ஆட்டிலறிகள் உட்பட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கண்மூடித்தனமான தாக்குதல்களை ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.
நேற்றைய தினம் ஸ்ரீலங்கா இராணுவம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம் பெயர்ந்து இயங்கும் தற்காலிக வைத்தியசாலையை இலக்கு வைத்து நடாத்திய எறிகணைத் தாக்குதலில் நோயாளர்கள் உதவியாளர்கள் உட்பட 64பேர் படுகொலை செய்யப்பட்டு 87பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற போது ஆளில்லா வேவு விமானம் முள்ளிவாய்க்கால் வான் பரப்பில் வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
அங்குள்ள அனைத்து மக்களுக்குமான உடனடி மருத்துவ சிகிச்சை வசதிகளை வழங்குவதற்காக எஞ்சியிருந்த ஒரே ஒரு தற்காலிக வைத்தியசாலையும் திட்டமிட்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அமைவிடம் தொடர்பான தரவுகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட முன்று நாட்களின் பின்னர் இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சர்வதேச போர் விதிகளை மீறும் வகையில் பொது மக்கள் செறிவாக வாழும் அகதி முகாம்களையும், வைத்தியசாலைகள், தேவாலயங்கள், கோவில்களை இலக்கு வைத்து இலங்கை இராணுவம் தாக்குதல் நடாத்துவதும், மக்களுக்கான உணவு மருந்து என்பவற்றினை தடைசெய்து அவர்களை பட்டினி மூலமும் மருத்துவ வசதிகளை தடை செய்து படுகொலை செய்வதும் பாராதூரமான போர்க் குற்றமாகும்.
கடந்த சில நாட்களில் 9 பேர் பட்டினியால் இறந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு குடிமக்களை படுகொலை செய்து முழுமையான இனச் சுத்திகரிப்பு ஒன்றினை மேற்கொண்டுவரும் போது இலங்கை அரசு இறைமை உள்ள அரசு என்றும் அது மக்களால் தெரிவு செய்யப்பட்டது என்றும் அது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறது என்றும் கூறிக் கொண்டிருப்பது முழுமையான இன அழிப்பிற்கு துணை புரிவதாகவே அமையும் என்பதனை சர்வதேச சமூகத்திற்குச் சுட்டிக்காட்டுவதுடன் சர்வதேச சமூகம் தாமதம் இன்றி உடன் நடவடிக்கை எடுத்து உணவு மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கவும் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தி மக்களை இனப் படுகொலையில் இருந்து காப்பாற்றவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
செ.கஜேந்திரன் பா.உ.
Comments