தமிழீழ மக்களவை தொடர்பில் பிரித்தானிக் கிளையின் ஊடக அறிக்கை

14.06.2009

பிரித்தானியக் கிளையின் ஊடக அறிக்கை

உலகப் பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழீழ மக்களவைகளை, புலம்பெயர் தேசங்கள் தோறும் நாடுவாரியாக நிறுவுவதற்கான திட்டம் ஒன்று அனைத்துலகத் தொடர்பகத்தினால் கடந்தவாரம் முன்மொழியப்பட்டது.

இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியக் கிளை தற்போது இறங்கியுள்ளது.

தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டு, தனித்துவமான கலைகளையும், பண்பாட்டையும், வரலாற்றையும், பொருண்மிய வாழ்வையும் தன்னகத்தே கொண்டமைந்த தேசிய இனமாக விளங்கும் ஈழத்தமிழர்கள், வரலாற்றுக்கு முன்னைய காலம்தொட்டு தலைமுறை தலைமுறையாக ஈழத்தீவில் தாம் வாழ்ந்து வரும் வரலாற்றுத் தாயகமாகிய தமிழீழ மண்ணில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு இசைவாக விளங்கும் தமக்கேயுரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சாதி, சமய, பெண்ணடிமைத்துவ, வர்க்க ஒடுக்குமுறைகள் நீங்கிய சமதர்ம தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான மக்கள் ஆணைக்கு வழிவகை செய்துகொடுத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வழிகாட்டலில், தமது அரசியல் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான சனநாயகக் கட்டமைப்பாக, தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இவ்வாறான அவைகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உத்தேச தமிழீழ மக்களவைகளின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், பன்மைத்துவத்தையும், தாராண்மைத்துவத்தையும் நிலைநிறுத்தும் நீதியான - சனநாயக வழிதழுவிய தேர்தல் முறைமைகள் ஊடாக தெரிவு செய்யப்படுவர்.

படைவலிமையின் ஊடாக ஈழத்தமிழினத்தின் வரலாற்றுத் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழீழ தேசிய அடையாளத்தை சிதைத்து, ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையை மறுதலித்து, தேசிய உரிமைகளுக்கு அருகதையற்ற வந்தேறு குடிகளாக தமிழீழ மக்களை சிங்கள தேசம் சிறுமைப்படுத்தும் நெருக்கடி மிக்க தற்போதைய வரலாற்றுத் தருணத்தில் இவ்வாறான திட்டம் முன்மொழியப்படுகின்றது.

பன்னாட்டு மனிதநேய - மனிதவுரிமை விழுமியங்களையும், கடப்பாடுகளையும், சாசனங்களையும், சட்டங்களையும் அப்பட்டமாக மீறி, கொடிய போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் இழைத்து, தமிழ் குருதியிலும், தமிழர்களின் உடலங்களின் மீதும் வெற்றிவாகை சூடி, ஆயுத பலத்தின் ஊடாக ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபடும் சிங்கள தேசத்துடன், இனியும் ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற வரலாற்று மெய்யுண்மையை உலக சமூகத்திற்கு வலியுறுத்தும் முதன்மை மக்கள் கட்டமைப்பாக இது விளங்கும்.

இதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு முன்னோடியாக, பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களினதும், ஏனைய உலகத் தமிழர்களினதும், கல்விமான்களினதும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும், அறிவுரைகளும், வழிகாட்டல்களும், விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

தொடர்புகளுக்கு:

makkalavai@yahoo.co.uk

Comments