புலிகள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஜனநாயக மறுப்பை ஏராளமான புலம்பெயர் நண்பர்கள் கண்டித்து எழுதி வந்தனர்.
பெரும்பாலான புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை அரசு முன்னெடுத்த வன்னி மீதான போரை புலிகளுக்கு எதிரான போராக மட்டுமே பார்த்தனர். புலி எதிர்ப்பால் உருவான கோபத்தைச் செரித்துக் கொள்ள கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களின் கொலைகள் குறித்துப் பேச மறுக்கின்றனர். மௌனமாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ ஈழத்தில் இனப்படுகொலை நடக்கவே இல்லை என்கின்றனர். (எடுத்துக்காட்டு சுசீந்திரன் நேர்காணல் புதுவிசை)
இலங்கை அரசின் வெற்றியை தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும். புலிகளின் தோல்வியை தங்களின் எதிரிகளுக்குக் கிடைத்த தோல்வியாகவும் பார்க்கின்றனர். இந்நிலையில் ஒரு சமூகத்தின் மீது அவலமும் அவ நம்பிக்கையும் கவிழ்ந்துள்ள சூழலில் புலிகளின் தமிழக ஆதரவாளர்கள் குறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டாக வேண்டும். ஏனென்றால் அவர்களின் வீழ்ச்சியில் தமிழகத்துக்கு கணிசமான பங்குண்டு என்பதே எனது எண்ணம். அதீதமான நம்பிக்கையை விதைத்து போராட்டத்தை போராட்டமாக மாற்றாமல் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்ட சூழலையும் தமிழகத்தில் பார்க்க நேர்ந்த சூழலில் மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் முடக்கப்பட்ட புலிகளை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மனதளவில் மிகவும் பாதித்ததும் தெரியவருகிறது.
ஈழத்தில் இனப்படுகொலைக்கு எதிரான ஆதரவுக் குரல் முதன் முதலாக எழுந்தது தமிழகத்தில்தான். அதன் முதல் உணர்வெழுச்சிதான் முத்துக்குமாரின் தீக்குளிப்புத் தியாகம். கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருபெரும் அரசியல்வாதிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்த முத்துக்குமாரின் மரணசாசனம் அன்றைக்கு அனைத்து அரசியல் தலைவர்களாலும் மறைக்கப்பட்டது. ஏனென்றால் தமிழக ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவருமே ஜெ,கருணாநிதி என்ற இரு அரசியல் தலைமைகளின் கீழும் கூட்டணி வைத்திருந்தனர்.
என் உடலைக் கைப்பற்றி போராட்டத்தை கூர்மையாக்குங்கள் என்ற முத்துக்குமாரின் சாசன வரிகள் வெளியில் அரசியலாவதை ஈழ ஆதரவுத் தலைவர்கள் விரும்பவில்லை.தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று அதை மறைத்தும் திரித்தும் வாசித்தார்கள். அதிலிருந்த ஜெயலலிதா பற்றிய கருத்தை எடுத்து விட்டு புதிய மரணசாசனத்தை வெளியிட்டனர் சிலர். கருணாநிதி பற்றிய கருத்துக்களை எடுத்து விட்டு வெளியிட்டனர் கருணாநிதியின் ஆதரவாளர்கள். வெகு வேகமாக புதைக்க நடந்த முயw;ச்சிகள் முறியடிக்கப்பட்டு மாணவர்களும் வழக்கறிஞர்களும் முத்துக்குமாருக்கு எழுச்சியான ஒரு வீரவணக்க ஊர்வலத்தை வழங்கியதை சில அரசியல் சக்திகள் விரும்பவில்லை. அல்லது முத்துக்குமாரின் அரசியலை மழுங்கடித்து அதை ஒரு தமிழுணர்வாளரின் வீரமரணம் என சுருக்கிக் கதைத்தனர்.
நெடுமாறன், வைகோ, ராமதாஸ், திருமா, பிஜேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்ததுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை. ராமதாஸ் அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அதிகாரத்தை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். திருமா திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் எதிர்ப்பால் அவர் ஈழம் என்ற கொள்கையால் மூன்றாவது அணி அமைக்க விரும்பினார்.ஆனால் கருணாநிதி மீதான விமர்சனங்களை மிக சாதுர்யமாக பிரயோகித்தார். இந்நிலையில் தான் முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டி எழுந்த அலையில் பொதுவாக தேர்தல் அரசியல்வாதிகளுக்கு எதிரான உணர்வலைகள் கிளர்ந்தது.
கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமா என அனைவரையுமே கடுமையாக கண்டித்தனர் அங்கு திரண்டிருந்தவர்கள். அதன் பல் வேறு வெளிப்பாடுகளை அங்கே கண் கூடாக காண முடிந்தது. திமுகவின் வி.எஸ்.பாபு தாக்கப்பட்டதும் இந்த மனநிலையில்தான். ஈழம் பற்றிக் கருத்துச் சொன்ன ராமதாஸோ அதை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். கருணாநிதி துரோகம் செய்து விட்டதாகச் சொன்னார். ஆனால் கடைசி வரை மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து ராமதாஸ் வெளியேறவே இல்லை. காங்கிரஸ் அரசை கண்டிக்கவும் இல்லை மென்மையாக கோரிக்கைகள் விடுப்பதோடு நிறுத்தியும் கொண்டார். வைகோவோ ஜெயலலிதா மனம் புண்படாதவாறு பேசினார். போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜே வின் கருத்தை மௌனமாக கண்டும் காணாமல் விட்டார் வைகோ. திருமாவோ மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்தார் ஆனால் கருணாநிதியை ஈழ விவகாரத்தில் அவர் விமர்சிக்கவே இல்லை.
இப்படியாக செய்கூலி சேதாரம் இல்லாமல் நடந்த தமிழகத் தலைவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டம் கடைசியில் போயஸ்கார்டனில் போய் தேர்தல் ஆதரவோடு முடிந்தது. திருமா காங்கிரஸ் கூட்டணில் சமரசம் செய்து கொண்டு சேர்ந்தார். பாவம் ஈழத் தமிழர்கள் தமிழக மக்களே தங்களுக்காக திரண்டு போராடுவதாகவும் தமிழக தலைவர்கள் தங்களை கைவிட்டு விட மாட்டார்கள் என்று நம்பினார்கள்.
இயல்பாக எழுந்த போராட்டத்தை வீணடித்து அதை ஒரு சடங்காக மாற்றுகிற போராட்டமாக மனுக்கொடுகிற, கோரிக்கை எழுப்புகிற போராட்டங்களாக மாற்றப்பட்டது. அதே நேரம் திமுக தனது ஆதரவாளர்களை வைத்து உருவாக்கிய இலங்கைத் தமிழர் நலப் பேரவைக்கோ யாருக்கு எதிராகப் போராடுகிறோம்? என்ன கோரிக்கை? என்று எதுவும் இல்லாமல் இருந்தது. எல்லா ஊர்வலங்களிலும் திமுக தலைவர்களும் காங்கிரஸ் காரர்களும் சேர்ந்தே ஈழத் தமிழனுக்கான ஊர்வலம் போனார்கள்.
தாழாது... தாழாது தமிழினம் யாரையும் தாழ்த்தாது.... இதுதான் அவர்களின் கோஷம் இதன் பொருள் யாருக்காவது புரிகிறதா? இப்படி மொண்ணையான கோஷங்களை தெருக்களில் எழுப்பிச் செல்வதால் ஈழத் தமிழனுக்கு என்ன விடிவு ஏற்படப் போகிறது என இவர்கள் யாராவது நினைத்துப் பார்த்தார்களா? திமுகவின் இலங்கைத் தமிழர் நலப் பேரவையின் ஒரே நோக்கம் பழ. நெடுமாறன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையை உடைக்க வேண்டும் அல்லது அவர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதுதான். அந்த அமைப்பு நடத்திய ஊர்வலங்களின் கருணாநிதி, ஸ்டாலினைப் புகழ்ந்து கோஷங்கள் ஒலித்ததைத் தவிற ஈழத்தின் மீதான தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காக பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் காழ்ப்பைக் கொட்டியதைத் தவிற வேறு எதுவும் செய்யவில்லை கருணாநிதி. ராஜிநாமா நாடகம், உண்ணாவிரதம் என ஒரு நாடகத்தின் பல அத்தியாயங்களாக இவைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் திருமா தவிர அப்படியே அந்த அணி அதிமுக கூட்டணிக்குப் போக இதற்குமேல் திமுகவின் இலங்கைத் தமிழர் நலப் பேரவைக்கு அவசியம் இல்லாமல் போனது. அந்தவகையில் அந்த அஸ்திரத்தின் தேவை அவ்வளவே. தவிரவும் நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை நீர்த்துப் போகத் துவங்கியது முத்துக்குமார் தீக்குளித்து இறந்த போதே துவங்கிவிட்டது.
