20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் விவாதம்: பான் கி மூன் முன்னிலை விளக்கம்

இலங்கையில் இடம்பெற்ற போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கலந்துகொண்டு இலங்கைப் போர் மற்றும் உயிரிழப்பு குறித்து விளக்கமளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொன்று குவித்தனர் என்று பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'த ரைம்ஸ்' நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

இதுபற்றிய உண்மைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவரின் சிறப்புத் தூதுவராக செயற்பட்ட இந்திய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோருக்கு தெரியும் என்றபோதிலும் அவர்கள் திட்டமிட்டே மூடி மறைத்ததாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சாட்டியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் இத்தயை போக்கிற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விளக்கமளிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், நடுநிலையாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சாதாரண முறையிலான விவாதம் நடைபெற இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை செல்வதற்கு முன்பு நடந்ததை போன்றே இந்த விவாதமும் நடைபெறும் என ஐக்கிய நாடுகள் சபை செய்திகளை வெளியிடும் 'இன்னர் சிட்டி பிறஸ்' தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கலந்துகொண்டு அண்மையில் தாம் இலங்கையில் மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்தும், இலங்கை இனப் படுகொலை குறித்து தமக்குத் தெரியவந்த செய்திகள் குறித்தும் விளக்கமளிப்பார்.

பான் கி மூனின் சிறப்பு தூதுவர் விஜய் நம்பியார் அண்மையில் இலங்கை சென்று திரும்பியதும் அப்பயணம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு விளக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகள் வலியுறுத்திய போதிலும் அதனை ஏற்று விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் பான் கி மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் முன்னிலை விளக்கமளிக்க முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் 20 ஆயிரம் தமிழர்களை சிங்களப் படையினர் கொன்று குவித்தனர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய்விட்டனர்.

இவை பற்றியெல்லாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியும் என்ற போதிலும் அதனை மூடி மறைக்க ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அதுபற்றி நாளை மறுநாள் கூட்டத்தில் பான் கி மூன் விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.

இலங்கை சிக்கல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நடைபெறும் கடைசி விவாதம் இதுவாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வட்டாரங்கள் கூறியதாக 'இன்னர் சிட்டி பிறஸ்' தெரிவித்தது.

ஆனால், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி வழங்க ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக் கொண்டிருப்பதாலும் அவற்றில் இருந்த 13 ஆயிரத்து 130 தமிழ் மக்கள் காணாமல் போய் இருப்பதாக புதிய சர்ச்சை எழுந்திருப்பதாலும் அது குறித்து விளக்கமளிக்கும்படியும் இதில் உண்மைகளைக் கொண்டுவர ஏதேனும் செய்யும்படியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் தரப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments