இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களதகிய எங்களுக்கு உடனடித்தேவை மனிதப்பேரவலத்தை தடுத்து நிறுத்துவதே. ஆனல் அந்தப் பேரவலத்தை நடாத்துபவர்களோடு, அதுவும் இன்றுவரை அதைத் தடுத்துநிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காது இன்னும் ஆதரவும் ஊக்குமும் வழங்குபவர்களோடு ”எங்கள் திருமாவளவன்” கூட்டு வைத்தழருக்கிறார் என்பதை ஈழத்தமிழர்களாகிய எங்களால் அதுவும் தினம் தினம் எங்கள் இனத்தின் குருதி இந்தப் பூமியை நனைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தாங்கிக் கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியவில்லை. தமிழும் குறழும் தெரிந்தவர்களெல்லாம் தன்னைத்தானே தமிழினத்தின் தலைவர் என்று சொல்பவர்கள்,பித்தலாட்டக் காரர்கள், சுயநலவாதிகள் எப்படிப் போனாலும் போகட்டும். ஆனால் நீங்களுமா?? எப்படி உங்களால் மட்டும் இது முடிந்தது???
எங்களுக்காகக் குரல் கொடுக்கும், எங்களைத் தாங்கும் தமிழகத் தூண்களில் நீங்களும் ஒருவர் என்பதை எங்கள் இதயத்தின் ஆழத்தில் பதிய வைத்தோம் அந்தத் தூண்களில் ஒன்று செல்லரித்துப் போய்விட்டதாகவே உணர்கிறோம். காங்கிரஸ் கட்சியின் ஒரு பெரியவர்தான் உங்களை அரசியலில் அறிமுகப் படுத்தியதாகவும், அந்தக் கட்சிக்கு நீங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் நன்றிக்கடன் அழிந்துகொண்டிருக்கும் எங்கள் உயிர்களைத் தடுத்து நிறுத்துமா?? உங்கள் நண்பன் ஒருவன் உங்களுக்கு வேலைவாங்கித் தந்தான் என்பதற்காக அவன் உங்கள் தாயை, தந்தையை, மனைவியை, குழந்தைகளைக கொலைசெய்யும்போது நன்றிக் கடனுக்காக கொல்லட்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பீர்களா?
தமிழீழம் பெற்றுத் தருவோம் என்று சொல்லும் அ.தி.மு.க கட்சியின்மீது உங்களுக்கு கோபமோ முன்விரோதமோ இருக்கலாம். ஈழத்தமிழரின் போராட்டம் சம்பந்தமான கடந்தகால கசப்பான அனுபவங்களாக இருக்கலாம் ஏன் அது எங்களுக்கும்தான் இருந்தது. ஆனால் காலம் எல்லா ரணங்களையும், காயங்களையும் மாற்றும். திரு வைகோ அவர்கள் படாத வேதனையா? அவமானமா? மாற்றங்களும் மறதிகளும் உலகில் அவசியமானவை. அ.தி.மு.க வின் தமிழீழ வாக்குறுதி உங்கள் தேர்தல்பாசையில் தேர்தல் நாடகம், தேர்தல் பல்டி, பொய் வாக்குறுதி அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று பலவாறு நீங்கள் சொல்லலாம் ஏன் எங்களுக்கும்தான் தாங்கிக்கொள்ள முடியாத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி எங்கள் குடும்பங்களை அழித்து எங்கள் தாய் சகோதரிகளை மானபங்கப்படுத்தி எங்கள் போராட்டத்தை மழுங்கடித்து பாதகச் செயல்களுக்குக் காரணமானவர்களோடு ”எங்கள் திருமாவளவன்” கூட்டுச் சேர்ந்தது மட்டுமன்றி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென அவர்களை வாழ்த்தும்போது செல்வி ஜெயலலிதா மட்டும் யதார்த்தத்தைப் புரிந்துபொண்டு நடைமுறைகளைப் பார்த்து தனது நிலையை மாற்றி ”தமிழீழம் அமைப்பேன்” என்று உறுதியளிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. இந்த வாக்குறதிகளை நம்பவேண்டாம் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்லுவீர்களானால் நம்பக்கூடிய வாக்குறதிகளைத் தருபவர்களை உங்களால் சொல்லமுடியுமா? சும்மா ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியைத் இழந்தோம், அறுபதுகளில் பேசினோம், எழுபதுகளில்
பேசினோம் அதைச் செய்தோம் இதைச்செய்தோம் என்று உளறுவதால் ஆகப்போவது எதுவுமில்லை. ஏன் கருணா என்ற முரளீதரன்கூட ஒரு காலத்தில் போராளிதான். அதற்காக அவன் செய்த துரோகத்தை மறந்து அவனைத் தலையில் தூக்கிக் கொண்டாட முடியுமா? நீங்கள் அதை அனுமதிப்பீர்களா? மத்திய மந்திரி ஒருவர் சொல்கிறார் இன்னும் 24 மணி நேரத்தில் ஏதோ நடக்கப்போகிறதென்று அதை ஏற்கெனவே தெரிந்திருந்து காலையில் சாகும்வரை உண்ணாவிரதமிருப்பார்களாம் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென்று இவர்கள் உண்ணாவிரதத்தை முடிப்பார்களாம் இல்லையென்றால் திலீபனின் கல்லறைக்குப் பக்கத்தில் போய் படுத்திருப்பார்களாம். திலீபனின் தியாகம் என்ன? ஆவரின் கல்லறை எங்கே உள்ளது என்றாவது தெரியுமா இவர்களுக்கு.? திரைவசன பாணியில் சொல்வதானால் கேக்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இதையெல்லாம் இனியும் கேட்பதற்கு உலகத் தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் முட்டாள்களல்ல.