இதற்கப்பாலும் திமுக தன் பலதரப்பட்ட ஆதரவாளர்களையும் இலங்கைத் தமிழர்களுக்காக களத்தில் இறக்கியிருந்தது. தமிழகம் முழுக்க சோனியாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது,மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான உணர்வலைகள் மாநிலம் முழுக்க சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க போலீஸ் அராஜகத்தின் மூலம் அதை ஒடுக்கியது காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு. இதற்கிடையில் திமுக தன் அனுதாபிகளை உசுப்பி விட்டு சில பேரணிகளை நடத்தி இளைஞர்களை குழப்பும் வேலையும் நடந்தது. அதற்காக அவர்கள் கண்டு பிடித்த ஒரு கருவிதான் அமைதிப் பேரணி. கோஷங்கள் இல்லை, கோரிக்கைகள் இல்லை யாரையும் திட்டவும் வேண்டாம் அரசியலும் பேச வேண்டாம்... அதனால் அமைதியாக பேரணி செல்வோம் என்று ஈழத் தமிழர்களுக்காக சிலர் பெரும் நிதி உதவியோடு போராடினார்கள். சோனியா, காங்கிரஸ் மனம் புண்படாமல் போராடுகிற இந்த யுத்தியை இன்று தமிழகத்தில் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழகத்தில் நடக்கும் ஊர்வலங்கள் இரண்டு விதமாக நடக்கின்றன. மத்திய அரசின் மீது வெறுப்படைந்துள்ளவர்கள் ஊர்வலம் செல்லும் போது பெரும் எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. மத்தியிலும் மாநிலத்திலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நட்புச் சக்திகளோ எந்த கோஷங்களும் போடாமல் அமைதியாக ஊர்வலம் போகிறார்கள். அமைதிப் பேரணி என்றும் அஞ்சலிப் பேரணி என்றும் அதற்கு பெயரும் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தின் ஆளும் தலைமை பொறுப்பேற்று எதுவுமே செய்யாததோடு புலிகள் பற்றிய கடும் விமர்சனங்களை வெளிப்படையாகவே காலமறியாது சொன்னது. போரில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த புலிகள் தங்களுக்கு தமிழக ஆளும் தரப்பில் ஆதரவில்லை என்பதோடு கெட்ட நேரத்தில் வைக்கப்பட்ட இந்த விமர்சனங்களை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.‘பிரபாகரன் கைது செய்யப்பட்டால் போரஸ் மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்றும் பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்றும் ராஜீவ் கொலையின் மூலம் தவறிழைத்து விட்டார்கள் என்றும் தொடர்ந்து கருணாநிதி பேசினார். தமிழ்ச் செல்வன் படுகொலையின் போது கவிதை எழுதிய ஒரு தலைமை இவ்விதமாய்ப் பேசும் என்று புலிகள் எதிர்பார்க்க வில்லை. இன்னொரு பக்கம் ஈழ அலை தேர்தல் அலையாக மாற்றப்பட்டது போன்ற தோற்றத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த ஈழ ஆதரவு நண்பர்கள் நாற்பதிலும் வெற்றி பெறுவோம் என்று நினைத்தார்கள். அதே நினைப்பை நம்பிக்கையாக புலிகள் தரப்பிற்கும் தெரிவித்திருந்தார்கள். நானும் உண்மையில் அப்படியே நினைத்தேன். போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோறும் என்று நினைத்திருந்தேன்.
