இறுதிக்கட்ட போரில் உடல் உறுப்புகளை இழந்த 20 ஆயிரம் தமிழர்களுக்கு வவுனியாவில் சிகிச்சை: சனல் 4 தொலைக்காட்சி (வீடியோ இணைப்பு)

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் 50 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தரப்பில் கூறப்பட்டது. சர்வதேச பத்திரிகைகள் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டன.
இப்போது இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் தமிழர்கள் உடல் உறுப்புகளை இழந்து இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் ஒலிபரப்பாகும் சனல் 4 என்ற தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறியதாவது:

இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரில் 20 ஆயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக, காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வரும் டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம் எறிகணை வீச்சுக்களினாலேயே பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் எங்கள் நிருபர்களிடம் இரகசியமாக தெரிவித்துள்ளனர். நாங்கள் இந்த ஆய்வுகளை ஒரு வாரமாக மேற்கொண்டிருந்தோம்.

ஒரு லட்சம் மக்கள் தங்கியிருந்த பகுதி மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் தினமும் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து இறுதியாக தப்பி வந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

எறிகணை தாக்குதல்களை நிகழ்த்தவில்லை என இலங்கை அரசு தெரிவித்த போதும் அங்கு தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் இடம் பெற்றதாக கண்ணால் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு குரல் எழுப்ப தற்போது எவரும் இல்லை, தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியற்ற எதிர்காலமே எஞ்சியுள்ளது. அவர்கள் அந்நியர்களின் ஆட்சியில் வாழ்வது போல வாழ்ந்து வருகின்றனர்.

அனைத்துலக பத்திரிகையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. எமது செய்தியாளர் நிக்பற்றன் வேல்ஸ் கடந்த மாதம் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

பல ஆயிரம் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்று வரும் வவுனியா மருத்துவமனைக்குள் பத்திரிகையாளர்கள் செல்வதற்கும் அனுமதிகள் வழங்கப்படுவதில்லை.

எனினும் எங்கள் நிருபர்கள் இரகசியமாக சிறிய ஒளிப்படக்கருவியை அங்கு கொண்டு சென்று டாக்டர் ஒருவரை நேர்காணல் கண்டுள்ளனர்.

முகாம்களின் தரம் மிகவும் குறைவானது. காயமடைந்துள்ள மக்கள் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்தால் நாம் கொல்லப்படுவோம் என அரசு எங்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது என டாக்டர் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments