ஆழிப்பேரலையை விட ஆயிரம் மடங்கு பெரியதொரு பிரளயம் எமது மண்ணில் செயற்கையாக எழுந்து நிஜங்களைத் தோற்கடித்து எமது தூக்கத்தை ஒவ்வொரு இரவும் கெடுக்கும் ரணவடுவாக மாறிவிட்டது.
போரின் போக்கையே மாற்றிவிட்ட சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வேறு எம்மைத் துளைத்தெடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மௌனித்துப்போன அல்லது வேண்டுமென்றே மௌனத்தைக் கடைப்பிடிக்கின்ற அனைத்துலகத்தின் போக்கைக் கண்டித்து மேற்குலகின் குடிகளான தமிழர்கள் பரந்துபட்ட ஒற்றுமையின் மூலம் தாம் வதியும் நகரங்களில் போராட்டங்களை மீண்டும் மையப்படுத்தி விட்டனர்.
போராட்டத்தின் வடிவம் மாத்திரமல்ல இப்போது போராட்டத் தளமே மாற்றம் கொள்ளத்தொடங்கிய ஒரு புதுயுகமாக இந்த வருடம் பிறப்பெடுத்துள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த இளையவர்கள், மாணவர்களே இந்த போராட்டங்களை முன்னெடுத்துச்செல்ல முனைவது வரவேற்கத்தக்கது.
இனப் படுகொலையின் வேதனையின், மரணத்தின் கொடிய வலியை நேரடியாகப் பெற்ற, அதன் தாக்கத்தை வலுவாக உணர்ந்தவர்களாக நாம் மாற்றம் கண்டுவிட்டோம்.
நாம் வதியும் நாடுகளில் இந்தக் கொடிய வலியின் துயரைத் துடைக்க ஒரு மாற்று ஆதரவு அல்லது ஆறுதல் தரவல்ல வார்த்தைகளைப் பெறமுடியாத வலி எமது பொறுமையை சில வேளைகளில் கேள்விக்குறியாக்கி நகர்கிறது.
இந்த ஆறுதலுக்கான தேடலும் துயரப் பகிர்தலுக்கான ஆதங்கமும் அனைவரையும் ஒருமித்து எமது மக்களுக்கான குரலாக ஓங்கியொலிக்க வைத்தாலும் அது செல்கின்ற வழிகுறித்த செயற்திட்டம் ஒன்றுக்கான தேவையை நாம் தவறவிடாமல் பின்பற்ற வேண்டியது அவசியம் என்கிற செய்தியை இன்றுவரை நடைபெற்ற போராட்டங்கள்; எமது மேற்குலக சாத்வீகப் போராட்டங்கள் சுட்டி நிற்கின்றன.
மாற்றங்களை ஏற்க மறுக்கின்ற, மனிதாபிமானத்தை ஏளனப்படுத்துகின்ற உலகாக மாறியுள்ள மேற்குலகு கிடைக்கின்ற சாட்டுக்களை, நாம் மேற்கொள்கின்ற சில வழிமுறைகளை தனக்கான துணையாக்கி தட்டிக் கழிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதுடன். அதன் மூலம் எம்மை தவிர்க்கின்ற அல்லது தப்பிப் போகின்ற செயற்பாடுகளையும் சாமான்யமாகச் செய்து வருகின்றது.
எனவே தட்டிக் கழிக்கின்ற மேற்குலகின் மாற்றான் தாய் மனப்பான்மைக்கு நாமே உரமிடுவதாக எமது நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாது என்பதை மையப்பொருளாக எடுத்து எமது நடவடிக்கைகளை முன்நோக்கி நகர்த்த வேண்டும்.
போராட்டக்களம் புதிது. போராடும் நோக்கும் புதிது. எனவே நேச நிலையற்று போகும் தன்மையை ஏற்படுத்தி போராட்டத்தின் திசையை மாற்றும் பழியை நாமே செய்தவாகளாகக்கூடாது.
மாணவர்களிடம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் அவர்களின் விடுதலைக்கான வேகம் நிறையவே இருக்கிறது. அத்துடன், தற்போது நாம் இணைக்கவேண்டியது விவேகம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
விவேகம் இல்லாத வேகம் வலியை அதிகப்படுத்துமே தவிர வரவேற்பைப் பெறாது என்பதை அவர்களைச் சார்ந்துள்ளவர்கள் எடுத்துக்கூற வேண்டும்.
நட்புநிலையற்ற தன்மை மேற்குலகில் உள்ள தமிழர்களுக்கும் அவர்கள் வதியும் நாடுகளின் கட்டமைப்புக்களுக்கும் ஏற்படுமாயின் அதன் பயன்பெறுநராக சிறிலங்கா அரசாங்கமே இருக்கும் என்பதை கருத்திற்கொண்ட நட்புநிலையற்ற ஒரு தன்மையின் தோற்றத்தை ஏற்படுத்த எமது உணர்ச்சிகளுக்கு நாம் இடமளிக்கக்கூடாது.
எனவே போராட்டத்தின் நோக்கங்களும் அதற்கான வழிமுறைகளும் விரிவாக ஆராயப்படுமிடத்து ஆக்கபூர்வமான வழிமுறை அடையாளம் காணப்படலாம். அதுவே நிலையான ஒரு மாற்று வடிவத்தை தோற்றுவிக்க வழிவகுக்கும்.
அதாவது, எமக்கான தொடர்பாடல் புள்ளிகளை வலுவாக ஏற்படுத்தி எமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமே தவிர ஊடகங்கள் மூலமாக செய்திகள் சென்றடையும் என்கிற நிலையை மாற்ற வேண்டும்.
