இனப்படுகொலையில் சிக்கித்தவிக்கும் தமிழ்மக்களுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு ஆறுதல் அளிக்கிறது.- தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு யேர்மனி.
சிறீலங்கா அரசபடைகளின் தாக்குதல்களில் நாளாந்தம் செத்துமடித்து கொண்டும் உண்ண உணவின்றியும்,மருத்துவ வசதிகள் இன்றியும் தாயகத்தில் தாங்கொணதா துயரத்தை சுமந்து கொண்டிருக்கும் தாயக மக்களுக்குத் தனிஈழம் அமைத்துத் தாருவேன் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிடக்கழகத்தின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளது பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது. எமது தாய்த்தமிழகமும் இந்தியா அரசும் எமக்கு உதவும் எனக்காத்திருந்த மக்களுக்கு இந்திய அரசானது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையில் கைகோர்த்துள்ள செய்தி பெரும் ஏமாற்றத்தையும் தாங்கொண வேதனையையும் கொடுத்தது.
ஆனாலும் எமது தாயகத்தில் இடம்பெறும் தமிழின அழிப்பை தாங்கள் கண்டித்திருப்பதும் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தனித்மிழீழம் அமைத்து தருவேன் என தாங்கள் அறிவித்துள்ளதும் தமிழ்மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
தமிழினம் அழிவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களின் அறிவிப்பானது எமக்கு எல்லாம் மிகவும் மகிழ்வைத் தருகிறது. ஈழத் தமிழர்விடிவிற்காகத் தனது அதி உச்ச பங்களிப்பை வழங்கிய அமரர் புரட்சித்தலைவர் எம்.ஐி இராமச்சந்திரன் அவர்கள் கட்டிவளர்த்த கட்சியின் பொறுப்பாளராக பதவில் உள்ள நீங்கள் அவர் வழியில் சென்று தங்களின் உறுதியான பங்களிப்பை ஈழத்தமிழர்களுக்கு வழங்குவீர்கள் என மிகவும் உறுதியாக நம்புகின்றோம்.
தங்கள் கொண்ட கொள்கையில் இருந்து இம்மியளவும் மாறாத குணம் கொண்டவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. எனவே தங்களின் அறிவிப்பானது எமது தாயகவிடுதலையை விரைவுபடுத்தும் என நாம் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். நடைபெறும் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறுவதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளை யேர்மன்வாழ் தமிழ்மக்கள் சார்பாகவும் யேர்மனியில் உள்ள தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு யேர்மனி.
Comments