சீனா,சிறீலங்கா முறிக்க முடியாத உறவுக்குப் பின்னால்....!

இந்திய உள்துறை அமைச்சரான பழனியப்பன் சிதம்பரம், சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்.

இலங்கையின் தென் கடலோரப் பகுதியில், உலகின் மிகவும் சுறு சுறுப்பான கடற்பாதையிலிருந்து பத்து மைல்கள் மட்டுமே தொலைவிலுள்ள உறக்கமடைந்து கிடந்த மீன்பிடி நகரான அம்பாந்தோட்டை பாரிய கட்டட வேலைகளில் அமிழ்ந்து போயுள்ளது.

இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான வட கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் போரில் ஈடுபாடுள்ள ஒருவரின் மன நிலையிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் 21 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டது இக்கிராமம்.

எது எவ்வாறோ, சிறீலங்கா இராணுவம் துணிவுற்று எழுந்தமைக்கும், மேற்குலக அரசுகள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட அதிகாரமற்றுக் காணப்படுவதற்குமான காரணத்தை திடீரென மேலெழுந்த கட்டட வேலைகள் புரிய வைப்பனவாக உள்ளன.

இந்த அம்பாந்தோட்டையில் தான் சீன அரசு 1 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகமொன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. சவூதி அரேபியா எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தைக் காவல் செய்வதற்கும் சுற்றிவரும் சீனக்கடற்படைக்கு இத்துறைமுகமானது,

எரிபொருள் நிரப்பும் தரிப்பிடமாகவும் தங்குமிடமாகவும் பயன்படும். 2007 பங்குனி மாதம் சீனாவிற்கும் சிறீலங்காவிற்கும் இடையிலான இத்துறை முகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து, புலிகளை வெற்றி கொள்வதற்கான ஆயுத மற்றும் இராஜதந்திர உதவிகளை சீன அரசு சிறீலங்கா அரசிற்கு வழங்கிவருகிறது.

http://cache.daylife.com/imageserve/09vZfKJ1dbbk5/610x.jpg

இந்திய உள்துறை அமைச்சரான பழனியப்பன் சிதம்பரம், சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார். அம்பாந்தோட்டை என்பது வெறும் துணிச்சல் மிக்க வியாபார முயற்சி என்று சீனா குறிப்பிடும் போதிலும்,

பாகிஸ்தானில் குவாட்டர் துறைமுகத்தையும், பங்களாதேசின் சிட்டாகொங் துறைமுகத்தையும், பர்மாவின் சிர்வீ துறைமுகத்தையும் நிர்மாணிக்கும் அல்லது புனரமைக்கும் சீனாவின் முத்துமாலை (string of pearls) தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்திய மற்றும் அமெரிக்க இராணுவத் திட்டமிடலாளார்கள் கருதுகின்றனர்.

சீனாவின் இவ் இராணுவ நகர்வானது, 2006ம் ஆண்டு பென்டகன் வான்படை அதிகாரியான கேணல் கிறிஸ்தோபர் ஜே.பெர்சன் என்பவரால் உருவரைபு செய்யப்பட்டது. இதே ஆண்டு நவம்பர் மாதத்தில், அமெரிக்காவின் இணைப் படைக் கட்டளையகத்தின் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும், போருக்கும் சமாதானத்திற்குமான கற்கை நிறுவனத்தைச் சேர்ந்தவருமான மேஜர் ஜெனரல் தீபன்கார் பானர்ஜீ குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை என்பது சீனாவிற்கு இன்று வியாபார நோக்குள்ளதாயினும் எதிர்காலத்தைப் பொறுத்தவரை மிகவும் தந்திரோபாயமான தளம் எனக் குறிப்பிடுகிறார்.

பிரித்தானியக் கடற்படை 1957 வரை திருகோணமலைத் துறைமுகத்தைத் தனது பிரதான பிராந்திய கடற்படைத்தளமாகப் பயன்படுத்தியது மட்டுமல்ல, இன்றும் அருகிலுள்ள டியாகோ கார்சியா தீவிலுள்ள கடற்படைத் தளத்தை அமெரிக்காவுடன் இணைந்து பயன்படுத்தி வருகிறது.

