ஊசலாடும் உயிரைத் தவிர அனைத்தையும் முழுவதுமாக இழந்து ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் இந்த மக்களின் பூர்வீக விவசாயப் பாரம்பரியம் தெரிந்தவர்களுக்கு, இவர்களது இன்றைய நிலைமை எவ்வளவு துயரமானது என்பது புரியும்.
எப்போதுமே பல மாதங்களுக்குத் தேவையான நெல் மூட்டைகளை வீடுகளில் குவித்து வைத்து, அயலவர்களுக்கும், சொந்தங்களுக்கும் வேண்டியளவு வழங்கி வளமாக வாழ்ந்து வந்த இவர்கள், இப்போது ஒரு சோற்றுப் பார்சலுக்குக் கையேந்தும் நிர்ப்பந்தத்துக்க உள்ளாகியுள்ளனர்.
எப்போது, எந்த வேளையில், எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர்கள், இப்போது யாராவது கொண்டுவரும் ஒரு பார்சல் சோற்றுக்குக் காத்திருக்கிறார்கள்.
விவசாய பூமியின் பாரம்பரிய வாழ்க்கை மரபுகளோடு ஒன்றி, கூட்டு வாழ்க்கையின் ஆதரவும், அன்பும், உபசரிப்பும் பொங்க வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். சொத்துச் சேர்ப்பதிலும், சுகபோக வாழ்க்கையிலும் அதிக நாட்டம் கொள்ளாவிட்டாலும், தேவையான வளங்களுடன் திருப்தியாக வாழ்ந்தவர்கள்.
வந்தாரை வாழவைத்த பூமி
வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் குடிகள் தவிர, யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து காலத்துக்குக் காலம் வந்து குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தவர்களையும் இந்த மண் தன்னோடு அரவணைத்து வைத்திருந்தது. 1995-96 களில் யாழ் குடாநாட்டின் மீது ரிவிரச படையெடுப்பினால் இடம்பெயர்க்கப்பட்டு சுமார் ஐந்து இலட்சம் குடாநாட்டு மக்கள் இங்கு அடைக்கலம் புகுந்தபோது, பெருந்தொகை மக்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் அடிப்படைக் கட்டுமான வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும், வன்னியின் பரந்த நிலப்பரப்பு அவர்கள் வந்தமர தாராளமாக இடம் தந்து, வாழ்வளித்தது.
1997 மே இல் ஆரம்பித்த ஜெயசிக்குறு படை நடவடிக்கை வன்னி நிலப்பரப்பை கடுமையாக உலுப்பியபோது வன்னி மக்கள் மோசமான இன்னல்களுக்கு முகம்கொடுத்தபோதும், பின்னர் சுதாரித்துக்கொண்டார்கள்.
2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை நீண்ட காலத்துக்குப் பின்னர் வன்னிக்கு ஒரு மூச்சுவிடும் சந்தர்ப்பத்தைத் தந்தது. எனினும், புதுக்கோலம் பூண்ட ஏ-9 வீதியால், புளியங்குளம் முதல், முகமாலை வரையில் வரிப்பணத்தை வீசியெறிந்துவிட்டுப் பறந்த வாகனங்கள் யாழ்ப்பாணத்துக்கும், தென்பகுதிக்கும் செய்தளவு நன்மைகளை வன்னிக்குச் செய்திருக்கவில்லை. ஏ-9 வீதியில் சொகுசு வாகனங்கள் பறந்துகொண்டிருக்க, வன்னியின் குறுக்கு வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் மக்களின் பயணங்கள் வழமையைவிட சிறிதளவே முன்னேற்றம் கண்டிருந்தது. எனினும், எதற்கும் அதிகம் ஆசைப்படாத வன்னியின் மைந்தர்கள் அமைதியாகத் தமது வழமையான வாழ்வைத் தொடர்ந்தனர்.
பேரிடி
போர்நிறுத்த உடன்படிக்கைப் பொற்காலம் ஓய்ந்து மீண்டும் போர் மூண்டு, முழுச் சுற்றிவளைப்புக்கு உள்ளானபோது, வன்னி மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கியது. பெருநிலப்பரப்பு படிப்படியாகச் சுருங்கி, மன்னார் முதல் பூநகரியையும் கடந்து, பரந்தனையும் தாண்டி நிலைமை மோசமடைந்தபோது, வன்னி மக்கள் மேலும் அவலங்களைச் சந்திக்கத் தொடங்கினர். இறுதியில் அது புதுக்குடியிருப்பையும் தாண்டி புதுமாத்தளானை நெருங்கும் வரையில் அந்த மக்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். புதுமாத்தளான் முதல் வெள்ளமுள்ளிவாய்க்கால் வரையிலான சுமார் 300 மீற்றர் முதல் ஒரு கிலோமீற்றர் வரையிலான ஒடுங்கிய, 12 கிலோமீற்றர் நீளமான பிரதேசத்துக்குள் மூன்று இலட்சம் மக்கள் வரையில் அடைக்கலம் புகுந்தனர். இங்கு இந்த மக்கள் பட்ட துயரங்களை இன்னமும் முழுமையாக வெளியுலகு அறியவில்லை.
