இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும் அரச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும் அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
ஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் தான் நாம் எமது மக்கள் பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.
மேலும் அனைத்துலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வந்து வதை முகாம்களுக்குள் வாடிய 13 ஆயிரத்து 130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.
காணாமல் போயுள்ள 13 ஆயிரத்து 130 தமிழர்களை மீட்டுத் தருக!
அரச கட்டுப்பகுதிக்கு சென்றடைந்த மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போய் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த நிலையில் இந்த மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போய் உள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியும் என பேரவை நம்புகின்றது.
இந்தப் பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபை
ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.
அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இந்த பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்த நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன்நின்று பாடுபடுகின்றன.
இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது. ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.
அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன், அவருடன் உள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் ஆகியோரும் மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது.
பிரித்தானிய மக்களுக்கான வேண்டுகோள்!
இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.
காணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்; வெளியேறிவந்த மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.
இந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு, காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க அனைத்துலகத்தை வலியுறுத்தவும், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பேரணி எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தவும் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.
முள்வேலியின் பின்னால் நின்று எமது மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments