விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவரா

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள இராணுவம் தெரிவித்துள்ள நிலையில்,

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பொட்டு அம்மான் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இன்று இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளத உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள இராணுவம் சொல்கிறது. ஆனால் பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், சில மாதம் கழித்து அவர் வெளியில் வருவார் என்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பொட்டு அம்மான் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொட்டு அம்மான், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். புலிகள் அமைப்பில் உளவுப்படையை தோற்றுவித்தது இவர்தான்.

உலகம் முழுக்க விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வலுவான கிளை அமைப்புகளை ஏற்படுத்தியதில் இவரது பங்கு அதிகமுள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க உள்ள ஈழத்தமிழர்களுடன் பொட்டு அம்மானுக்கு பழக்கமும், நெருக்கமும் உள்ளது.

பொட்டு அம்மான் கொல்லப்பட்டதை சிங்கள இராணுவம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. பொட்டு அம்மானையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள இராணுவம் அதற்கான ஆதாரத்தை இதுவரை வெளியிடவில்லை. கடைசி கட்ட போரில் தப்பிச்சென்று விட்ட பொட்டு அம்மான் இப்போதும் வன்னிப்பகுதியில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் சீரமைக்கும் பணியை பொட்டு அம்மான் ஓசையின்றி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அறிவிக்கப்படாத தலைவராக அவர் செயல்பட ஆரம்பித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் இந்த தகவல் பரவியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்கி அனுப்பி வந்தவர் பத்மநாதன். இவரை வெளியுறவு தலைவராக பிரபாகரன் நியமித்திருந்தார். சமீபகாலமாக அவரது செயல்பாடுகள் விடுதலைப்புலிகளின் அடிப்படை கொள்கைகளுக்கு நேர்மாறாக இருப்பதை ஈழத்தமிழர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று கூறி வரும் பத்மநாதன் வேறு புதிய கொள்கைகளை அறிவித்து வருகிறார். இது உலக தமிழர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த நாட்டின் துணையும் இல்லாமல் நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்க முடியும் என்று அவர் கூறி இருப்பதை பெரும்பாலான ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை.

பத்மநாதனின் செயல்பாடுகளில் இருந்து பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப்பிரிவு முரண்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அடிப்படை இலட்சியம் மற்றும் கொள்கைகளில் இருந்து எந்த நிலையிலும் மாறக்கூடாது என்பதில் பொட்டு அம்மான் மிக, மிக உறுதியாகவுள்ளார்.

எனவே பிரபாகரன் பற்றியும், ஈழம் பற்றியும் வேறு புதிய கொள்கை வகுக்கும் பத்மநாதன் போன்றவர்களை ஈழத்தமிழர்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பொட்டு அம்மான் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டி தரும் முக்கிய பொறுப்பை பத்மநாதன் செய்து வந்தார். புலிகளின் நிதி அமைப்பே அவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

என்றாலும் இது பற்றி பொட்டு அம்மான் கவலைப்படவில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுக்கும் சர்வதேச அளவில் ஏராளமான கிளை அமைப்புகள் உள்ளன.

லண்டனில் மட்டும் இப்படி 100 கிளைகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் கணிசமான நிதியை பெருக்க முடியும் என்று கருதப்படுகிறது. நிதி வசூலில் நம்பர்-வன் இடத்தில் இருக்கும் தமிழர் மறுமலர்ச்சி கழகமும் பொட்டு அம்மானின் உளவுப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஈழத்தமிழர்களின் நம்பிக்கை களமாக பொட்டு அம்மானின் உளவுப் பிரிவு தோன்ற தொடங்கியுள்ளது.

தமிழ் ஈழப் போரின் 3-வது கட்டத்தை இந்த உளவுப்பிரிவே முன்னெடுத்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த இணையத்தளம் செய்து வெளியிட்டுள்ளது.

Comments