ஈழத்தின் மீதான தமிழக மக்களின் எழுச்சி என்பது ஒரு புயல் என்றும் இந்தப் புயலுக்கு முன்னால் பணம், அதிகாரம் என எதுவும் எடுபாடாது என்றும் நம்பினோம். ஆனால் கசப்பானதாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஏனைய எல்லா தேர்தலையும் விட 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே பெரும் கோடீஸ்வர முதலாளிகளை தங்களின் வேட்பாளர்களாக களம் இறக்கியிருந்தார்கள். கோடிகளைக் கொட்டி எந்த வேட்பாளரால் செலவு செய்து தாக்குப் பிடிக்க முடிடுமோ அந்த வேட்பாளருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்கப்பட்டது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமாகா ஆகிய நான்கு கட்சிகளின் வேட்பாளர்களுமே பண முதலைகள். இவ்விதமாய் தேர்தல் முடிவுகள் நம் விருப்பத்தையும் மீறி திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது என்பது பொதுவான வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளையும் குறிவைத்து வழக்கறிஞர்கள், திரைத்துறையினர், மாணவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். முடிவுகள் மே மாதம் 16&ஆம் தேதி சனிக்கிழமை வெளியான போது அது பொதுவான ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கும் ஈழப் புயலில் இந்தத் தோணிகள் தள்ளாடி தவிடு பொடியாகிவிடும் என்ற பொதுவான கருத்து பொய்யானது. விஜயகாந்தின் தேமுதிக இந்தத் தேர்தலில் காணாமல் போகும் என்று எதிர்ப்பார்த்தனர். அவரை தனியாக போட்டியிட வைப்பதன் மூலம் கணிசமான வாக்கு வங்கியைப் பிரித்து அதை வெற்றியாக தாங்கள் அறுவடை செய்யலாம் என்கிற காங்கிரஸ் கூட்டணியின் கணக்குதான் கடைசியில் வென்றது.
எங்கெல்லாம் கோடீஸ்வர வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு பணம் கொட்டப்பட்டதோ? எங்கெல்லாம் இவர் தோற்கடிப்பட்டே ஆக வேண்டும் என்று செலவு செய்யப்பட்டதோ அங்கெல்லாம் மிக அதிக எண்ணிக்கையில் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தது. தவிறவும் தனி ஈழம் பெற்றுக் கொடுப்பேன் என்ற ஜெயலலிதாவின் பேச்சை தமிழக மக்கள் நம்பவில்லை. தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு பேசினால் நம்புவார்கள். ஆனால் ஜெயலலிதாவோ இப்போது இலங்கையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் எனப் பேசுகிறார். அதை இப்போது பத்தாயிரம் கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட ஒரு நிவாரணப் பிரச்சனையாகப் பார்க்கிறார் ஜெ. கருணாநியும் இப்போது ஈழப் பிரச்சனையை நிவாரணப் பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்.
