முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலை தடுத்து நிறுத்த சர்வதேசம் உடன் தலையிட வேண்டும்: நா.உ. கஜேந்திரன் கோரிக்கை

நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம் பெற்ற கண்மூடித்தனமான தாக்குதலில் 2000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ் கூட்டமைப்பு நா.உ. கஜேந்திரன் தெரிவிக்கையில்,

அத்தோடு பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்தக் கணம் வரை சுமார் 850 ற்கும் அதிகமான காயமடைந்தவர்கள் வைத்திசாலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றும் நோக்கிலும் அப்பகுதியில் தங்கியுள்ள பொது மக்களை பலவந்தமாக வெளியேற்றும் நோக்கிலும் பொது மக்களை இலக்குவைத்து கண்மூடித்தனமான தாக்குதல்களை அரசுப்படைகள் நடாத்தி வருகின்றனர். கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டு மிகப் பயங்கரமான போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான அப்பட்டமான இனப்படுகொலை நடவடிக்கையை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

வைத்தியசாலையில் மருந்துகளோ, இரத்தமோ இல்லாத காரணத்தினால் மேற்படி தாக்குதலில் படுகாயம் அடைந்த பொது மக்களில் பல நூற்றுக் கணக்கானோர் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட இரண்டாயிரம் வரையானோரின் உடல்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் இறந்த உடல்கள் ஆங்காங்கு சிதறிக் காணப்படுவதாகவும், தற்காலிக வைத்தியசாலை அமைந்துள்ள இடத்திற்கு கொண்டுவர முடியாத நிலையில் படுகாமடைந்தவர்கள் அந்தந்த இடங்களில் கிடந்து கொண்டு தங்களை காப்பாற்றுமாறு மரண ஓலம் எடுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும், பல நூற்றுக் கணக்கானோர் பங்கர்களுக்குள்ளேயே குடும்பம் குடும்பமாக இறந்து கிடப்பதாகவும் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலைக்குரிய முழுப்பொறுப்பையும் இலங்கை அரசாங்கம் மட்டும் அல்ல ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களும் ஏற்க வேண்டும்.

இவ்வாறன பாரியதொரு மனிதப் படுகொலை இடம்பெறப் போகின்றது என்பது தொடர்பான எச்சரிக்கைகள் ஏற்கனவே ஐநா செயலாளர் நாயகத்தினதும், பாதுகாப்புச் சபை உறுப்பினர்களதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் கூட படுகொலையை தடுக்க ஐநா சபையின் செயலாளர் நாயகமோ அல்லது ஐநா பாதுகாப்புச் சபையோ ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

தமிழ் மக்களை படுகொலை செய்வதன் மூலம் இலங்கை அரசு மட்டும் போர்க் குற்றம் இழைக்கவில்லை மாறாக படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருந்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து படுகொலைகளை தடுத்து நிறுத்தாது வெறும் கண்துடைப்பு அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஐநா சபையும் போர் குற்றம் இழைத்துக் கொண்டிருக்கின்றது.

மேலும் தாமதிக்காது ஐநா சபையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் உடனடியாக தலையிட்டு காயமடைந்தவர்களை காப்பாற்றவும், இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் அவசரமாக கோருகின்றோம்.

Comments