தமிழீழத்தின் மலர்வோடு வரலாற்றின் நாயகியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குலதெய்வமாக நீங்கள் நாளை வலம் வருவீர்கள்: ஜெயலலிதாவிற்கு கியுபெக் தமிழ் அமைப்புக்கள

ஈழத்தமிழரிற்கு “தனி ஈழத்தைப் பெற்றுக்கொடுப்பேன்” எனும் உறுதிமொழி கூறியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு கியுபெக் தமிழ் அமைப்புக்களின் இணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

செல்வி. ஜெயலலிதா ஜெயராம்
பொதுச்செயலாளர்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்
06.05.2009

வணக்கம்

உலகில் எமைக்காக்க யாருமே இல்லை எனும் நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழரிற்கு தாங்கள் கூறியிருக்கும் “தனி ஈழத்தைப் பெற்றுக்கொடுப்பேன்” எனும் உங்கள் உறுதிமொழி ஒன்றே இன்று பெரும் ஆறுதலைத் தருகின்றது.

சிங்கள இனவெறியர்களின் வெறியாட்டத்தாலும் சில வல்லாதிக்க சக்திகளின் ஏமாற்று வேலைகளாலும் தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய எங்களுக்கு எங்கள் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் கட்டி வளர்க்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதையிட்டு நிறைவடைகின்றோம்.

உலகெங்கும் பரந்து விரிந்து கிளை பரப்பி அரசியல் பொருளாதார பலம் பெற்று மாபெரும் சக்தியாக விளங்கும் புலம் பெயர் தமிழர்களினதும், தாயகத்தில் சாவுக்குள் வாழும் அந்த பூமியின் சொந்தக்காரர்களினதும், பாரதத்தில் கைக்கெட்டும் தூரத்தில் சாகும் சொந்தங்களை காக்க முடியாமல் தவிக்கும் எங்கள் உறவுகளினதும் ஆண்டாண்டு கால ஆன்ம தாகத்தை தீர்த்து வைப்பதாக தாங்கள் கூறிய அன்றே, பல வீடுகளில் கண்கண்ட பெண் தெய்வமாகிவிட்டீர்கள்.

சொல்வதை செய்வதில் இன்றைய சிக்கல்கள் நிறைந்த நவீன உலகில் கூட தங்களிற்கென்று தனி அடையாளம் வைத்திருக்கும் நீங்கள் எந்தச்சவாலையும் எதிர்கொண்டு தமிழீழம் அமைப்பீர்கள் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்துள்ளோம். தொண்மைமிக்க தமிழ் இனம் தங்களிற்கு என்றென்றும் கடமைப்பட்டிருப்பதோடு என்றும் தங்களின் சிந்தனைகளிற்கு செயல்வடிவம் கொடுக்க முழுப்பலத்துடன் தங்கள் பின் நிற்கும்.

தமிழீழத்தின் திறவுகோலும் தமிழரின் இன்றைய அவலவாழ்வும் பாரத தேசத்தின் கைகளில் என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. அந்தவகையில் தமிழீழத்தின் மலர்வோடு வரலாற்றின் நாயகியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குலதெய்வமாக நீங்கள் நாளை வலம் வருவீர்கள்.

தமிழீழ கோரிக்கையோடு நீங்கள் காணப்போகும் களம் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்துவதோடு தமிழரின் உண்மையான தாகம் எதுவென்பதையும் இவ்வுலகிற்கு மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்லும் என்பதில் ஐயமில்லை.

தங்களின் வெற்றி உறுதியாகிய பின் நாம் வாழ்ந்த மண்ணில் எங்கள் குடில்களில் ஒளியேற்றுங்கள். புழுதி படிந்த அந்த வீதிகளில் சுதந்திரம் சுமந்து வரும் காற்று மட்டும் எங்களுக்கு போதும். நாங்களும் எங்கள் தலைமுறையும் உங்கள் பெயர் சொல்லி உயிர்வாழ்வோம்.


சர்வதேச பாராமுகத்திற்கும் பக்கச்சார்பிற்கும் முடிவுகட்டி எங்கள் ஆன்மாவின் ஆழமான அபிலாசையில் பிறந்த தமிழீழ தேசத்தை மலரவைத்து இன்றைய பாரத தேசத்தின் ஆட்சியாளர்களின் கணிப்பு தவறென்பதையும், பாரத தேசத்தின் எதிர்காலத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் வல்லரசு நோக்கிய வளர்ச்சிக்கும் தனித்தமிழீழம் வளமும் பலமும் சேர்க்கும் என்பதையும், பாரத தேசத்தின் உண்மையான நண்பர்கள் நாங்கள் தான் என்பதையும் நீங்களும் நாங்களும் நாளை உறுதிப்படுத்துவோம். இது திண்ணம்.

மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி அகதி முகாம்களில் அடைத்து பட்டினி போட்டு இளைஞர் யுவதிகளை விசாரணை என்ற பெயரில் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி பாலியல் வெறியாட்டத்தை மேற்கொண்டு படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் உள் நோக்கம் மிகவும் பயங்கரமானது.

எஞ்சும் தமிழர்களை கொடுமைப்படுத்தி கூலிப்படைகளைக் கொண்டு பொய் நாடகங்களை ஒரு புறம் நடாத்தி, மறுபுறம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு, தமிழ் விகிதாசாரத்தை குறைத்து, அவர்களின் அரசியல் குரலை அடியோடு இல்லாதொழித்து, தமிழர்களை அவர்களின் சொந்த பூமியிலேயே நிரந்தர அடிமைகளாக்கும் சதித்திட்டத்தையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

ஆளுக்கு ஆள், வரிக்கு வரி பொய்யையே கூறிவரும் சிங்கள இனவெறியர்களின் முகமூடிகளை முழுமையாக கிழிக்கும் நாளுக்காய் காத்திருக்கின்றோம். சர்வதேச விதிகளையும் மனிதாபிமான எல்லைகளையும் மீறி மேற்கொள்ளும் மிருகத்தனமான நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி வருகின்றோம்.

கல்வித்தரப்படுத்தல் முதல்கொண்டு இனத்துவேசத்தாலும் பாரபட்சத்தாலும் உருவான இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை தமிழ் இனப்படுகொலைகளால் உச்சம் பெற்றதையும், அகிம்சைப்போராட்டங்கள் ஆயுதமுனையால் நசுக்கப்பட்டதையும், அரசியல் கோரிக்கைகள் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டதாலும் ஆயுதப்போராட்டம் நோக்கி தமிழர்கள் தள்ளப்பட்டார்கள் என்பதையும், சேர்ந்தே வாழ முடியாதென்ற கசப்பான அனுபவங்களின் பின்னே பிரிந்து வாழ முடிவெடுத்தார்கள் என்பதையும், ஒரு விடுதலைப்போராட்டத்தை சர்வதேச பயங்கரவாதமாக சித்தரிப்பதையும் அதன் பெயரால் மேற்கொள்ளும் போரால் அப்பாவிகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதையும் மீண்டும் மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

ஆயினும் யாரும் எம்மை கண்டுகொள்வதுபோல் தெரியவில்லை. மனிதாபிமானம், மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் பற்றி பேசுபவர்களுக்கு எங்கள் குரல் மட்டும் ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை.

அங்கங்களை இழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கும், சொந்தங்களை இழந்த உறவுகளுக்கும், மனநோயாளர்களாக்கப்பட்டவர்களுக்கும், பெற்றோரை இழந்த பல்லாயிரம் குழந்தைகளிற்கும், கற்பினை இழந்த எங்கள் பெண்ணினத்திற்கும், சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டுக்கோப்பான எங்கள் கலாச்சாரத்திற்கும் இந்த உலகு என்ன பதில் வைத்திருக்கிறது? இன்னும் பல தசாப்தங்களிற்கு தொடர இருக்கும் இந்த தாக்கங்களை இத்துடனாவது நிறுத்த என்ன முயற்சி எடுக்கின்றது? மானிட சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவை அசிங்கத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பெரு வெற்றி என்று அடக்கும் ஜ.நாவினதும் முண்டு கொடுக்கும் நாடுளினதும் பொறுப்பற்ற செயலை நினைத்து வேதனைப்படுகின்றோம். வெட்கப்படுகின்றோம்.


வல்வளைப்பு செய்து கையகப்படுத்திய மக்களை, விடுவித்து விட்டதாகவும் புனர்வாழ்வு அளிக்கப்போவதாகவும் கூறிய அரசு அவர்களின் வாழ்வை சிதைத்து ஆன்மாவில் ஆணிவைத்து அறைகிறது. புனர்வாழ்வு முகாம்கள் எல்லாம் சித்திரவதைக்கூடங்களாகிறது. முள்ளுக்கம்பிகளுக்கு உள்ளே முனகல் ஒலி தினமும் எழுகிறது. ஆறுகளிலும் குளங்களிலும் பிணங்கள் மிதக்கின்றன. காடுகள் எங்கும் புதைகுழிகள் பெருகுகின்றன. வெளியேறு வெளியேறு என்று வெளியேற்றிய உலகமும் அதன் அமைப்புகளும் ஊடகங்களும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

தற்போதும் சிறிலங்கா இனவெறி அரசு இரசாயன அழிவு ஆயுதங்களை பாவித்துக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் மிகப்பெருமளவில் பாவித்து அந்த மண்ணின் சொந்தக்காரர்களில் ஒன்றரை இலட்சம் பேரை இன்றோ நாளையோ படுகொலை செய்யும் மிகப்பெரும் திட்டமும் திரைமறைவில் நடக்கின்றது.

இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி கௌரவமான நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தித்தரும் பொறுப்பை வரலாறு உங்கள் கைகளில் தந்துள்ளது.

இன்றைய நிலையில் நான்கு நிமிடத்திற்கு ஒரு படுகொலையும் நிமிடத்திற்கு ஒரு படுகாயப்படுத்தலும் நாளுக்கு பத்து பட்டினிச்சாவும் தொடர்கிறது. தடுக்காவிட்டால் நாளை பன்மடங்கு அதிகமாகலாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இந்த உலகம் இன்னும் மௌனமாகவே இருக்கிறது.

ஓன்றரை இலட்சம் மக்கள் வாழும் இடத்திற்கு
ஆளுக்கு ஒரு பிடி அரிசியைக்கூட அனுப்பாமல்
மருந்துக்குக்கூட ஒரு சுயாதீன ஊடகத்தை அனுமதிக்காமல்
துளியளவு மருந்தைக்கூட அனுப்பாமல்
இன்றைய நிலையில் காயமுற்றவர்களைக்கூட காப்பாற்ற முன்வராமல்
சர்வதேச விதிகளையும் மனிதாபிமான எல்லைகளையும் மீறும் சிங்களத்தை ஒப்புக்குக்கூட கண்டிக்காமல்

சோமாலியாவில் சாகக் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் இறுதி மூச்சை பார்த்துக்கொண்டிருந்த கழுகு போல நாங்கள் இரத்தமும் சதையுமாய் சிதைக்கப்பட்ட பின்னர் சிங்கத்தின் குகைக்குள் அள்ளிப்போட மட்டுமே சிலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வல்லாதிக்கங்களின் ஆயுதப்பரீட்சையின் களமாக அப்பாவிப்பெண்களின் உடலும் கர்ப்பிணிப்பெண்களின் வயிறும் பச்சிளம் பாலகர்களின் சிரசுமே இருப்பதையிட்டு விம்மி வெடிக்கின்றோம்.

தமிழீழம் என்பது பிரிவினைவாதத்தின் திறவுகோல் அல்ல. மாறாக உலகில் மனிதம் முழுமையாய் சாகாமல் இருக்கின்றது என்பதையும் நாகரீகமான மனித நாகரீகத்திற்கு இழுக்கு ஏற்படாமல் காப்பதற்கும் அச்சாணியாக அமையும் என்ற உண்மையை இடித்துரைக்கின்றோம்.

உலகம் அழியும்வரை வாழும் தமிழோடு தமிழினத்தின் உண்மையான தலைவியாய் அவதாரம் எடுத்திருக்கும் தாங்களும் ஒவ்வொரு தன்மானத்தமிழனின் நெஞ்சங்களிலும் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். வாழ்த்துகின்றோம்


நன்றி

Comments