பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: சபையில் ஸ்ரீ காந்தா

பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நா.உ. ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஸ்ரீகாந்தா தொடர்ந்து பேசியதாவது:-

வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களினது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையால் அவர்கள் அனைவரும் எவ்வேளையிலும் கொல்லப்படலாமென குறிப்பிட்டார்.

இந்த அரசுக்கு போரை நடத்துவதற்கு வெளிநாட்டுப் பணம் தேவை. இந்திய அரசின் ஆயுத உதவிகள் தேவை. ஆனால் அவர்களின் அறிவுரைகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்தைப் பகைத்துக்கொண்டு உள்நாட்டில் ஆட்டம'் போட நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு விரைவில் உணர்த்தும்.

வன்னியில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இவர்கள் எவ்வேளையிலும் விமான,எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்படலாம்.

ஆனால் அரசோ தனது இராணுவ நடவடிக்கையை மனிதாபிமான நடவடிக்கையெனக் கூறுகின்றது. தயவுசெய்து அந்தச்சொல்லைப் பயன்படுத்தி அந்தச் சொல்லுக்குள்ள புனிதத்தை கெடுத்துவிட வேண்டாம். வன்னியில் அரசு சிங்கள இளைஞர்களை பலியிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மக்களை படுகொலை செய்கிறது. புலிகளும் கொல்லப்படுகிறார்கள். எதிர்கால சந்ததி அழிந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் அரசியல் தீர்வு காண இன்னும் நேரம் கடந்து விடவில்லை. இப்போதும் நாமும் புலிகளும் தயாராகவே உள்ளோம். இந்த அரசு தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கிவிட்டோம் என்ற உணர்வை சிங்கள மத்தியில் ஊட்டுகிறது. இது அதிக காலம் நீடிக்காது. பொருளாதார நெருக்கடியை சிங்களமக்கள் உணரும்போது தெளிவடைவார்கள்.

பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தமிழ்மக்கள் இப்போது கூட சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றனர். அவர்கள் ஒரு நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர். இந்த எண்ணத்தை தக்கவைப்பது சிங்கள மக்களினதும் அரசினதும் கைகளில்தான் உள்ளது.

Comments