சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் கூறினார்.

webdunia photoWD

சென்னையில் பன்னாட்டுத் தமிழர் நடுவம் இன்று ‘இலங்தை தமிழர் புனர்வாழ்வு’ என்ற தலைப்பில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியர் பாய்ல், “தமிழர்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலின் வாயிலாகவும், அவர்களை பட்டினிப் போட்டு கொல்வதன் மூலமும், நோயை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியும், அளவிற்கு அதிகமான மக்களை முகாம்களில் முடக்கி வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை போதுமான அளவிற்கு அளிக்காமலும் ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை சிறிலங்க அரசு நடத்தியுள்ளது” என்று கூறினார்.

சிறிலங்க அரசு தனது முப்படைகளையும் கொண்டு நடத்திய படுகொலை, ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட 1948ஆம் ஆண்டின் இனப் படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை விதி 2இன் கீழ் திட்டமிட்ட இனப் படுகொலையே என்றும், இதன் அடிப்படையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் அந்நாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என்றும் பாய்ல் கூறினார்.
webdunia photoWD

போஸ்னியாவின் சிறிபிரீகாவில் செர்பிய படைகள் நடத்திய தாக்குதலில் 8,000 அல்பேனிய இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். அதனை ஐ.நா.வும் மேற்கத்திய நாடுகளும் இனப் படுகொலை என்று ஒப்புக் கொண்டன. அதனைப் போன்று 6 மடங்கு அப்பாவித் தமிழர்களை கடந்த ஜனவரியில் இருந்து 5 மாதத்தில் கொன்று குவித்துள்ளது சிறிலங்க அரசு. ஆனால் அதனை ஐ.நா.வோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இனப் படுகொலை என்று கூறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் பேராசிரியர் பாய்ல்.

சிறிலங்க அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலை தொடர்வதையே முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த 13,000 பேருக்கு மேல் காணாமல் போயிருப்பது காட்டுகிறது என்று கூறிய பாய்ல், இது மானுடத்திற்கு எதிரான குற்றமாகும் என்று கூறினார்.

சற்றேறக்குறைய 3 இலட்சம் பேரை அடிப்படைத் தேவைகள் அளிக்காமல் முகாம்களில் அடைத்து வைத்திருப்பது அவர்களையும் அழித்துவிட வேண்டும் என்ற திட்டத்தில்தான் என்றும் பாய்ல் கூறினார்.

சிறிலங்க அரசினால் கடந்த 60 ஆண்டுகளாக இனப் வேற்றுமைக்கும், படுகொலைக்கும் உள்படத்தப்பட்டுவரும் தமிழர்கள், அந்நாட்டில் இருந்த பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமைக்குத் தகுதியானவர்களே என்று கூறிய பாய்ல், ஐ.நா. அவை ஏற்றுக் கொண்ட சுய நிர்ணய உரிமை தொடர்பான ஒப்புதல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என்று கூறினார்.

“சிறிலங்க அரசினால் வேறுபட்ட மக்களாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள், அந்நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளி்ல் இருந்து துரத்தப்பட்டும் வருகிறார்கள். அதன் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் தனித்த அடையாளங்களை அந்நாட்டு அரசு அழித்து வருகிறது. அவர்களின் சமூக, அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தமிழர்கள் தங்கள் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களுடைய இன அடையாளங்களை காத்துக் கொள்ளவும், தங்களுக்குள்ள சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தனி நாட்டை பிரகடனம் செய்ய முடியும்” என்று கூறிய பேராசிரியர் பாய்ல், அமைதி பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் சிறிலங்க அரசமைப்பை கூட்டாட்சி ஆக்க அந்நாடு ஒப்புக் கொள்ளாத நிலையில் ஒரு சுதந்திர அரசை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று கூறினார்.

செர்பியாவின் ஆதிக்கத்திலிருந்தும், இன ஒடுக்கலில் இருந்தும் பிரிந்து சென்று பிரகடனம் செய்யப்பட்ட கொசோவோவிற்கு எந்தெந்த சர்வதேச சட்டங்கள் பொருந்தினவோ அவையனைத்தும் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்று பிரான்சிஸ் பாய்ல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் சட்ட அறிஞரான புரூஸ் பெய்னும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
webdunia photoWD

முன்னதாக, இலங்கையில் தமிழர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், விரட்டப்பட்டார்கள், அவர்களுடைய சொத்துக்கள் எப்படி சூரையாடப்பட்டது, அவர்களின் அதிகாரங்கள் எவ்வாறு பறிக்கப்பட்டன, அந்நாட்டு அரசு மேற்கொண்டுவந்த இராணுவ நடவடிக்கைகளில் தமிழர்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் புள்ளி விவரங்களுடனும், புகைகப்பட ஆதாரங்களுடனும் ஒரு காட்சி தொகுப்பை போட்டிக் காட்டி விளக்கினார் பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் மருத்துவர் பஞ்சாட்சரம்.

பன்னாட்டுத் தமிழ் நடுவத்தின் இந்தியக் கிளைத் தலைவரும், பிரபல கர்நாடக இசை வித்துவானுமாகிய இசைவாணர் சுதா ரகுநாதன் ஈழ தேசிய கீதத்தைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அமரர் கி.ஆ.பெ. விசுவநாதனின் மகள் மணிமேகலை கண்ணன் தலைமையேற்றார்.

Comments