ராஜீவ்கொலைக்கு பழிவாங்கியாக வேண்டிய தேவையும், நினைவும் சோனியா குடும்பத்திற்கு இருந்திருக்கலாம். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்து மகாச்சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே ஒரு ஐக்கியம் ஏற்பட்டு அது தனது பிராந்திய நலனில் பேரிடியாக மாறும் கவலைகள் இருந்திருக்கலாம்.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக மோசமான முறையில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உபகரணங்களை வழங்கி வந்திருக்கிறது. கடந்த வருடம் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வன் படுகொலை செய்யப் பட்ட போது. நீண்ட நேரம் போராடி மண்ணுக்குள் புதைந்திருந்த அவரது உடலைத் தோண்டி எடுத்ததாக தகவல்கள் வந்த போது மிக மோசமான க்ளஸ்டர் குண்டு வீசப்பட்டதான செய்திகளை இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. க்ளஸ்டர், பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என பேரழிவு ஆயுதங்களோடு மக்களைத் துரத்தும் துணிச்சலும் தைரியமும் இலங்கைக்கு இந்தியா கொடுத்தது.வன்னி மீதான இராணுவ நடவடிக்கையில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட சோனியா தலைமையிலான இந்திய அரசே முழு முதற்காரணம்.
இன்று பல்லாயிரம் மக்களைக் கொன்று, போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து முள்ளியவாய்க்காலில் ஒரு நரவேட்டையை நடத்தி முடித்து விட்டது இலங்கை அரசு. தென்கிழக்கில் இன்று புதிய சந்தை ஒன்றை உருவாக்கி விட்டது இந்தியா.
ஒரு மாபெரும் இரத்தக் குழியலின் பின் இந்திய முதலாளிகளுக்கு அந்தச் சந்தையை பரிசளிக்கப் போகிறது இந்தியா. மீள்கட்டுமானம், புனர்நிர்மாணம் என்கிற பல பெயர்களால் இவர்கள் இதை அழைத்துக் கொண்டாலும் டி.வி.எஸ் நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள், ரிலையன்ஸ், எல்.என்.டி போன்ற நிறுவனங்கள் அங்கே முதலீடு செயவ்தற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. வடக்கில் தேர்தலை நடத்தி டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் இது மட்டுமே இப்போது ஈழத்தில் இன்னும் எஞ்சியிருக்கிறது. இதுவே மாட்சிமை தாங்கிய பாசிச வெறியர்; ராஜபக்ஸவின் திட்டமாக இருக்கிறது.
ஆனால் இது இந்தியாவோ இலங்கையோ நினைப்பது போலல்ல, ஆழமறியாமல் பெரும் புதைகுழியில் இந்தியா காலை வைத்துள்ளது. ஈழத்தின் மீதான கடந்த கால அனுபவத்திலிருந்து இந்தியா எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. புலிகளின் அழிவு அல்லது வன்னி மக்களின் வீழ்ச்சியை நிரந்தரமான அச்சுறுத்தலாக மாற்றி தனது காலனிப் பகுதியாக இலங்கையை நீண்ட காலத்திற்கு வைத்திருகக்லாம் என நினைக்கிறது இந்தியா.
ஆனால் மூன்று லட்சம் மக்களை அச்சுறுத்தி அழித்தொழித்தன் மூலம் உலகெங்கிலும் பத்து கோடிக்கும் மேலான தமிழ் மக்களின் வெறுப்பை கோபத்தை சம்பாதித்துள்ளது இந்தியா. இந்தியாவின் ஐக்கியம், ஒருமைப்பாடு, என பல் வேறு விஷயங்களில் இது மோசமான பின் விளைவுகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல்
ஆங்கிலமும், பிரெஞ்சும் பேசிக் கொண்டு தமிழே தெரியாமல் புலத்தில் வளர்ந்த இளம் தலைமுறை ஒன்று புலிக் கொடியை பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்து இடைவிடாது கலகம் செய்வதானது. இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கும் மன எழுச்சியே புதிய தலைமைமுறை கையிலெடுத்துள்ள இப்பிரச்சனை.
தமிழகத் தலைமைகளின் மீது அதிருப்தி அடைந்துள்ள தமிழக இளைஞர்கள் என உலகெங்கிலும் புதிய ஐக்கியத்துக்கான தேடலாக ஈழத்தை முன் வைத்து இப்போராட்டம் வடிவம் பெறலாம் எனத் தோன்றுகிறது.
ஆங்கிலமும், பிரெஞ்சும் பேசிக் கொண்டு தமிழே தெரியாமல் புலத்தில் வளர்ந்த இளம் தலைமுறை ஒன்று புலிக் கொடியை பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்து இடைவிடாது கலகம் செய்வதானது. இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கும் மன எழுச்சியே புதிய தலைமைமுறை கையிலெடுத்துள்ள இப்பிரச்சனை.
தமிழகத் தலைமைகளின் மீது அதிருப்தி அடைந்துள்ள தமிழக இளைஞர்கள் என உலகெங்கிலும் புதிய ஐக்கியத்துக்கான தேடலாக ஈழத்தை முன் வைத்து இப்போராட்டம் வடிவம் பெறலாம் எனத் தோன்றுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே இலங்கையில் பேர் இனவாதம் தமிழ் மக்களிடம் தன் குரூர குணத்தைக் காட்டிய போது தமிழர்கள் அரசியல் கிளர்ச்சி செய்யத் துவங்கினர். இதுவரை இந்த இனவாத நெருப்பில் வெந்த தமிழ் மக்கள் பற்றி வாயே திறக்காத சிலர். அல்லது அங்கு இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று பேசியும் எழுதியும் வந்த சிலர் இப்போது ஈழத்தில் எல்லாம் முடிந்து விட்டது. இருபதாயிரம் போராளிகளை இழந்து ஒரு இலட்சம் மக்களை இழந்து, மூன்று லட்சம் மக்களை அகதி முகாமுக்குள் முடக்கி விட்டு முப்பதாண்டுகளுக்குப் பிறகு நாம் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிபோம் என்கிறார்கள்.
உண்மையிலேயே ஈழப் போராட்டம் தொடங்கிய இடத்திற்கா வந்திருக்கிறது, ஈழத்தில் போராட்டம் துவங்கிய காலமென்பது இன்றைய காலத்தோடு ஒப்பிடக் கூடியதா? ஐம்பதுகளில் ஈழப் போராட்டம் ஈழத்தைத் தாண்டி வேறு எங்கும் பேசப்பட்டதில்லை. இன்று ஈழப் போராட்டம் பல வேறு விதங்களில் விவாதிக்கப்படுகிறது. தமிழகம் தழுவிய பிரச்சனையாக ஓரளவுக்கேனும் மாறியிருக்கிறது. புலத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு ஈழத்தை சர்வதேச சமூகம் பேசும் ஒரு பிரச்சனையாக மாற்றியிருக்கிறது. தொடங்கிய இடம் என்பது இதுவல்ல. அப்போது ஒப்பீட்டளவில் உயிர்களை இழக்கவில்லை.
அதே நேரம் அது ஒரு இந்தியாவின் பிராந்திய நலனுக்கான சீட்டு விளையாட்டுப் பிரச்சனையாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது ஆனாலும்.இச்சூழல் வெகுவேகமாக மாற்றம் பெரும் என்றே தோன்றுகிறது. தமிழகர்கள் இன்று தங்களின் சுமையாக அல்ல கடமையாக ஈழத்தைச் சுமக்கிறார்கள். அல்லது சுமக்க நினைக்கிறார்கள்.
ஆசியாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நீண்ட போராட்ட வரலாற்றைக் பொண்ட ஈழப் பிரச்சனை முன்னிலும் பார்க்க இந்து மகாசமுத்திரப் பிராந்திய அரசியலை பதட்டப்படுத்தும் ஒரு பிரச்சனையாக இருக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்த நிலைக்கு வந்து சேர ஈழ மக்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். வடுக்களும் அதிகம். முடமாக்கப்பட்ட அம்மக்களிடம் இனி போராடக் கேட்பதே அபத்தமான விஷயமாகப் படுகிறது. ஆனால் அதே சமயம் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கைக்கு வெளியில் உள்ள பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் கைகளில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழர்களிடமே உண்டு. தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாகச் செயல் படும் தலைவர்கள் இனியாவது இந்தப் பிரச்சனையை தீவீரமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்களின் கிளார்ச்சியிலேயே ஈழ மக்களின் வாழ்வுரிமை அடங்கியிருக்கிறது.