போராடிக்கொண்டிருக்கிற இனமாக இருந்தோம் என்பதை உள்வாங்கி இனி இராஜதந்திர அரங்கில் நாம் புதுவடிவோடு புகவேண்டிய காலம் இது என்பதையும், போர்க் குற்றவாளியாக எதிரியை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதையும் நாம் தற்போதுள்ள உண்மையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு இன்றைய நிலையில் எது தேவை என்பதை நாம் அலசி ஆராயாமல் தேவையில்லாத ஒரு முனைப்பிற்கு முன்னுரிமை கொடுத்து முட்கம்பிகளுக்குள் சிக்குண்டு நாளும் பொழுதும் இறந்து கொண்டிருக்கும் அந்த உறவுகளுக்கு இன்னமும் அல்லல்களைத் தரக்கூடாது. நாம் காலத்தின் தேவையை முக்கியப்படுத்தாமல் ஏதேதோ வழிகளில் எமது சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் விடும் சிறிய தவறுகளைச் சாட்டாக வைத்து மேற்குலக அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமது துன்பத்தில் குளிர்காய்வதற்கு நாம் இடமளித்து எமது போராட்ட நோக்கங்களின் மேல் மண் அள்ளிப் போடுகின்ற துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தக்கூடாது. நாம் அவ்வாறாக இருந்துள்ளோம் என்பதை சமீபத்திய காலம் கண்ணாடியாக எமக்கு காட்டி நிற்கிறது.
எமது வாக்குப்பலத்தை நம்பியிருக்கின்ற அல்லது எம்மால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் எமது வலியின் தார்ப்பரியத்தை உணராவிடின் நாம் அந்த நாட்டின் அரசின் மீது விடுக்கும் வேண்டுகோள் பயனற்றதாகிவிடும்.
எனவே நாம் போராட்டத்தை முன்னெடுக்கும் நகரங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான தாக்கத்தைப் பெற்று குரல் கொடுக்க எமது போராட்ட நடவடிக்கைகள் வழியேற்படுத்த வேண்டும்.
அத்தோடு, பல்லின சமூகம் சார்ந்த வாழ்வியலில் நாம் அவர்களின் ஆதரவை எமக்குப் பக்கபலமாக்குவதற்கான வகையிலான போராட்ட வடிவங்களையும், அந்த நகரங்களின் சட்ட, நிர்வாகக் கட்டமைப்புக்களின் ஆதரவுடன் எமது நோக்கின் வடிவங்கள் முன்னெடுக்கப்படுவதையும் தூரநோக்காகக் கொண்டால் மாத்திரமே மேற்குலகில் வெளிப்படுத்தப்படும் பலத்தின் விளைச்சலை நாம் பெறலாம்.
யதார்த்தத்தில் இருந்து எம்மை நாமே புறம் தள்ளாமல் உண்மைகளை ஆராய்ந்தோமானல் போராட்டம் என்ற சொற்பதத்தின் அர்த்தத்தை இராஜதந்திர உறவாடல் என்ற பதத்தை நோக்கி நகர்த்தி எமது மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தருவதே இப்போது எம்மால் முடிந்த ஒரேயொரு வழி.
மாயைகளில் இருந்து வெளிவந்து யதார்த்தத்தை உணர ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் முதலில் திடம் பூண வேண்டும். அதுவே ஒரு பெரிய வெற்றியாக எமக்கு அமையும்!
உண்மையை உள்ளபடி உரைக்க சிலர் தயங்கலாம் அல்லது அவ்வாறு நாம் உண்மையை உணர்ந்தால் தங்கள் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என அஞ்சலாம்.
ஆனால், அதற்கான பலிக்கடாவாக நாம் இழந்த உறவுகளையும், நாளாந்தம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளையும் ஆக்கக்கூடாது. அவர்களில் முட்கம்பிகளுக்குள் வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் அல்ல. எனவே தயவு செய்து யதார்த்தத்தை உணருங்கள். உள்வாங்குங்கள்.
மரணத்தின் வலியும், அங்கவீனர்களாக்கப்படும் ஆயிரக்கணக்கான உறவுகளின் உயிர்க்காப்பும், பொஸ்பரசால் பொசுங்கிப் போய் உள்ளவர்களின் காயங்களின் வேதனைகளும் எமது பொறுமைக்கான தேவையைக் குறைக்கின்றன.
ஏதோ வெற்றுடம்பு நடமாடுவது போல நாம் நடமாடுகிறோம். இருப்பினும் எமது பங்களிப்பிற்கான பயனை நாம் பெறுவதற்கான வகையில் எமது போராட்ட வழிகளை நாம் மாற்றியே ஆக வேண்டும். மாற்றங்கள் மாத்திரமே மாறாமல் இருக்கும் என்பது உலக ஒழுங்கின் நியதி.
மாற்றுக் களம் புதிது. மாற்றத்தின் தேவையும் புதிது. அதனோடு எழுந்து நிற்கிற இராஜதந்திரத்திற்கான அவசியமும் புதிது. அதற்கான புரிதலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் கூடப் புதியவை. இவற்றைக் கருத்திற் கொண்டால் எமது எழுச்சியின் தாக்கம், வீச்சு பாரிய மாறுதல்களை மேற்குலகில் ஏற்படுத்தும்.
இந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும். உங்கள் கருத்துக்களை அனுப்ப: srajawarman@gmail.com
Comments