பணம் பெரிதா? இனம் பெரிதா? சீமான் கேள்வி

இந்தத் தேர்தலில் காங்கிரசார் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் பெரிதா? தமிழ் இனம் பெரிதா? என இந்தத் தேர்தலில் தமிழன் காட்டுவான் என்று இயக்குனர் சீமான் கூறினார்.

திண்டுக்கல்லில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

கூட்டத்தில் பேசிய சீமான், "தமிழகத்தில் காங்கிரஸை தோல்வியடையச் செய்வதற்காக இந்தப் பிரச்சாரம் நடந்து வருகிறது. அங்கு நம் உறவுகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். போர் நிறுத்தப்படவில்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு நடிகன் மட்டுமே. அவனை இயக்கும் இயக்குனர்கள் காங்கிரஸ்கார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றார். மீதமுள்ளவர்களை அவரது மனைவி சோனியா காந்தி கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தாலியைச் சேர்ந்த சோனியாவை இந்தியாவின் மருமகளாக ஏற்றுக்கொண்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெறச் செய்தோம். ஆனால், எங்கள் இனத்தை அழிக்கும் துரோகத்தை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.

காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரசார் யாரும் இப்போது இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸாக மாறி, இப்போது இத்தாலி காங்கிரஸாக மாறிவிட்டது.

ராகுல் காந்தி விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கம் என்று கூறுகிறார். உனது அப்பா அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்திற்கு ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது தீவிரவாதம் இல்லையா?

ஒன்றரைக் கோடி மக்கள் தொகை உள்ள சீக்கிய இனத்தின் மாணவன் ஒருவனின் தலைமுடியை வெட்டியதற்காக லட்சக்கணக்கான சீக்கியவர்கள் வாளேந்தி தெருவில் போராடினார்கள். ஆனால், லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைப் பார்த்த பிறகும் ஆறரைக் கோடி தமிழர்கள் போராடக்கூடாதா?

இங்கு உள்ள மூத்த காங்கிரஸ்காரர்கள் அமைதிப்படை செய்த ஒரு நன்மையை சொல்லட்டும். நான் அவர்கள் செய்த கோடி தீமைகளைச் சொல்கின்றேன். இந்தத் தேர்தலில் காங்கிரஸார் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பணம் நமது பணம். ஆனால், தயவு செய்து முகர்ந்து பார்த்துவிடாதீர்கள்.

ஈழத்தில் செத்து மடிந்த நமது சகோதரர்கள் ரத்த வாடை அந்தப் பணத்தில் வீசும். 2,000 கோடி செலவு செய்து இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸார் கூறி வருகிறார்கள். அதில் ஒரு சிறிய தொகையையாவது எங்கள் சொந்தங்களைக் காப்பாற்ற அனுப்பிவையுங்கள்.

பணத்தைக் காட்டி வெற்றி பெறப் பார்க்கிறீர்கள். பணம் பெரிதா? தங்கள் இனம் பெரிதா? என இந்தத் தேர்தலில் தமிழன் காட்டிவிடுவான்.

காங்கிரஸ்காரர்களை தமிழகத்தை விட்டு ஓடச் செய்யவேண்டும். அதை நாங்கள் செய்து காட்டுவோம்.

பெரியார், பிரபாகரன் பெயரை யாராலும் அழிக்க முடியாது. ஈழத் தமிழர்களின் ஒரே தலைவன் பிரபாகரன்தான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் முடிவு என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே, நாம் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து ஈழத் தமிழர்களைக் காப்போம்" என்று பேசினார்.

இக்கூட்டத்தில் இயக்குனர்கள் ஆர்.கே. செல்வமணி, சிவா, சிபி சுந்தர், கெளதமன், கவிஞர் அறிவுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments