வெறும் 5 சதுர கி.மீற்றருக்கும் குறைவான பிரதேசத்துக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புலிகளும் முடங்கிப் போயிருக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றும் படை நடவடிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த வியாழனன்று கூட, புலிகளின் கடைசி மண்ணரணையும் கைப்பற்றி விட்டதாகப் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனாலும் அதற்கும் அப்பால் சண்டைகள் தொடர்கின்றன.
புலிகள் அடுக்கடுக்காக அமைத்து வைத்திருக்கும் மண்ணரண்களும் அதற்குப் பாதுகாப்பாக விதைத்திருக்கும் ஆயிரக்கணக்கான மிதிவெடிகளும், பொறிவெடிகளும் தொடர்ச்சியாக நடத்தும் மோட்டார், ஆட்டிலறித் தாக்குதல்களும் படை நகர்வுக்குப் பெரும் குறுக்கீடாக இருக்கிறது. இதைவிடப் புலிகளின் சினைப்பர் தாக்குதல் அணிகள் பெரும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் இராணுவத்தின் விசேட பயிற்சி பெற்ற சினைப்பர் அணியைச் சேர்ந்த பல படையினரும், காலாற்படையினரும் புலிகளின் சினைப்பர் தாக்குதல்களில் பலத்த இழப்புகளைச் சந்திக்க நேரிட்டது.
கடற்கரை சார்ந்த நிலப்பரப்பு ஆதலால் புலிகளால் இலகுவாக மண்ணரண்களை அமைத்துக் கொள்ள முடிகிறது. 200 மீற்றருக்கு ஒன்று என்ற அடிப்படையில் புலிகள், அடுக்கடுக்கான மண்ணரண்களை அமைத்திருப்பதாகக் களமுனைப் படையதிகாரிகள் சிலர் கூறியிருக்கின்றனர். இந்த மண்ணரண்களின் மூலம் புலிகளால் படையினரின் முன்னகர்வைத் தடுக்க முடியாவிட்டாலும் தாமதப்படுத்த முடிகிறது. இதுவே கள யதார்த்தம்.
இப்போது கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய இரண்டு சிறிய கிராமங்கள் தான் போரின் மையமாகியிருக்கின்றன. இரட்டைவாய்க்கால் பகுதியில் தான் சண் டைகள் உக்கிரமாக நடைபெற்று வருகின்றன. இரட்டைவாய்க்கால் சந்தி என்பது பரந்தன் முல்லைத்தீவு வீதியும், புதுமாத்தளன் முல் லைத்தீவு வீதியும் சந்திக்கின்ற இடம். இரட்டைவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றி முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் பிரவேசிக்க நடக்கின்ற சண்டையில் படைத்தரப்பு நான்கு டிவிசன் படையினரை ஈடுபடுத்தியிருக்கிறது. இது ஆச்சரியம் அளிக்கின்ற ஒரு எண் ணிக்கை.
அம்பலவன்பொக்கணையில் இருந்து வலைஞர்மடம் வழியாக முன்னேறி வந்த 58ஆவது டிவிசன். புதுக்குடியிருப்பில் இருந்து ஏ35 வீதி வழியாக முன்னேறி வந்த 53 ஆவது டிவிசன். நந்திக்கடல் ஓரமாக மந்துவில் பக்கமாக முன்னேறி வந்த 68ஆவது டிவிசன். இவற்றுடன் முல்லைத்தீவுப் பக்கத்தில் இருந்து முன்னேற முற்படும் 59ஆவது டிவிசன். 5 சதுர கி.மீ பிரதேசத்துக்குள் நிலை கொண்டிருக்கும் புலிகளை அழிக்க, அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற, நான்கு டிவிசன் படையினர் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். முல்லைத்தீவு கைப்பற்றப்பட்ட பின்னர் தற்காப்பு நிலையில் இருந்த 59 ஆவது டிவிசன் இப்போது சண்டையில் இறக்கி விடப்பட்டி ருக்கிறது. 55ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா இப் போது 59 ஆவது டிவிசனின் முன்னரங்க நட வடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப் பட்டிருக்கிறார். முல்லைத்தீவில் நிலை கொண் டிருக்கும் 59 ஆவது டிவிசனின் வடக்குப் புறத்தில்தான் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளாமுள்ளிவாய்க்கால் இருக்கிறது. வட்டுவாகல் பாலத்தை கடல்நீரேரியைக் கடந்து முன்னேறினால்தான் வெள்ளமுள்ளி வாய்க்காலுக்குள் பிரவேசிக்க முடியும். எனவே 59 ஆவது டிவிசன் படையினரை வடக்கே வெள்ளாமுள்ளிவாய்க்கால் நோக்கி முன்னகர்த்தும் நோக்கிலேயே இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த நியமனத்தை செய்திருக்கிறார்.
அவர் இந்தப் பொறுப்பை வகிக்கும் வரை, புதுமாத்தளனுக்கு வடக்கே நிலைகொண்டி ருக்கும் 55 ஆவது டிவிசனின் பதில் கட்டளை அதிகாரியாக இராணுவத்தின் பயிற்சிப் பணிப் பாளர் பிரிகேடியர் சாஜி கல்லகே நியமிக் கப்பட்டிருக்கிறார். பிரிகேடியர் பிரசன்ன சில்வா விசேட படைப் பிரிவைச் சேர்ந்தவர். அத்துடன் இவர் ஈரூடகத் தாக்குதல்களை நடத்துவதிலும் வழிநடத்துவதி லும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். விசேட படைப்பிரிவின் மிகச் சிறந்த அதிகா ரிகளில் இவர் முக்கியமானவர் என்கின்றன இராணுவ வட்டாரங்கள். வாகரை பனிச்சங்கேணிப் பாலத்தையும் கடலேரியையும் அரணாகக் கொண்டு புலிகள் அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களை ஈரூடகத் தாக்குதல் ஒன்றின் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். ஒரு கொம்பனி படையினருக்குத் தலைமையேற்று இவர் நடத்திய இந்தத் தாக்குதல்தான், வாகரையில் இருந்து புலிகளைப் பின்வாங்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. அத்துடன் வெற்றிலைக்கேணி யில் இருந்து மாத்தளன் வரை முன்னேறி வந்தபோதும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா சுண்டிக்குளம், நல்லதண்ணித் தொடுவாய், சாலை போன்ற இடங்களில் கடல்நீரேரிகளைக் கடந்து படைகளை நகர்த்தியவர். இவற்றின் அடிப்படையிலேயே முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள 59வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்ன சில்வாவுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக் கிறது. இந்த நியமனம் இந்த மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்டது. இதை அடுத்து புலிகள் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் படையினரின் ஈரூடகத் தாக்குதல் ஒன்றை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே படைத்தரப்பு கடந்த 26ஆம் திகதி முதல் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடல் வழியாகத் துருப்புகளைத் தரையிறக்க முற்பட்டு வந்தது. ஆனால் கடற்புலிகளின் கடும் தாக்குதல்கள் இந்த முயற்சிக்குப் பெரும் தடையாக இருந்து வருகிறது. புலிகள் கடல்வழியாகத் தப்பிச் செல்லவோ அல்லது கடல்வழியாக உதவிகளைப் பெற வோ முடியாதபடி கடற்படையினர் தொடர்ந் தும் முற்றுகையை இறுக்கி வருகின்றனர்.
அதேவேளை படையினரைத் தரையிறக்கும் முயற்சியிலும் கடற்படையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 4ஆம் திகதி அதிகாலை வெள்ளா முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடற்படை யினர் மீது கடற்புலிகள் ஒரு தாக்குதலை நடத்தினர். அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய கடற்சண்டை பற்றி படைத்தரப்பு தகவல் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் புலிகள், அதிகாலை 6.10 மணிய ளவில் கடற்படையினரின் இரு வோட்டர்ஜெட் படகுகளும், 7 மணியளவில் ஒரு அரோ தாக் குதல் படகும் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட் டதாகக் கூறியிருந்தனர். ஏற்கெனவே கடந்த முதலாம் திகதி அதிகாலை நடந்த தாக்குதல் ஒன்றில், புலிகள் வெடிமருந்து நிரப்பிய படகு ஒன்றின் மூலம் கடற்படைப் படகுகளைத் தகர்த்ததில் 12 கடற்படை கொமாண்டோக்கள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. விசேட படகுப் படையணியைச் சேர்ந்த கொமாண்டோக்களே இவர்கள். விசேட படகுப் படையணியின் பிரதிக் கட்டளை அதி காரியான லெப்.கொமாண்டரும் இவர்களில் அடங்கியிருந்தார். கடற்புலிகளின் இத்தகைய தாக்குதல்களால் கடல்வழித் தரையிறக்க முயற்சிகள் எதுவும் இதுவரையில் கைகூடவில்லை. அதேவேளை அம்பலவன்பொக்கணையில் இருந்து முன்னேறிய 58ஆவது டிவிசனின் இரண்டு பிரிகேட்கள் இப்போது கரையோ ரமாக முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேறி வருகின்றன.