மிக நெருக்கமாக மந்தைகளைப்போல் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள், பசி, பட்டினி, நோய், காயம், மரணங்கள், பிள்ளை பறிப்பு என்று நீண்டுசென்ற துன்பங்களைத் தொடர்ச்சியாக அனுபவித்தனர். இதற்குமேல் தாக்குபிடிக்க முடியாது என்ற நிலையில் அங்கிருந்து வெளியேற முற்பட்டவர்களும், பெரும்பாலும் தமது முயற்சிகள் தோல்வியுற்றுச் சோர்ந்துபோயினர்.
கெட்டித்தனமாகத் தப்பிப்பிளைத்த சில ஆயிரம் பேர் மட்டும் அங்கிருந்து வெளியேறிவிட, எஞ்சியோர் தொடர்ந்தும் பெரும் அவலங்களுக்கு முகம் கொடுத்தபடி அங்கு வாழ்ந்துவந்தனர்.
ஏப்ரல் 20இல் இந்தப் பகுதிக்குள் இராணுவம் நுழைந்தபோது, எல்லாப் பக்கமும் சீறிவந்த துப்பாக்கிச் சூடுகளையும், குண்டுகளையும் பொருட்படுத்தாமல், 'பிழைத்தால் வாழ்க்கை இல்லாவிட்டால் மரணம்' என்ற உணர்வுடன் அவர்கள் நிம்மதி தேடி 'மறுபுறத்து'க்கு ஓடிவந்தனர்.
ஒன்றரை வருடங்களுக்கும் மேலான இடப்பெயர்வு வாழ்க்கையில் எல்லாவிதமான துயரங்களையும் அனுபவித்துக் களைத்து, உடல் சுருங்கி, மெய் வருந்தி வெறும் சக்கையாகிப்போய் நடைபிணங்களாகவே, குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் என்று பெருந்தொகையானவர்கள் வவுனியாவில் அடைக்கலம் புகுந்தனர்.
தண்ணீர்! தண்ணீர்!!
சித்திரை 20-24ம் திகதிக்குள் வவுனியாவுக்கு வந்த இந்த மக்கள், குடிப்பதற்குத் தண்ணீரே இல்லாமல் தாகத்தினாலும், நாட்கணக்காகச் சாப்பிடாத சோர்வாலும் தவித்தார்கள். வெறும் காணிகளுக்குள் எந்தக் கூரையுமில்லாமல் சில நாட்கள் வெயிலிலும், குளிரிலும் வாடிய பின்னர், மெதுவாக சிறு கூடாரங்களுக்குள் உடல்களைச் சுருக்கினர். ஆகக்கூடியது 4 பேர் மட்டுமே அடைக்கலம் புகுவதற்கென ஐ.நா. வடிவமைத்த இந்தக் கூடாரங்களுக்குள், 8-10 பேர் நெருக்கிக்கொண்டு நிழல் தேடியுள்ளனர். ஒரு பெருநிலப்பரப்பு இவ்வாறு ஒரு சில முகாம்களின் கூடாரங்களுக்குள் சுருங்கியுள்ளது.
2008 ஒக்டோபர் முதல் அவ்வப்போது வவுனியா வந்துசேர்ந்த சுமார் 70,000 பேரைத் தவிர, ஏப்ரல் 20-24க்குள் வந்துசேர்ந்த சுமார் ஒரு இலட்சம் வரையிலானவர்கள் இன்னமும் முறையான சாப்பாடு, தண்ணீர் இன்றியும், மாற்றுடை இன்றியும் வாழ்ந்து வருகின்றனர். மலசலகூட வசதியோ, குளிப்பதற்கான வசதிகளோ இன்னும் இவர்களுக்குச் சீராக வழங்கப்படவில்லை. ஊடகங்களும் இவர்கள் விடயத்தில் போதியளவு கவனம் செலுத்தாத நிலையில், உதவிப் பணிகளும் நிலைமையின் மோசமான தன்மைக்கு முகம்கொடுக்குமளவுக்கு வேகமாக முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்க முகவர்களும், ஏராளமான அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களும் தம்மால் முடிந்தளவு முயன்று வருகின்றபோதிலும், இவ்வளவு தொகை மக்களின் தேவைகளைத் தீர்க்கும் சக்தியில்லாமல் அவர்கள் திணறிப்போயுள்ளனர். வன்னியில் வாழ்ந்திருக்கக்கூடிய சனத்தொகையையும், இடப்பெயர்வு கொண்டுவந்து சேர்க்கக்கூடிய மக்கள் தொகையையும் முன்கூட்டியே சரியாகக் கணிப்பிட்டிருக்காத நிலையில், திடீரென வந்திருக்கும் இத்தனை தொகை பேரில் தேவைகளை உடன் நிறைவுசெய்வதென்பது சாத்தியமில்லாத காரியமே.
