இலங்கைக்குப் அனைத்துலக நிதியம் கடன் வழங்க ஒப்புதல் தரக்கூடாது: ஹிலறியிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சிறிலங்காவுக்கு அனைத்துலக நிதியம் (IMF) கடன் வழங்க ஒப்புதல் தரக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரனுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர்களான பட்றிக் லீகி, றொபேர்ட் கேசி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நீங்களும் மற்றவர்களும் எழுப்பிய முக்கியமான சிக்கல்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்த மறுத்துவரும் நிலையில், அந்நாட்டுக்குப் அனைத்துலக நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல் அளிப்பது தவறான அறிகுறியாக அமைந்துவிடும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அனைத்துலக உதவியைப் பெறுவதற்கு உலகச் சமுதாயத்தின் கவலைகளை சிறிலங்கா அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரைப்பது போல அது ஆகிவிடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மோதல் நடைபெற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கும் இடம்பெயர்ந்த மக்களிடம் நடத்தப்படும் ஆய்வுகளைப் பார்வையிடுவதற்கும் அனைத்துலக அமைப்புகளுக்கு அனுமதியளிப்பதன் மூலம் தனது கொள்கைகளை அது மாற்றியமைத்து வருகிறது என உலகத்துக்கு உறுதியளிக்கக்கூடிய குறைந்த அளவிலான நடவடிக்கைகளையாவது சிறிலங்கா அரசு பாரிய நிதி உதவியைப் பெறுவதற்கு முன்பாக எடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களை மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இடம்பெயர்ந்த மக்களை விடுவித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் சேருவதற்கு வழி செய்ய வேண்டும். மனக்குறையை வெளிப்படுத்துவோரை ஒடுக்குவதற்கு மாறாக விமர்சனம் தெரிவிப்பவர்களுடன் இணக்கம் காண வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதநேய மற்றும் மனித உரிமைச் சிக்கல் தொடர்பாக, ஒபாமா அரசின் கண்காணிப்புக்கு உரிய முதல் நாடாக சிறிலங்கா வர வேண்டும். அரச தலைவர் ஒபாமா மற்றும் உங்களின் பதில் நடவடிக்கை வலுவானதாகவும் கோட்பாட்டுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் மோதலின் இறுதி மாதங்களில் அப்பாவி மக்கள் பயங்கரமான அளவுக்கு இறந்துள்ளனர். அப்பாவி மக்கள் நெருக்கமாக இருந்த பகுதிகள் மீது அரச படைகள் கண்மூடித்தனமாகக் குண்டு வீசியதும் இதற்கு ஒரு பகுதிக் காரணம் ஆகும்.

அரச தலைவர் ஒபாமாவும், ஐக்கிய நாடுகள் சபையும் வேறு பல அரசுகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்கி வந்தது.

மோதல் பகுதியில் இருந்து தப்பி வெளியேறி வந்த அப்பாவி மக்களுக்கு உதவி செய்யவிடாமல் மனிதநேய உதவிக் குழுக்களை அது தடுத்து வந்தது. தனது நடவடிக்கைகளால் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்று, எல்லா சான்றுகளுக்கும் எதிராக இப்போதும் கூட சிறிலங்கா அரசு மறுத்து வருகிறது.

இத்தகைய நிலைப்பாடு, இணக்கம் ஏற்படுத்துவதை மிகவும் கடினமாக்கிவிடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்றிக் லீகி, றொபேர்ட் கேசி கேசி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

Comments