சீனாவைப் பொறுத்தவரை முழுமையான கடற்படைத்தளம் ஒன்றை உருவாக்குவதற்கான எந்த உடனடித் திட்டமும் இல்லாதிருப்பினும், எண்ணெய் விநியோகத்தை கடற்கொள்ளை மற்றும் அந்நியத் தடைகளிலிருந்து பாதுகாப்பதற்கான தேவையை நோக்கியதாகவே இது அமைவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனா சிறீலங்காவுடனான தனது பிணைப்புகளை 1990ம் ஆண்டிலிருந்து வளர்த்தெடுத்துள்ளது மட்டுமன்றி, உள்நாட்டு யுத்தத்தில் பயன்படும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் மறுப்புத் தெரிவித்த நிலையில், சிறீலங்காவின் பிரதான ஆயுத விநியோக நாடாகவும் 90 களில் உருவானது.

2007 இலிருந்து சிறீலங்காவிற்கான ஆயுத விற்பனையை சீனா அதிகரித்திருந்தது.Lanka Logistics Technologies Limited என்ற நிறுவனத்தினூடாகவே பெரும்பாலான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

Janes Defence Weekly கூற்றுப்படி, சிறீலங்கா அரசு சீன அரசுடன் 37.6 மில்லியன் பெறுமதியான வெடி பொருட்களையும், படைகளுக்குத் தேவையான பீரங்கி வகைகளையும் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஏப்ரல் 2007 இல் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கிறது.

2007 இல் புலிகளால் விமானப்படையின் 10 விமானங்கள் நிர்மூலமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வருடம் சீன அரசானது ஆறு எப்.7 ரக விமானங்களை சிறீலங்கா அரசிற்கு இலவசமாக வழங்கியிருந்ததாக ஸ்ரொக்ஹோல்ம் சர்வதேச சமாதானத்திற்கான நிறுவனம் தெரிவிக்கிறது.

2007 இலிருந்து சீன அரசானது பாகிஸ்தானை சிறீலங்காவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குத் தூண்டியதாகவும் சிறீலங்கா விமானிகளுக்குப் பயிற்சியளிப்பதை ஊக்கமளித்ததாகவும் இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்காப் பிரச்சினையைப் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இணைப்பதற்கான முயற்சிகளை தடைசெவதனூடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சீனா சிக்கலான இராஜதந்திர ஆதரவை வழங்கியிருந்தது.

மேற்கு நாடுகள் உதவி வழங்கும் தொகையைக் குறைத்துக் கொண்ட வேளையில் சீனா அதனை அதிகரித்துக் கொண்டது. சில மில்லியன்களாக இருந்த சீனாவின் தொகையானது, 2005 இல் ஒரு பில்லியன் டொலராக பாய்ச்சல் நிலைக்குச் சென்றது, இதனால் ஜப்பானை சிறீலங்காவின் மிகப்பெரிய உதவி வழங்கும் நாடு என்ற நிலையிலிருந்து நீக்கியது.

சீனாவுடன் ஒப்பிடும் போது, அமெரிக்கா 7.4 மில்லியன் டொலரையும், பிரித்தானியா 1.25 மில்லியன் டொலரையும் உதவித் தொகையாக கடந்த வருடம் வழங்கின. சீனக் கற்கைகளுக்கான சென்னை நிலையத்தைச் சேர்ந்த பி.ராமன், இந்தக் காரணத்தால்தான் மேற்கின் கண்டனங்களை சிறீலங்கா நிராகரிப்பதாகவும், சிறீலங்காவைப் பொறுத்தவரை சீனாவின் ஆதரவை நம்பியிருக்கலாம் எனத் தெரியும் என்றும் கருதுகிறார்.

பிரித்தானிய ரைம்ஸ் இதழில்

(01.05.2009) இல் வெளியான

ஜெரமி பேஜ் இன் கட்டுரையிலிருந்து....

Comments