![](http://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/06/130609a03.%20copy.jpg)
ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.ஊர்வலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் ராஜபக்ச உருவ பொம்மை தூக்கிலிட்டபடி கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை சென்றடைந்தது. அங்கு ஈழத்தில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மேடையில் பெரிய மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 50 ஆயிரம் தமிழர்கள் இறந்ததற்காக 50 மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருந்தன. மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.தொல் திருமாவளவன், வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரிய மலர்வளையம் வைத்து, பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். வீரவணக்கம் வீரவணக்கம் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கும், களப்பலியான ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம்.
சாகவில்லை சாகவில்லை, பிரபாகரன் சாகவில்லை என்று தொல்.திருமாவளவன் முழக்கமிட்டார். அதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று முழக்கம் செய்தனர்.அப்போது தொல்திருமாவளவன் பேசியதாவது, ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழைப்பயல் ராஜபக்ச அண்டப்புளுகினான்.
கடந்த ஜனவரி 2ம் திகதி கிளிநொச்சி பகுதியை இராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன். அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்துபேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15ம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன்.
இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன். நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து தமிழ் இன உணர்வால் பொங்கிய முத்துக்குமார் தீக்குளித்து உயிர் துறந்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ ஆகியோரிடம் தனி அணி அமைப்போம் என்று மன்றாடினேன்.
ஆனால் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் அ.தி.மு.க. அணியில் சேர்வதில்தான் குறிக்கோளாக இருந்தனர். அ.தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஈழத்தை ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தலுக்கு பிறகு ஈழத்தமிழர்கள் பற்றி பேசவே இல்லை.எங்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் எங்கள் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்பிறகுதான் நாங்கள் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றோம். தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்ததில் எந்த குற்றமும் இல்லை. சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றோம். ஓடுக்கப்பட்ட மக்கள் வாழவும், தமிழர்கள் தலை நிமிரவும் பாடுபடுவேன். ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
தேர்தல் பிரசாரத்திற்காக வந்த சோனியா காந்தியிடம் எப்படியாவது இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் இலங்கையில் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒருபொருட்டாக நினைக்கவில்லை. இலங்கைக்கு சீனா உதவுகிறது.
தா.பாண்டியன் போன்றவர்கள் சீனா உதவுவது பற்றி பேசமாட்டார்.நடேசன், புலித்தேவன், சாள்ஸ் அந்தோணி ஆகியோர் இறந்த பிறகுதான் எம்.கே.நாராயணன் இலங்கை சென்றார். அதற்கு முன் செல்ல எத்தனை முறை சொன்னோம் கேட்கவில்லை. நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4வது கட்ட போர் முடிந்து விட்டது.5வது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும். இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1.ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு பேரவையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
2.போர் மரபுகளை மீறி விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களான நடேசன், புலித்தேவன் கொல்லப்பட்டதற்கு சர்வதேச வல்லுனர்களை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.
3.3 இலட்சம் ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும்.
4.ராஜபக்சவை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். தமிழீழத்தை மீட்டுத்தர விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி
ஈழமுரசு(05.06.09)
www.tamilkathir.com
Comments