இந்தியாவின் வரலாற்றுத் தவறினைசிங்களம் விரைவில் புரிய வைக்கும்

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், ஆயுதப் போராட்டத்தையும் அழித்து விட்டதாக ஆர்ப்பரிக்கிறது சிங்களம்.சுடுமணலில் பதுங்குகுழி அமைத்து, பட்டினியால் வாடிய வன்னி மக்களைக் கொன்று குவித்து, துட்டகெமுனுவின் நவீன அவதாரமாகச் சுய தம்பட்டம் அடிக்கும் மகிந்தரிற்குப் பின்னால், சிங்கள தேசம் அணிவகுத்திருக்கும் இந்நிலையில், வழமைபோன்று மெளன விரதத்தைக் கடைப்பிடிக்கிறது சர்வதேசம்.

சர்வதேச, பிராந்திய வல்லாதிக்கக் கரங்களின் பக்க பலத்தோடு தமிழினத்தின் அரசியல் இருப்பினை அழித்துவிட்டதாக, சிங்களப் பேரினவாதம் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்கள், உள்ளுராட்சி சபை அதிகாரம் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு சிங்களம் வழங்கும் அரசியல் தீர்வு என்பதனையும் அங்கீகரிக்கிறார்கள்.

இதில்கூட, தமிழ் மக்களுக்கென்று தனித்துவமான அரசியல் தலைமையயான்று இருக்கக்கூடாதென்பதில் சிங்களம் உறுதியாக இருப்பதை அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.இதுவரை காலமும் சிங்களத்திற்கு பக்கவாத்தியம் வாசித்த தமிழ் குழுக்கள், தமது அரசியல் முகங்களை இழந்து, மகிந்தரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடு இரண்டறக் கலக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

பிரிந்த மாகாண சபைக்கு, காவல்துறை, காணி அதிகாரம் தேவையில்லையயன்று பிரகடனம் செய்த கருணா, சுதந்திரக் கட்சியின் பேரினவாத ஜோதியில் சங்கமித்துவிட்டார்.கிழக்கின் நிலப்பரப்பெங்கும் முளைவிடத் தொடங்கும் புத்தர் சிலைகளை, தேசிய இன ஒற்றுமையின் சின்னமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், எல்லா தமிழ்க் குழுக்களுக்கும் ஏற்பட வேண்டுமென்பதே, அஸ்கிரிய பீடாதிபதி தொடக்கம் எல்லாவல மேதானந்த தேரர் வரையான பேரினவாதச் சிங்கங்களின் ஆசை.

இந்நிலையில், சீனாவுடன் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் மல்லுக்கட்டும் இந்தியா, 13வது திருத்தச் சட்டமென்கிற மருந்தோடு களம் புக முனைவதை, அவதானிக்க வேண்டும். தமிழின அழிப்பிற்கு இந்தியாவே உற்ற துணையாக இருந்ததாக, மகிந்தர் வெளியிடும் தகவல்களால் பதற்றமடைந்திருக்கும் இந்திய அரசு, மாற்றுவழி தேடி, தமிழ் மக்களின் மனங்களை வெல்ல, சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள எத்தனிக்கிறது.

தாயக மக்களின் வாழ்வாதார அழிவிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த காந்தி தேசம், விடுதலைப்புலிகள் அற்ற, அடிவருடித் தலைமையயான்றினை உருவாக்கும் முயற்சியிலும் தோல்வியடைந்ததாகவே கருத வேண்டும்.புலம்பெயர்ந்த, தாயகத் தமிழ் மக்களின் மனங்களில், ஆழமாக விதைக்கப்பட்டுள்ள இந்திய எதிர்ப்புணர்வினை, மாற்றிட முயலும் மத்திய அரசின் போக்கில் திருப்பங்கள் ஏற்படவில்லை.

நீண்டகாலமாக, அந்தந்த நாடுகளின் ஜனநாயக வரம்புகளுக்கு அமைய, போராட்டங்களை நிகழ்த்தி வரும் புலம் பெயர் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த சக்தியினைச் சிதைப்பதற்கு, இன்னமும் பல சதி முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது. பிராந்திய ஏகாதிபத்திய விரிவாக்க வர்க்க குணாம்சத்திலிருந்து அந்நாடு விடுபடவில்லை.தனது நலன்களைப் பாதுகாக்க, ஈழத் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை பகடைக்காயாப் பயன்படுத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் போக்கில், மாற்றமேற்படக்கூடிய அறிகுறிகள் தென்படவில்லை.

மகிந்தருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை என்கிற சர்வதேசக் குற்றச்சாட்டுக்களில் இருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என்பதாகும்.இதிலிருந்து விடுபடுவதற்கு இந்தியாவின் இராஜதந்திர ஆளுமை சிறீலங்காவிற்குத் தேவைப்படுகிறது.அதுவரை, சீனாவுடன் தனது இறுதிச் சரணாகதியை மேற்கொள்ளாமல், இந்தியாவுடன் ஒருவிதமான ஒட்டுறவினைப் பேண வேண்டுமென சிங்களம் கணிப்பிடுகிறது.

