''முதல் ஒலி பெருக்கி எங்கே தெரியுமா... ஈரோடு. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரின் பேரன் இளங்கோவனை எதிர்த்து முதல் முழக்கம். உறவுப் பேரனை எதிர்த்து உணர்வுப் பேரன்கள் பேசுகிறோம்!'' என்கிறபோது அலைபேசி அழைக்கிறது.
ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி பிரான்ஸில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் செல்வக்குமாரின் தங்கை பேசுகிறார். 'நீங்கள் சொல்லுங்கள் அண்ணா... நீங்கள் சொன்னால்தான் என் அண்ணன் கேட்பான்' என்கிறது குரல். சீமான் கண்களில் நீர் கோக்கிறது. ''களத்தில் நின்றும் போராடு கிறான். நிலத்தில் நின்றும் வாதாடுகிறான். ஆனால், நாம் நாற்காலிச் சண்டையில் கிடக்கிறோம்'' என்றபடி, கேள்விகளை எதிர்கொள்கிறார்...
''பொதுவாக சிறை உடல், மனரீதியாக மாற்றம் செய்யும். உங்களுக்கு?''
''மதுரையில் அமீர் என்னுடன் இருந்தார். கோவை யில் கொளத்தூர் மணியும் மணியரசனும் இருந்தார்கள். புதுவையில் தனிமைச் சிறை. சரியான உணவில்லை, உறக்கமில்லை, நினைத்ததைச் சொல்ல முடியாத அழுத்தம், சிந்தனைத் தவிப்பு... இவை என்னை உடல் அளவில் பலவீனமாக்கி இருக்கலாம். ஆனால் என் இனமும், மொழியும், நாடும், தலைவனும், தத்துவமும், இன்னும் எத்தனை சிறை பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் மாறாது; மறையாது!''
''இந்தத் தேர்தல் உங்கள் பார்வையில் எப்படிப்பட்டது?''
''எம் இன வரலாற்றில் இது முக்கியமான தேர்தல். சாதித் தமிழன், கட்சித் தமிழன், மதத் தமிழன் என தமிழன் மூன்று வகைகளில் சிதைந்துகிடக்கிறான். தன் சாதிக்காரனுக்கு அடி விழுந்தால் மட்டும் அவனுக்கு வலிக்கும்; தன் மதத்தவன் தாக்கப்பட்டால் மட்டும் ரத்தம் கொதிக்கும். தன் தலைமை வாய் திறக்கும் வரை போராடுவதில்லை. இது வந்தவனுக்கு வசதியாகப் போனது; பந்தாடினான். காலம் காலமாகப் பிரிந்து கிடந்த இந்தத் தமிழனுக்கு முதல் முறையாக அத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகளைக் கடந்து இனத்துக்காக வாக்களிக்கவேண்டிய வாய்ப்பு வந்திருக்கிறது. தமிழினத்துக்கு மான உணர்வு இருந்தால், உயிர் இருந்தால் அப்படி ஓர் இனம் வாழ் வது உண்மையானால்... அதை நிரூபிக்கும் தேர்தல் இது!''
''கட்சித் தமிழனைப் பற்றிச் சொன்னீர்கள். நீங்கள் பிரசாரம் செய்யப்போவது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டும்தானே?''
''காங்கிரஸ் கட்சியின் பெயரைச் சொன்னாலே தமிழனுக்குக் கசக்க ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. நாங்கள் பிரசாரம் செய்வது, எம் இனத்தை அழித்துக்கொண்டு இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து.
பிரணாப் முகர்ஜி, கொழும்பு போனார். அவருக்கு சிங்கள அதிகாரி ஒருவன் இலங்கையின் வரைபடத்தைக் குச்சி வைத்துக் காட்டுகிறான். தமிழீழம் முழுக்கப் பரவியிருந்த புலிகளை சின்ன இடத்துக்குள் முடக்கி விட்டதாக அவன் சொன்னதும் பிரணாப் சிரிக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? போரை நடத்துவதே இந்தியாதான். இந்தியாவின் எதிரி நாடான சீனா, இலங்கையைச் செல்லப்பிள்ளையாகப் பார்த்து கடற் படைத் தளம் அமைக்கிறது. இன்னொரு எதிரியான பாகிஸ்தான் விமான ஓட்டிகள் 13 பேர் இலங்கையில் இருக்கிறார்கள். நம்முடைய எதிரிகள் சூழ்ந்துள்ள தேசத்தில் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் புலிகளை ஒழித்தால் மட்டும் போதும் என்று இறங்கு கிறாயே, என்ன நெஞ்சழுத்தம்?
கலை காத்தோம்; பண்பாடு காத்தோம்; மக்களைக் காத்தோமா? காக்கத் தவறியது காங்கிரஸ் அரசு. அது மட்டுமல்ல, கொன்று குவித்தது. எனவே, நாங்கள் எடுத்திருக்கும் முழக்கம், என் இனத்துக்கு உரமானது!''
''இது அ.தி.மு.க-வுக்கான மறைமுக ஆதரவல்லவா?''
''ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கொடுத்த குறுந்தகடு பார்த்து மனம் மாறியதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. அவர் மனம் மாற வேண்டும் என்றுதான் நாம் காத்திருந்தோம். 'தமிழீழம் பெற்றுத் தருவேன்' என்று அவர்சொல் வதை வரவேற்கிறோம். தேர்தலுக்காக ஜெயலலிதா பேசுவதாகக் குற்றம் சொல்கிறார்கள். அதற்காகவாவது நீங்களும் பேசுங்களேன். 'மலர்ந்தால் மகிழ்வோம்' என்பது என்ன கொள்கை? போராடித்தான் வாங்க முடியும். 'சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே' என்றானே கவிஞன்!
