இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் 13 ஆயிரம் பேரை காணவில்லை: ஐ.நா. மூடிமறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு

இலங்கையில் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கான முகாம்களில் இருந்து 13 ஆயிரத்து 130 பேரைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் சிறிலங்கா அரச படைகளின் இறுதித் தாக்குதலின்போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தாமல் மூடி மறைப்பதாக ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் இருந்து காணாமல் போயிருப்பவர்கள் பற்றியும் அது மூடிமறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய உதவிப் பணிகள் ஒருங்கிணைப்பு அலுவலகம் மே மாதம் 27ஆம் நாளும் மே மாதம் 30 ஆம் நாளும் வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்து முகாம்களில் இருந்து 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய உதவிப் பணிகள் ஒருங்கிணைப்பு அலுவலகம் மே மாதம் 30 ஆம் நாள் வெளியிட்ட தகவல் அறிக்கையில், மோதல் பகுதியில் இருந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வந்துள்ள அப்பாவி மக்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 என்று தெரிவித்திருந்தது.

ஆனால், அதற்கு முன்பு மே மாதம் 27 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை விடவும் இதில் 13 ஆயிரத்து 130 பேர் குறைவாகும். இந்தக் குறைவுக்கு இரட்டைக் கணக்கீடு காரணமாக இருக்கலாம் என்றும் கூடுதல் சரி பார்ப்பு தேவை என்றும் அது கூறியிருந்தது.

ஆனால் முகாம்களில், பதிவு செய்யும் பணி மேம்பட்ட வகையில், முறையாக நடந்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய உதவிப் பணிகள் ஒருங்கிணைப்பு அலுவலகம் ஏற்கெனவே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களில் 13 ஆயிரம் பேருக்கு மேல் காணவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளும், சிறிலங்கா அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளும் மூடிமறைக்க முயல்வதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகாம்களில் இருந்து இளம் வயது ஆண்களும் பெண்களும் கடத்திச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் பின்னணியில் முகாம்களில் இவ்வளவு பேர் காணாமல் போயிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

Comments