இன்று ஈழம் மூன்று கழுகுகளிடம் சிக்கியிருக்கிறது ஒன்று பேரினவாதப் பாசிச இலங்கை அரசு. இன்னொன்று இந்தியப் பேரினவாத அரசு, மூன்றாமவர்கள் மேற்குலகினர். இந்தப் பிரச்சனையை மனிதாபிமானப் பிரச்சனையாகப் பேசும் எல்லா நாடுகளுமே லாபம் கருதியே அங்கு தலையிடக் கோருகின்றன. உண்மையில் மேற்குலகம் இந்தப் போரை நிறுத்த நினைத்திருந்தால் இந்தியாவின் விருப்பத்தையும் மீறி இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தங்களின் தன்னார்வக் குழுக்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதைத்தான்.
அதாவது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வக் குழுக்களை அனுப்ப வேண்டும் என்பதுதான். இயர்க்கைப் பேரனர்த்தம் நேரும் போதும் யுத்த அழிவு ஏற்படும் போது தன்னார்வக் குழுக்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஆனாலும் அம்மக்களுக்கு உண்ண உணவோ உடையோ கிடைக்கும் என்பதால் நாம் இதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பது பற்றியோ பாரம்பரீயமான அவர்கள் வாழ்ந்த வன்னிக்குச் செல்வது பற்றியோ அதிகமாக யாரும் பேசவில்லை.
எல்லோரும் முகாம்களுக்குள் தன்னார்வக் குழுக்களை அனுமதிப்பது பற்றிப் பேசுகிறார்கள். இந்தப் படுகொலையில் ஓரளவுக்கேனும் உண்மைகளை வெளிக் கொணர்ந்த மேற்குலக ஊடகவியலாளர்களை யுத்தப் பகுதிக்குள் அனுமதிப்பதும் பாரம்பரீயப் பிரதேசங்களுக்கு மக்களை அனுப்புவதும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள், போராளிகள், மூத்ததலைவர்கள், சமயப் பணியாளர்கள் குறித்தும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். போர் நிறைவுற்றதாகச் சொல்லப்படும் 19ரூஆம் தேதிக்குப் பிறகு 13,000 க்;கும் அதிகமான மக்கள் முகாம்களில் இருந்து காணாமல் போனதாகத் தெரிகிறது. அப்படியானால் அவர்கள் எங்கு கொண்டு செல்லப் பட்டார்கள். அதற்கு முன்னர் மே மாதம் முழுக்க கரியமுள்ளியவாய்க்கால், வெள்ளை முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவளவு என்கிற விபரங்களை வெளிக் கொண்டு வரும் பொறுப்பு. மேற்குலக ஊடகவியலாளர்களுக்கு உண்டு. இந்திய விஷயத்தில் வட இந்திய ஊடகங்களையோ தமிழக ஊடகங்களையே எள்ளளவேனும் நம்ப முடியாத நிலை உள்ளது. இது ஊடகங்களின் இருண்டகாலம்.
போர்ப் பகுதிக்குச் சென்று முகாம்களுக்குள் சென்று சில அதிர்ச்சிகரமான உண்மைகளை (பாலியல் கொடுமை, பட்டினிச்சாவு, அச்சுறுத்தல், சுட்டுக்கொலை) வெளிக்கொணர்ந்த மேற்குலக ஊடகவியளார்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட போது இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியளார்களை தனது சொந்தச் செலவில் அழைத்துச் செல்கிறது இலங்கை அரசு. அதற்கு அவர்கள் இட்ட ஒரே நிபந்தனை தமிழை தாய் மொழியாக கொண்டிராத ஊடகவியளார்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவார்கள். என்பதுதான் அந்த நிபந்தனை தமிழகத்தில் உள்ள சில அக்கறையுள்ள ஊடகவியலாளர்கள் இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொண்டு விசா கேட்டபோது கட்டாயமாக அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.
ஈழம் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்ற எண்ணம் இருந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் நாளிதழின் சென்னை பொறுப்பளர் பகவான் சிங் இப்போது வன்னியில் இருக்கிறார். ஏற்கனவே ஜனவரியில் கிளிநொச்சி விழுந்த போது கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பகவான் சிங் ஒரு மாதம் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் சென்னைக்குத் திரும்பிய பிறகு டெக்கான் குரோனிக்கல் நாளிதழின் குரல் இலங்கை அரசு சார்பான ஒன்றாக மாற்றப்பட்டது. பா.நடேசனின் நேர்காணல் நிராகரிக்கப்பட்டு அந்தக் காலத்தில் ஏராளமான கருணாவின் நேர்காணல்கள் தமிழக ஊடகங்கள் முழுக்க வந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இதை வெளியிட வேண்டும் என்றோ வெளியிடக் கூடாது என்றோ நாம் எதுவும் சொல்வதற்கில்லை. பெருந்தொகையான போராளிகளும் மக்களும் கொல்லப்படும் சூழலில் புலிகளின் அரசியல்துறை பேச்சாளரின் நேர்காணலை ஒதுக்கிவிட்டு கருணாவின் நேர்காணலை எல்லா ஊடகங்களும் போட்டி போட்டு வெளியிட்டதன் நோக்கம் குறித்து கேட்பதை எனது தார்மீகக் கடமையாக நினைக்கிறேன்.
கடந்த வருடம் ஏப்ரல் 26ல் லண்டனில் ஓர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட டெக்கான் குரோனிக்கல் பகவான்சிங் தான் எண்பதுகளில் ஈழத்துக்கு மேற்கொண்ட பயணத்தையும். இயக்கப்பணத்தை நேரமையாக கையாண்ட பிரபாகரனின் நேர்மை பற்ரியும் பேசினார். அத்தோடு இலங்கையைப் பற்றி இந்திய இராஜதந்திரிகளிடம் கேட்டால், இலங்கையுடைய இறையான்மையும் ஐக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டும் ஈழம் சாரிவராது என்பார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்த ஜி பார்த்தசாரதி சரியாக ஆலோசனை வழிங்கி இருந்தால், இந்திராகாந்தி தொலைபேசியிலேயே ஜெ ஆர் ஜெயவர்த்தனவுக்கு சொல்லி தமிழர்களுடைய பிரச்சினையை முடித்திருக்கலாம். அந்த நேரத்தில் சென்னை பொலிஸ் பிரிவு போன்றிருந்தது ஜே ஆர் ஜெயவர்த்தனாவுடைய இராணுவம், என்று என்னிடம் ஒரு மதிக்கத்தக்க ஊடகவியலாளர் தெரிவித்தார். இன்று எத்தனையோ இளம் உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஈழம் தற்போது உருவாக்கப்பட்டு விட்டது என்றே நான் நினைக்கிறேன். பகவான் சிங்கை பழிப்பதோ இழிப்பதோ நமது நோக்கமல்ல எப்படி நாம் இருண்ட காலத்திற்குள் வாழ்கிறோம் என்பதை நினைவு படுத்தவே இதைப் பேசும் படியாயிற்று. தவிறவும் சமீபத்தில் பன்னாட்டு தமிழுறவு மன்றம் ஈழம் குறித்து சென்னையில் நடத்திய கருத்துறையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட பகவான்சிங் ஈழம் ஒன்றே இப்பிரச்சனைக்கு தீர்வு என்று பேசியிருக்கிறார்.
இந்திய அரசு, இந்திய ஊடகங்கள் ஆகியவற்றால் பெரும் நாசக்கேடு ஈழத் தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்டது. வட இந்திய ஆங்கில ஊடகங்கள் முள்ளியவாய்க்கால் படுகொலைகளின் போது நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கொடூரமான பிரச்சாரத்தை இந்திய முதலாளிகளுக்காக ஆங்கில ஊடகங்கள் முன்னெடுத்தார்கள்.
சரி ஆங்கில ஊடகங்கள்தான் தமிழ் மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். தமிழ் மக்களின் பணத்தில் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் தமிழ் பத்திரிகைகளாவது இந்தப் பிரச்சாரத்திற்கு எதிர்பிரச்சாரம் செய்திருக்க வேண்டாமா? ஆங்கில ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு மாற்றாக ஈழத் தமிழ் மக்களுக்காய் தமிழக தமிழ் ஊடகங்களும் எதுவும் செய்யவில்லை. அத்தோடு எந்தச் சூழலில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசவில்லை. சூசையும் நடேசனும் இறுதி நாட்களில் உதவி கேட்ட போது ஓடி ஒழிந்து கொண்டவர்கள் இப்போது. இந்தியாவின் தயவில் கலைஞரின் ஆதரவில் பிரபாகரன் தப்பி விட்டார் என்று செய்த துரோகத்தை மறைக்க தமிழ் மக்களுக்கு போதையூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐநாவோ, பான்கிமூனோ, விஜய்நம்பியாரோ எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் கண்கூடாக இலங்கையில் பார்த்தோம். பெருந்தொகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட அதை அமைதியான முறையில் மொனமாக பான்கிமூன் கழுத்தறுத்து விட்டார் கண்டித்து கேள்வி எழுப்பியிருந்தது. இன்னர் சிட்டி பிரஸ். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று என்று டைமஸ், சேனல் 4, லே மாண்டே ஆகிய இதழ்கள் எழுதின. இனப்படுகொலைக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஆவணங்கள் இவளவுதான்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரியான விஜய் நம்பியார் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மே மாதத்தில் மட்டும் இரண்டு முறை. ஒவ்வொரு முறையும் அவர் இலங்கைக்கு செல்வதற்கு முன்னரோ பின்னரோ இந்தியாவுக்கு வந்து டில்லியில் ஆலோசனை செய்து விட்டே சென்றார். குடைசியாகப் பேரழிவு நடந்ததாக நம்பப்படும் 18ஆம் திகதி டில்லியில் ஆலோசனை செய்து விட்டு கொழும்புக்கு சென்ற விஜய்நம்பியார் கொழும்பில் இருந்து வேறு எங்கும் செல்லாமல் நியூயார்க்கிற்குச் சென்று விட்டார்.
அதற்கு முன்னரான தனது இலங்கைப் பயணம் தொடர்பாக ஐநாவில் அறிக்கை சமர்பிக்க மறுத்திவிட்டார் நம்பியார். நம்பியார் கொழும்பு சென்று செயலற்று நியூயார்க் திரும்பிய அன்றுதான் புலிகளின் பிரதான தலைவர்கள் 18 பேர் துரோகத்தனமாகக் கொல்லப்பட்டார்கள். ஆனால் புலிகள் சில நிபந்தனைகளோடு பிரிட்டனிடமும், அமெரிக்காவிடமும் சில உறுதி மொழிகள் கேட்டது நம்பியாரின் மூலமாகத்தான். நம்பியாரின் தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்துக்கு ஆலோசனை வழங்கும் ஊதிய இராணுவ அறிவுரையாளர். தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தின் அறிவுரையாளர். அண்ணன் விஜய்நம்பியார் இந்திய வெளிவிகாரங்களோடு தொடர்புடைய அதிகாரி. வன்னி மக்கள் மீதான இன அழிப்புப் போரில் பங்காளிகளாக இருக்கும் இருக்க விரும்பும் ஒரு நாட்டைச் சார்ந்த ஒருவரை எப்படி இலங்கைக்கான தூதுவராக ஐநா நியமிக்கும்.
இந்தியாவின் பிராந்திய நிர்பந்தத்திற்குப் பணிந்து இந்தப் பிரச்சனையை பேரழிவோடு முடித்துக் கொண்டதாக நினைக்கிறது இந்தியாவும் இலங்கையும் ஆனால் ஈழப் போரில் அது இன்று புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவின் போர் வெறியும் பிராந்திய அடாவடித்தனமும்தான் தமிழக ஈழ மக்கள் சந்திக்கப் போகும் பெரும் சவால்கள். போர் முடிந்துவிட்டச் சூழலில் இந்தியா கண்டெடுத்த 13ரூவது சட்டத்திருத்தம் குறித்துக் கூட இந்திய, இலங்கை அரசுகள் பேச மறுக்கின்றன. 13ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை பிரித்து அதை செல்லாமல் ஆக்கிய இலங்கை குறித்த கேள்விகள் எதுவும் இந்தியாவிடமும் இல்லை துரோகத் தமிழ் தலைவர்களிடமும் இல்லை.
போருக்குப் பின்னர் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் பாரம்பரீய பிரதேசங்களுக்கு 180 நாட்களுக்குள் அனுப்புவதாக இலங்கை உறுதி கொடுத்திருப்பதாக இந்தியத் தரப்பு சொல்கிறது. ஆனால் இன்னும் மூன்றாண்டுகளுக்காவது அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்தால் மட்டுமே வன்னியின் மீதான இராணுவ ஆதிக்கம் சாத்தியம். அதுவரை வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உளவியல் ரீதியிலும் உடல் ரீதியிலும் ஊனமாக்கி வெறும் நடை பிணங்களாக பாரம்பரீய பிரதேசங்களுக்கு அனுப்பினால்தான் அம்மக்கள் இனி தமிழீழம் என்றோ தமிழர் உரிமை என்றோ பேச சாத்தியம் இல்லை. முப்பதாண்டுகளாய் ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்குள் வாழ்ந்த மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்ததை விட இராணுவத்தின் கீழ வாழ்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது.
எப்படி இன்று உலகெங்கிலும் விடுதலைப் புலிகளுக்கு புதிய எழுச்சியும் ஆதரவும் கிடைத்துள்ளதோ அது போல வன்னியில் மீண்டும் புலிகள் அரசியல் எழுச்சியைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிரபாகரன் தேவையில்லை. இன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் சக்தி பிரபாகரனுக்கு உண்டு. ஒரு புதிய எழுச்சியின் மைல் கல்லாக உருவாவதற்கு சாத்தியமுள்ள பிரபாகரன் என்ற அடையாளத்தை அவரது ஆதரவாளர்களே அழித்து விடுவார்களோ என்று தோன்றுகிறது. அவரை ஒரு எழுச்சியின் அடையாளமாக மாற்றி போராட்டத்தை தீவீரப் படுத்தியிருக்க வேண்டும். அதையும் தாண்டி அவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி யாரோ ஒரு ஈழத் தமிழனை போராடத் தூண்டும் என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே? போராட்டுவது ஒன்றுதானே இப்போது இம்மக்களுக்குத் தேவை.
இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் போது இரண்டு செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. ஒன்று சென்னையில் இருந்து செயல்பட்ட இலங்கைத் துணைத்தூதர் அம்சா ஈழம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த அலையை சிறப்பாக கையாண்டார் என்பதற்காக அவரை பிரிட்டனின் தூதுவராக நியமிக்கப் போகிறதாம் இலங்கை அரசு. அதாவது புலம்பெயர் நாடுகளின் போராட்டங்களை குழப்ப சரியான ஆளைத் தேர்ந்தெடுத்து பிரிட்டனுக்கு அனுப்புகிறது. இலங்கை அரசு.
அத்தோடு இதே அம்சா கருணாநிதியின் மகள் கனிமொழியை சந்தித்தும் பேசியிருக்கிறார். விரைவில் தமிழகத்திலிருந்து ஒரு குழுவை இலங்கைக்கு கருணாவின் தலைமையில் அனுப்புமாறு ராஜபட்சே கோரிக்கை விடுத்தை ஒட்டி இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது. முதன் முதலாக நடந்துள்ள இந்தச் சந்திப்பு வெளிப்படையாக பத்திரிகைகளில் புகைப்படங்களாக வந்திருக்கிறது. தேர்தலில் கிடைத்த வெற்றி கொடுக்கிற உற்சாகம் எல்லாவற்றையுமே சிறிது பயமுமின்றி வெளிப்படையாகவே செய்யத் தூண்டியிருக்கும்.
ஆமாம் திரைமறைவில் கருணாவின் ஆதர்வாளர்களும்..... பிரபாகரன் உயிரோடு தப்பிவிட்டார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறவர்களும் கடைசி நேரத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?
-பொன்னிலா
ஆமாம் திரைமறைவில் கருணாவின் ஆதர்வாளர்களும்..... பிரபாகரன் உயிரோடு தப்பிவிட்டார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறவர்களும் கடைசி நேரத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?
-பொன்னிலா
தொடரும்.....
Comments