ஈழத் தமிழர்களை சிறிலங்கா அரசு நாளாந்தம் கொன்று குவிப்பது துன்புறுத்தல் இல்லையா?: மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா கேள்வி

ஈழத் தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் நாளாந்தம் கொன்று குவிப்பது பிரதமர் மன்மோகன் சிங் துன்புறுத்தல் இல்லை என்கிறாரா என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கையில் தொடர்ந்து குண்டு சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை திசை திருப்பி, மக்களை ஏமாற்றி, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கடற்கரையில் படுத்துக்கொண்டு மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தினார் கருணாநிதி.

கருணாநிதியும், சிதம்பரமும் சேர்ந்து பேசிக்கொண்டு தான் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்கள்.



இலங்கையில் 'போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்ல, முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால், "போர் நிறுத்தம் இல்லை" என்று இலங்கை அரசு அறிவித்துவிட்டது. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இது போன்று மக்களை ஏமாற்றலாமா? கருணாநிதி உண்ணாவிரத நாடகம் நடத்திக் கொண்டிருந்த போதே, அதே நேரத்தில், முப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டு இலங்கையில் தமிழர்கள் 272 பேர் மாண்டு போனார்கள்.

தி.மு.க.- காங்கிரஸ் என்றாலே பொய் பித்தலாட்டம் தான்! தி.மு.க. - காங்கிரஸ் வார்த்தையை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். இந்தக் கபட நாடகத்தின் தோல்விக்குப் பிறகு மக்களைப் பார்க்கவே பயப்படுகிறார் கருணாநிதி. மக்களை சந்திக்க பயந்து பிரச்சாரக் கூட்டங்களை எல்லாம் இரத்து செய்துவிட்டு, மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டிருக்கிறார். பிரச்சாரக் கூட்டங்களை எல்லாம் இரத்து செய்துவிட்டார். பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர்கள் செத்து மடிவது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார்.

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு; தேடுவோர் பட்டியலில் இருந்த, சோனியா காந்தியின் உறவினர், குவாத்ரோக்கியின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், 'மற்றவரை துன்புறுத்துவது நல்லதல்ல', என்று பதில் அளித்தார். அப்படி என்றால், இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்களை தினமும் கொன்று குவிக்கிறதே! இதை துன்புறுத்தல் இல்லை என்கிறாரா மன்மோகன் சிங்?

இலங்கைத் தமிழர்கள் என்ன இத்தாலிக்காரர்களா? சோனியா காந்தியின் உறவினர்களா? தமிழர்கள் தானே என்ற எகத்தாளம்!

தற்போதுள்ள சூழ்நிலையில், இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி, தனி ஈழம் அமைப்பது தான். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைத் தர வேண்டும்.

நாம் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால், எப்படி இந்திரா காந்தி பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேசிற்கு விடுதலை பெற்றுத் தந்தாரோ, அதே பாணியில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தனி ஈழம் அமைக்கத் தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்பதை உறுதிபட உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார் அவர்.

Comments