6ஆவது மற்றும் 12ஆவது கெமுனுவோச், 7ஆவது சிங்க றெஜிமென்ட், 11ஆவது இலகு காலாற்படை, 9ஆவது விஜயபா, 10ஆவது கஜபா ஆகிய ஆறு பற்றாலியன் துருப்புகள் இப்போது ஏ35 வீதிக்கும் கடற்கரைக்கும் இடையிலான ஒடுங்கலான பகுதி வழியாக முன்னேறி வருகின்றனர். அதேவேளை 14ஆவது மற்றும் 20வது கஜபா றெஜிமென்ட்கள், 10ஆவது இலகு காலாற்படை என்பன தற்போது வலைஞர் மடம் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 53ஆவது டிவிசனின் எயர் மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த 3 பற்றாலியன் படையி னர் ஏ35 வீதிக்கு மேற்காக முன்னேறி வரு கின்றனர். இதில் 4ஆவது விஜயபா, 17ஆவது கெமுனுவோச், 6வது கஜபா ஆகிய பற்றாலியன்கள் இருக்கின்றன. இதற்கு பின்புறத்தில் 1ஆவது கஜபா, 5ஆவது கெமுனுவோச், 5ஆவது விஜயபா ஆகியன நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்ததாக நந்திக்கடலோரமாக 68வது டிவிசன் முன்னேறி வருகிறது. ஏ35 வீதியின் பின்புலப் பாதுகாப்பில் லெப்.கேணல் லலந்த கமகேயின் 682 பிரிகேட் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதே வேளை நந்திக் கடலோரமாக லெப்.கேணல் சுபஷான வெலிக்கலவின் 681பிரிகேட் முன்னகர்ந்து வருகிறது. 53ஆவது டிவிசனும், 58ஆவது டிவிசனும் கடந்தவாரம் நடந்த கடும் சண்டைகளின் பின்னர் இரட்டை வாய்க்கால் பகுதியில் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டன. இருந்தபோதும் முழுமையாக இரட்டை வாய்க்கால் பகுதி படையினரால் கைப்பற்றப் படவில்லை என்றே தெரிகிறது. புலிகள் களமுனையில் பெருமளவு சினைப் பர் தாக்குதல் அணிகளை நிறுத்தி வைத்தி ருப்பதால் படைத்தரப்பு வெளியான பிரதேசங் களைக் கடக்க இரவு நேர நகர்வுகளைத் தெரிவு செய்தது.
ஆனால், இந்தத் தந்திரோபாயமும் படைத்தரப்புக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. புலிகளின் தாக்குதல்களிலும் பொறிவெடிக ளிலும் சிக்கி படையினர் பலர் கொல்லப் பட்டதுடன் பெருந்தொகையானோர் கால்களை இழக்கவும் நேரிட்டது. புலிகளின் மண்ணரண்களைக் கடப்பது படையினருக்கப் பெரும் தலைவலியாகி இருக் கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு மண் ணரண்களை 58ஆவது டிவிசன் படையினர் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது. கடந்த புதன்கிழமை தொடக்கம் நடந்து வந்த கடும் சண்டையின் பின்னர் வியாழன் அதிகாலை 2.30 மணியளவில. 7ஆவது சிங்க றெஜிமென்ட் படையினர் புலிகளின் ஒரு மண்ணரணைக் கைப்பற்றினர். இந்தச் சண்டையைக் கண்காணிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இரவிரவாக இராணுவத் தலைமையகத்தில் விழித்திருந்தார். இந்தச் சண்டை ஒரு திருப்புமுனையாக அமையும் எனப் படைத்தலைமை எதிர்பார்த்திருக்கலாம் என்றே தெரிகிறது. ஆனால் அது அப்படி அமையவில்லை.
எனினும், அடுத்த சில தினங்களுக்குள் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இராணுவத் தரப்பு இருப்பதாகத் தெரிகிறது. இது எந்தளவுக்குச் சாத்தியமானதாக இருக் கும் என்பது முற்கணிப்புக்கு அப்பாற்பட்ட விடயம். இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட அத்தனை பேரினது காலவரம்புகளும் காலாவதியாகிப் போயிருக்கும் நிலையிலும் போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
Comments