அப்படி என்றால் ஈழம் ஒரு பிரச்சனையே இல்லையா? பிரச்சனைதான் தமிழக மக்களின் பல் வேறு அடிப்படை பிரச்சனைகளை விட உணர்வு ரீதியான பிரச்சனை. அது எல்லாத் தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. ஆனால் பத்திரிகையாளர்கள் எப்படி ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு வங்கிய பணத்துக்கு எழுதுகிறார்களோ? இலங்கைத் தூதரகம் கொடுக்கிற பணத்துக்காக ஈழத் தமிழர்களுக்கு எப்படி தமிழக ஊடகவியலாளர்கள் துரோகம் செய்து வாங்கிய பணத்துக்காக சிங்களனுக்கு நம்பிக்கையாக இருந்தார்களோ, ஆளும் கட்சிக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு சொந்தக் கட்சிக்கு வேலை செய்யாமல் எதிர்கட்சி பிரமுகரிடம் வாங்கிய பணத்துக்கு நம்பிக்கையாக இருந்தார்களோ அப்படித்தான் வாக்காளர்களும் அவர்களும் வாங்கிய பணத்துக்கு உண்மையாக இருந்தார்கள். இன்றைய உலகில் சுயமரியாதை அழிந்த நிலையில் நாம் அனைவருமே காசு கொடுத்து வாங்கும் பண்டங்களாக மாற்றப்பட்டிருகிறோம். மக்கள் போலியான பழம் பெருமைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அரசியல் வீழ்ச்சியும் பொருளாதார சுரண்டலும் அவர்களை வெகு வேகமாக சோற்றால் அடித்த பிண்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
முதலில் வறுமையை பரிசளித்து பின்னர் பிச்சை போடுகிற சூழல்தான் இன்றைய தேர்தல் நடைமுறை. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்தை தேர்தல் அறுவடையாகச் செய்யலாம் என்று நினைக்கிற ஈழ ஆதரவுத் தலைவர்கள் அதற்காக தமிழக மக்களைச் சந்தித்தார்களா? என்றால் ஈழத்துக்கான போராட்டம் மக்கள் போராட்டமாகவோ பேரெழுச்சி போராட்டமாகவோ மாற்றப்படாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒட்டுச் சீட்டுப் பிரச்சாரமாகப் பார்க்கப்பட்டதும் ஈழப் பிரச்சனை தேர்தலில் பிரதிபலிக்காமல் போனதற்கு ஒரு காரணம். பேரழிவு நடந்து முடிந்து விட்ட இந்தச் சூழலிலும் இவர்கள் தொடர்ந்து மக்களைச் சந்திக்க வேண்டும் என்றோ மக்கள் இயக்கம் கட்ட வேண்டும் என்றோ நினைக்கவில்லை. அவ்வப் போது பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவாரம் uh[gf;] இந்தியாவுக்கு வரும் போது ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டமோ, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமோ நடக்கலாம் அதை தமிழக போலீஸ் நசுக்கும்.
ஆகச் சீரழிந்த தேர்தல் அரசியல் நிலையிலிருந்து ஓட்டு வங்கி அரசியலின் மூலம் ஈழத்தில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்றோ, சந்தர்ப்பவாத கூட்டணி அரசியலில் பங்கெடுத்து மத்தியில் ஆட்சியதிகாரத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஈழத்துக்கான தீர்வைப் பெற முடியாது என்பதோ இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். காங்கிரஸோ, பி.ஜே.பி. யோ யார் வந்தாலும் ஈழத்தில் இந்தியாவின் பிராந்திய சுரண்டல் நலன் மட்டுமே பேணப்படும் என்பதை இவர்கள் ஏன் கவனிக்கத் தவறுகிறார்கள். இந்தியா என்கிற பேரினவாத முதலாளித்துவ பார்ப்பன அரசை காங்கிரஸ் என்றோ பி.ஜே.பி என்றோ பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் இந்த தேர்தல் அரசியலில் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் சாதுர்யம் அதற்குள் ஒழிந்திருக்கிறது.
ஈராக்கின் மீதான ஆக்ரமிப்புப் போர் எப்படி மேற்குலகிற்கு மத்திய கிழக்கில் ஒரு சந்தையை மீள் கட்டுமானம் என்கிற பெயரில் உருவாக்கிக் கொடுத்ததோ. ஆப்கான் மீதான ஆக்ரமிப்புப் போர் எப்படி ஆசியாவில் ஒரு மீள்கட்டுமான சந்தையை இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு உருவாக்கிக் கொடுத்ததோ அதே சந்தை இன்று மீள்கட்டுமானம் என்கிற பெயரில் ஈழத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய முதலாளிகளை முதலீடு செய்ய வரவேற்பதாக அறிவிக்கிறார் uh[gf;]? திறந்து விடப்பட்டுள்ள சந்தையை அனுபவிப்பதிலும் ஏக போகமாக யார் எடுத்துக் கொள்வது என்பதிலும் தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கட்டுமான நிறுவனங்கள் எல்லாமே ஈழத்தை குத்தைகைக்கு எடுப்பதற்காக கழுகுகளைப் போல காத்துக் கொண்டிருக்கினறன. அப்படி ஒரு சந்தையை உருவாக்க இந்திய, இலங்கை கூட்டுப் பேரினவாதிகள் கொடுத்த விலைதான் ஈழ மக்களின் இத்தனை ஆயிரம் மனித உயிர்கள். சீனாவும், பாகிஸ்தானும் இந்தப் போரின் பங்காளிகள் என்பதை மறைப்பதோ அவர்களை உத்தமர்கள் என்று சொல்வதோ நாம் செய்யும் இன்னொரு துரோகமாகும்.
இந்த அப்பட்டமான ஆக்ரமிப்புப் போரின் தன்மையை மறைத்து தன் சொல்படிக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் நான் ஈழத்துக்கு இராணுவத்தை அனுப்புவேன் என்பது எவளவு தந்திரமான பேச்சு. இவர்கள் பல்லாயிரம் மக்கள் இரத்தச் சேற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அதில் முத்தெடுக்க நினைத்தவர்கள். கருணாநிதியோ ஜெயலலிதாவோ இதற்கு விதிவிலக்கல்ல, இவர்கள் அனைவருமே ஈழ மக்களை பகடைக் காயாக்கி ஆடியவர்கள்தான். அந்த ஆட்டத்தின் இறுதி முடிவு வெற்றி தோல்வி என்ற இரு முடிவாக எழுதப்பட்டு அதை ஈழத்துக்கான ஆதரவோடு முடிச்சிடப் பட்டது. மக்களும் போராளிக் குடும்பங்களும் ஒட்டு மொத்தமான அழிந்து கொண்டிருக்க 15‐ &05&‐2009 அன்று பழ.நெடுமாறன் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது.
அவசரம்:
பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை
போராட தயாராகுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்ககை.
இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது. அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்றன.இந்த கொடுமையைத் தடுத்து நிறுத்த முன் வராமல் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே தமிழக மக்ள் ஒன்று திரண்டு கொந்தளித்துப் போராடத் தயாராகுமாறு வேண்டிக் கொள்கிறேன். மற்ற தலைவர்களையும் அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து நாளைப் போராட்டத் திட்டத்தை அறிவிக்கிறேன்.
என்றது... ஆனால் கடைசி வரை போராட்டத்திற்கான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. தேர்தலில் கிடைத்த தோல்வி அன்றைய அவசரச் சூழலில் ஈழத்துக்காகப் போராட இவர்களைத் தூண்டவில்லை. முள்ளியவாய்க்காலில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பிறகு போரில் பிரபாகரன் மரணமடைந்ததாக வந்தச் செய்திகளைத் தொடர்ந்து எழுச்சிப் பேரணியை சென்னையில் நடத்தினார்கள். ஆனால் அந்தப் பேரணி நடந்த போது. முள்ளியவாய்க்காலில் வெறும் துடைத்து ஒதுக்கப்பட்ட சிதிலமான ஒரு மயான பூமி மட்டுமே எஞ்சியிருந்தது. மனிதர்கள் இருந்ததற்கான தடையங்கள் மட்டுமே இருந்தது.
16&ஆம் தேதி சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது அந்த தோல்வி முடிவுகளின் தொடக்கம்தான் ஈழ ஆயுதப் போராட்டத்தின் கசப்பான முடிவின் தொடக்கமாகவும் இருந்தது. அதைத்தான் ராஜபட்சே இப்படிச் சொல்கிறார். சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்தே எனது வெற்றியமைந்தது ஆமாம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட சோனியாவின் இந்த வெற்றியே மிகப் பெரிய காரணமாக அமைந்து விட்டது. ஏதோ ஒரு வகையில், தமிழக வாக்காளர்களும், தமிழக தலைவர்களும், மாநில அரசுமே இதற்குக் காரணம்.
-பொன்னிலா
தொடரும்...
Comments