மருதன் ஓட்டம்
ஊசலாடும் உயிரைத் தவிர அனைத்தும் இழந்துபோன இந்தச் சுமார் இரண்டு இலட்சம் மக்களிடம் இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை. பசியும், நீண்டநாள் பட்டினியும் ஒருவேளை உணவுக்கே இவர்களைக் கையேந்தி நிற்கச் செய்துள்ளது. எப்போது வருமோ என்று நாள் முழுக்கக் காத்திருந்து, உணவுப் பார்சல்களுடன் வரும் லொறிகளை நோக்கி மருதன் ஓடிப் பசி தீர்த்துக்கொள்ளும் அவலத்துக்குள் வாழ இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிறிதளவு உடல் வலு இருப்பவர்கள் ஓடிச்சென்று சாப்பாட்டுப் பார்சல்களைப் பெற்றுத் தமது பசியைத் தணித்துக்கொள்ள, உடல் வலுக் குன்றியவர்களும், வயோதிபர்களும், ஏராளமான பெண்கள் மற்றும் சிறுவர்களும் இந்தப் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பட்டினி கிடக்கின்றனர்.
யாரை யார் பார்ப்பது? எல்லோருக்கும் பசி. போட்டிபோட்டு அடிபட்டுச் சாப்பிட்டால்தான் பசி தீர்க்கலாம் என்ற பிச்சைக்கார வாழ்வுக்குள் மற்றையவர்கள் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்? 'பசி மனிதர்களை மிருகமாக்கிவிட்டது' என்று வேதனையோடு கூறுகின்றனர் இங்குள்ள உதவிப் பணியாளர்கள். தமது சொந்த நிலங்களில் பயிர் செய்து அனைவருக்கும் அள்ளிக் கொடுத்து வள்ளல்களாகப் பெருவாழ்வு வாழ்ந்த வாழ்வை நினைத்து, ஒரு பார்சல் சோற்றுக்குக் கையேந்தக் கூசி பலரும் மௌனமாகக் கண்ணீர் வடிக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்குள் வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் அகதிகளாக அலைந்து திரிந்து, இறுதியாக ஒரு குறுகிய சிறு நிலப்பரப்புக்கள் வாழ்ந்து இவர்கள் அனுபவித்த துயரங்கள் இன்னமும்தான் வெளிப்படவில்லை. பசியாறி, உடல் தேறி வாய் திறந்து தாம் பட்ட அவலங்களை இந்த மக்கள் பேசத் தொடங்கும்போதே, காவலர்களுடையதும், மீட்பர்களுடையதும் பொய்வேடங்கள் கலையும்.
மெதுவாக உதவிப்பணிகள் விரிவாக்கப்பட்டு முகாம்களுக்குள் இவர்களுடைய வாழ்க்கையில் சிறிதளவு முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், இவர்களுடைய வாழ்வு வழமைக்குத் திரும்ப பல வருடங்கள் ஆகலாம். ஏற்கனவே இரண்டு வருடங்களை அகதி வாழ்வுக்குள் தொலைத்துவிட்டு, குழந்தை குட்டிகளுடன் முகாம்களுக்குள் அடைக்கலம் தேடியுள்ள இந்த மக்கள் எத்தனை காலத்துக்கு இதனைத் தாங்க முடியும்? தமது நிலத்தில் சொந்தமாக உழைத்து கௌரவமாக வாழும் நிலைக்கு எப்போது இவர்கள் மீண்டும் இட்டுச்செல்லப்படப் போகின்றனர்?
இவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல!
யாரிடமும் யாசித்துச் சீவிக்கவேண்டும் என்று என்றைக்கும் நினைத்திருந்தவர்கள் அல்ல!
உடலால் உழைத்து, எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்து பெருமிதமாய் வாழ்ந்தவர்கள்.
அரசியல், இராணுவ வெற்றிகள், இராஜதந்திரம், தந்திரோபாயங்கள், தாயக கோசங்கள் அனைத்துக்குப் அப்பாலான இந்த மனிதாபிமானப் பேரழிவிலிருந்து இந்த அப்பாவிகளுக்கு மறுவாழ்வளிப்பதே இன்று அனைவர் முன்னும் இருக்கும் அவசர பணி.
இவர்களை இவர்களது வழமையான வாழ்வுக்கு கௌரவத்துடன் மீள அழைத்துச்செல்வது அனைவரதும் பொறுப்பு!
எல்லாவற்றையும் புறந்தள்ளி வைத்துவிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஒவ்வொருவரும் அவசரமாகச் செய்தேயாகவேண்டிய மனிதாபிமானக் கடமை இது.
Comments