் திலீபனின் சாவைத் தவிர்த்திருக்கலாம். திலீபன் இறப்புக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வையில் இந்திய அமைதிக் காப்புப் படை நம்பகத் தன்மையை இழந்தது.
விடுதலைப் புலிகளுக்கும் தீட்சித்துக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு பலாலியில் என் தலைமையகத்தில் செப்டெம்பர் 28ஆம் நாள் நடைபெற்றது. அமைதி குலைந்த நிலைமைகளால் பிரபாகரன் இந்தியப் படையின் வழிக்காவலை ஏற்கவில்லை. காலை 9 மணிக்கு அவர் வந்து சேர்ந்தார். தீட்சித் திறமையாகப் பேசி, சிரித்துக் கொண்டே விடுதலைப் புலிகளைச் சிறுமைப் படுத்த முயன்றார்.
விடுதலைப் புலிகள் திரிகோணமலையிலும் மட்டக்களப்பிலும் முல்லைத்தீவிலும் தங்கள் உறுப்பினர்கள் மூவர் மேற்கொண்டிருந்த பட்டினிப் போராட்டத்தைக் கைவிடச் சொல்வதற்கு உடன்பட்டனர். ஆனால் இடைக் கால அரசாங்கம் அமைக்கப்படுவதாக அதிபர் ஜெயவர்த்தனா அறிவிக்கும் வரை அறப் போராட்டம் தொடரும் என்று புலிப்படையின் உயர் தலைவர் சொல்லி விட்டார். பட்டினிப் போராட்டம் நடத்திய மூன்று புலிகளும் 1987 செப் டெம்பர் 28 / 29 இரவு 1 மணிக்கு வான்வழியே பலாலிக்குக் கொண்டுவரப்பட்டு புலிப்படையிடம் கையளிக்கப்பட்டனர். பலாலியிலிருந்து யாழ்ப் பாணம் செல்லும் பாதையை திலீபன் படங்கள் அணி செய்தன. நூறடிக்கு ஒரு மேடையமைத்து, அதிலும் திலீபன் படத்தை வைத்திருந்தனர்.
அக்டோபர் 2 அதிகாலை எனக்கு ஒரு செய்தி வந்தது: சிவப்புக் கோடுகளுடன் அமைந்த வெள்ளைச் சீருந்து ஒன்று திரிகோணமலை நகரக் கூடம் அருகே வந்து நின்று, அதற்குள் இருந்தவர்கள் இந்திய அமைதி காப்புப் படைச் சாவடி மீது சுட்டார்கள். இதில் 26 பஞ்சாப் படையணியைச் சேர்ந்த சிப்பாய் சோரக் ராம் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார். மற்றொரு சிப்பாய் காயங்க ளுற்றார். நான் திரிகோண மலைக்கு விரைந்தேன். எனக்குத் தெரிந்தவரை, இபிஆர்எல்எஃப் இயக்கமோ சிறீலங்கா ஊர்க் காவல் படையினரோ தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தச் சீருந்து பிரெடெரிக் கோட்டைக்குள் நுழையக் கண்டுள்ளனர். சிறீலங்கா படையினர் உடன்படிக்கையை மீறியதாக அப்படையின் கூட்டு நடவடிக்கைத் தலைமையின் பொதுக் கட்டளைத் தளபதியிடம் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. பிறகு நான் யாழ்ப்பாணம் திரும்பி பிரபாகரனைச் சந்தித்தேன். நாங்கள் ஒருவருக்கொருவர் தசரா வாழ்த்துச் சொல்லிக் கொண்டோம்.
(ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைத் தளபதிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் அர்கிரத் சிங் எழுதிய ‘சிறிலங்காவில் தலையீடூ’ நூல்- Maj.Gen.Harhirat Singh (Retd.) Intervention in Sri Lanka – The IPKF Experience Retold, 2007. Ajay Kumar Jain for Manohar Publishers & Distributors, 4753/23, Ansari Road, Daryaganj, New Delhi. Price : Rs.545)
Comments