நீங்கள் கேட்கலாம் விடுதலைப்புலிகள் பற்றியோ, தலைவரைப்பற்றியோ ஏன் செல்வி ஜெயலலிதா எதுவும் பேசவில்லை என்று அந்தக் கேள்விக்கு எனது அறிவுக்கெட்டிய பதில் என்னவென்றால் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் தடா என்றும் பொடா என்றும் புகந்து விளையாடியவர்கள் அவர்கள். தங்களிடமும் அது எப்படிப் பாயும் என்பதை நன்கு அறிந்துவைத்திருப்பார்கள். அது மட்டுமல்ல ”தேசவிரோதம்” என்ற பிரிவின்கீழ் அவர்கள் என்றும் இருக்கமாட்டார்கள். காரணம் விடுதலைப்புலிகள்மீதான தடை இன்னும் இந்தியாவில் இருக்கின்றது. அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வளி செய்யும்வரை இப்போதைக்கு இதை அடக்கி வாசிப்பதுதான் நல்லது. எங்களின் விருப்பமும் அதுதான். காரணம் எங்களுக்கு இந்தியாவில் இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரம் அவர்மட்டும்தான். அவர்களும் சிக்கல்களில் மாட்டுவதை நாம் விரும்பவில்லை. அவர்களும் அதை விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ஈழத்தமிழர்கள்மேல் அளவுகடந்த பாசம் கொண்வர் நீங்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஏதோ ஒரு காரணம்தான் உங்களை இப்படி மாற வைத்திருக்கிறது. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளுகிற காலகட்டத்தில் நாங்கள் இல்லை யென்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அத்தோடு ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுக்காக, தமிழ் இனத்துக்காக தங்கள் இனிய, இளைய உயிர்களைத் தியாகம்செய்த வீரத்திருமக்கள் முத்துக்குமார் போன்ற தியாகிகளின் ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது ஒருபோதும் மன்னிக்காது. முடிந்தால், உங்களுக்கு நேரமிருந்தால் முத்தக்குமாரின் கடைசிக் கடிதத்தினை எடுத்துப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அ.தி.மு.க கூட்டணியில் உடன்பாடு இல்லையென்றால் தனித்துப் போட்டியிட்டிருக்கலாம் இல்லையேல் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். எங்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதமிருக்கத் துணிந்த உங்களுக்கு இது ஒரு பெரிய விடயமல்ல. அதைவிடுத்து நன்றிக்கடன் தீர்க்கவும் உறுதிமொழி காக்கவும் ”சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயையா நீயும் தமிழர் பழி சுமந்தாயையா” என்றுதான் என்னால் கூறமுடியும்.
அன்புச் சகோதரா இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை உடனடியாகவே ஒதுங்கிக் கொள்ளப்பாருங்கள் இந்தச் சரித்திரப் பழியிலிருநது விலகப்பாருங்கள்; உங்கள் கூட்டணியில் குறிப்பாக அந்தப் பதினாறோடு உங்கள் தொகுதியும் மற்றும் அனைத்தும் மண்கவ்வப் போவது உறுதி. காரணம் தமிழகத் தமிழர்கள் எங்கள்மீது பாசமில்லாத முட்டாள்களல்ல ஏன் உங்கள் கட்சித் தொண்டர்கள்கூட உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் எங்களுக்காக தீக்குளிக்கவே துணிந்த வர்களல்லவா?? எங்களுக்கு எதிராக வாக்குமட்டும் எப்படிப் போடுவார்கள்??
சிந்தி!!! சிந்தி சிறுத்தையே சிந்தி!!!
என்றும் உரிமையுடன் ஒரு ஈழத்தமிழன்
ஜேம்ஸ்ராஜ் நோர்வே - (ஸ்ரவங்கர்)
Comments