அரிசி தருவேன், டி.வி. தருவேன் என்பதைப் போன்றதல்ல, தமிழீழம் வாங்கித் தருவேன் என்ற வாக்குறுதி. இனப் பிரச்னை, உரிமைப் பிரச்னை. இன்று அது சர்வதேசப் பிரச்னை. இதில் யாரும் பொய் பேசித் தப்ப முடியாது. மக்கள் மன்றத்தில் தமிழனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.''
''உண்ணாவிரதம் உட்கார்ந்து போர் நிறுத்த வாக்குறுதியை வாங்கித் தந்திருக்கிறாரே கருணாநிதி?''
''இந்த வயதில் கலைஞர் உண்ணாவிரதம் உட்கார வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அதனாலும் எந்தப் பயனும் இல்லையே? போர் நின்றுவிட்டது என்று யார் சொல்ல வேண்டும்? குண்டுச் சத்தம் கேட்கவில்லை என்று யார் சொல்ல வேண்டும்? பயம் அற்ற தமிழன் அதை உலகத்துக்குச் சொல்ல வேண்டும். குண்டு போடும் சிங்களவனும், அதை ஆதரிக்கும் மத்திய அரசாங்கமும் சொன்னால் நம்புவதற்குத் தமிழன் இளிச்சவாயனா? 50 ஆயிரம் பேர் காட்டில் இருப்பதாக ராஜபக்ஷே சொன்னார். இன்று ஒரு லட்சம் பேர் காட்டை விட்டு வெளியேவந்திருப்ப தாகச் சொல்கிறார். புலிகளிடம் இருந்தால் அவர்கள் 50 ஆயிரம், உன்னிடம் வந்தால் ஒரு லட்சமா?
போரைத் தடு என்று நான் கேட்டால், இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட முடியாது என்கிறாய். இந்தியாவில் அனைத்து மதத்தவன், இனத்தவனும் ராணுவத்தில் இருந்து இந்தத் தேசத்தைக் காக்கிறான். ஆனால், இலங்கை ராணுவத்தில் சிங்கள வன் மட்டும்தானே உண்டு. அந்த நாட்டை எப்படி இறையாண்மையுள்ள நாடு என்று சொல்ல முடியும்? இவை எல்லாமே தமிழர்களை ஏமாற்ற, கொல்வதை மறைக்கச் சொல்லப்படும் சாமர்த்தியமான வார்த்தை கள்.''
''ஆயுதத்தைக் கீழே போட்டுப் புலிகள் சரணடைய வேண்டும், அதன் பிறகு தமிழர்களுக்குச் சமமான உரிமை தரப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டுள்ளதே?''
''தமிழர்களுக்கு உரிமையை வழங்கினால், புலிகள் அடுத்த நிமிடமே ஆயுதம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லையே! நீ அதை வழங்காததால்தானே புலிகள் ஆயுதத்தை எடுத்தார்கள். சொந்தத் தேசத்து மக்களைக் கொல்வது தேசபக்தியாம்... தமிழ் மக்களைத் தற்காத்துக்கொள்வது பயங்கரவாதமா? ஆயுதம் அவர் களிடம் இருக்கும்போதே இத்தனை பேரைக் கொன்றால், இல்லாத நிலையில் மொத்தத்தையும் முடித்துவிட மாட்டார்களா?''
''புலிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார்கள்; பிரபாகரன் அங்கே இல்லை; இன்னும் சில நாட்களில் முடித்துவிடுவோம் என்று வரும் செய்திகள் உண்மையா?''
''பிரபாகரனை இதுவரை 20 தடவை இந்த ஊடகங்கள் கொன்றிருக்கின்றன. முக்கியத் தளபதிகளான தீபன், கடாபி, துர்கா, விதூஷா, சேரா போன்றவர்கள் இறந்தது உண்மை. அவர்களும் சண்டை போட்டு ராணுவத்தால் கொல்லப்படவில்லை. நயவஞ்சகமாக ரசாயனக் குண்டுகளால் அழிக்கப்பட்டார்கள். தளபதிகள் சிலர் இறந்தாலும் பல தளபதிகளை உருவாக்கக்கூடிய பிரபாகரன் அங்கு இருக்கிறார். 'அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல்' என்று நினைக்கக்கூடிய பிரபாகரன் அவருடைய மண்ணில்தான் இருக்கிறார்.''
''நீங்கள் பிரபாகரனை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?''
''ஓர் இக்கட்டான சமயத்தில் நான் அவரைச் சந்தித்தேன். இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் குறித்து அவர் வருத்தப்பட்டார். 'இந்தியாவின் எதிரி நாடுகள் எங்கள் அமைப்புக்கு உதவி செய்ய முன்வந்த போது நான் அதை ஏற்கவில்லை. இது என் தாய் நாடு. இந்தியா என் தந்தையர் நாடு' என்று பிரபாகரன் சொன்னார்.
'பெரியாரைப் படித்த நாங்கள் போராளிகளாக இருக்கிறோம். கரம் பற்றி நடந்த நீங்கள் வாக்காளியாக இருக்கிறீர்கள்' என்று கிண்டலடித்தார். 'தமிழனின் வாளும் வேலும் எங்கடா தம்பி?' என்று என்னிடம் கேட்டார். 'அது பொருட்காட்சியிலும் பூஜை அறையிலும் இருக்கிறது' என்றேன். 'அதனால் தான் எதிரி போட்டுத் தாக்குகிறான்' என்று சிரித்தார்.
போரியல் மட்டுமல்ல, அரசியலும் கலந்த சித்தாந்தி அவர். ஈழத் தமிழனின் வாழ்வியலை வடிக்க அவரால் மட்டுமே முடியும்!''
உருக்கமாக முடிக்கிறார் சீமான்.
Comments