ஒரு தடவை, ஐ.நா மனித உரிமைச் சபையின் பிடியிலிருந்து இந்தியாவால் காப்பாற்றப்பட்டாலும், தொடர்ந்தும் அதேவிதமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களை, போர்க்குற்ற அழுத்தங்களிலிருந்து தப்பிக்கும்வரை இந்தியா வழங்கவேண்டுமென்பதே மகிந்தரின் விருப்பம்.ஆனாலும் இந்தப் போர்க்குற்றப் பொறிக்குள் இருந்து சிங்களத்தை விடுவித்தால், தனது பிடி சிறீலங்காவில் தளர்ந்து விடுமென்பதையும் இந்தியா உணர்கிறது.

ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து, புதிய அழுத்தங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன.அமெரிக்க நலனோடு ஒன்றிணைந்து தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை மறுபடியும் முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளது.சர்வதேச பொருளாதாரச் சீரழிவினை எதிர்கொள்ள, கூட்டுச் சேரும் அமெரிக்க சீன நிலைப்பாடு, இந்தியாவிற்கு சாதகமாக அமையப்போவதில்லை.

சுற்றிவர இருக்கும் நாடுகளில், சீனாவின் ஆதிக்கம் விரிவடைவதும், அம்பாந்தோட்டை வரை அது நீண்டு செல்வதும், நிரந்தர நண்பர்கள் அல்லாத நாடுகளால் சூழப்பட்டிருப்பதும், பாரிய பாதுகாப்புச் சிக்கலொன்றை இந்தியா எதிர்கொள்வதனை உறுதி செய்கிறது. இந்நிலையில் நிரந்தர நண்பர்களையும், தமது குறுகிய மலினமான வெளியுறவுக் கொள்கையால் பகைத்துக்கொண்ட காந்தி தேசம்,

தொடர்ந்தும் தமிழின அழிப்பிற்கு துணைபோகப் போகின்றதா என்கிற கேள்வி எழுவதில் அதிசயம் ஏதுமில்லை.தாயக மக்களின் விடிவிற்காய் தொடர்ந்து போராடும், புலம்பெயர் மக்களின் ஒருமித்த சக்தியினை உடைப்பதற்கு, பிளவுகளை ஏற்படுத்தும் நரித் தந்திரங்களை கைவிட்டு, யதார்த்த பூர்வமான புவிசார் அரசியலைப் புரிந்து, புதிய முற்போக்கான நகர்வுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

சென்ற மாதம், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், சிங்களத்திற்கு ஆதரவு தெரிவித்த சோசலிச நாடுகள், தாம் விட்ட தவறினை இப்போது உணர்ந்து கொள்வதாக செய்திகள் கூறுகின்றன.ஈழப் போராட்டத்தின் சர்வதேசப் பார்வை குறித்த தவறான கணிப்பீட்டின் அடிப்படையிலேயே, இம்மாற்றங்கள் நடைபெற்றுள்ளது போன்று தெரிகிறது. களத்தில் ஆயுதங்கள் மெளனித்திருக்கின்றன. சர்வதேச பரப்புரைக்கான காலமிது.

பரப்புரையில் தவறவிட்ட விடயங்களை கூர்ந்து அவதானித்து, போராட்ட அரசியலை முற்போக்கான அம்சங்களோடு முன்னெடுக்க வேண்டிய நேரமிது.ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட சகல வல்லரசாளர்களின் நலன்களையும் நாம் புரிந்துள்ளோம்.இவர்களுக்கிடையே நிலவும் பகைமையான முரண்பாடுகளை, சரியான புரிதலுடன் உள்வாங்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்கும் காத்திரமான நகர்வுகளை இனியாவது மேற்கொள்வோம்.

அதேவேளை முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் எம்மக்களை, விடுவிக்கும் போராட்டங்களை சலிப்பின்றி முன்னெடுக்க வேண்டும்.சர்வதேச நிறுவனங்களை உட்செல்ல அனுமதித்தால், போர்க்குற்ற ஆதாரங்களைத் திரட்டி விடுவார்கள் என்கிற சிங்களப் பேரினவாதத்தின் அச்சத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.நாம் பிளவுண்டு, சோர்வு நிலையை எட்ட வேண்டுமென்பதே சிங்களத்தின் எதிர்பார்ப்பு. அதிலிருந்து விடுபட வேண்டியது ஈழத் தமிழினத்தின் வரலாற்றுக்கடமை.

நன்றி

ஈழமுரசு(05.06.09)

www.tamilkathir.com

Comments