புலிகளின் அரசியல் துறையைச் சார்ந்த நடேசன், புலித்தேவன் ஆகியோர் நயவஞ்சமாக சுட்டுக்கொல்லப்பட்ட துரோகத்தை- கடைசியில் அவர்களின் தூதுவராக செயல்பட்ட லண்டன் பெண் செய்திளார் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் நடேசன், விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருந்த தொடர்பையும் வஞ்சகமாக அவர்கள் கொல்லப்பட்ட விதத்தையும் லண்டன் ""சன்டே டைம்ஸ்'' செய்தியாளர் மேரி கொல்வின் வெளிப்படுத்தியுள்ளார். மேரி கொல்வின் அம்மையார் 2001இல் இலங்கை படைகளின் மூர்க்க தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கட்டுரை வருமாறு:
அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் சில மணி நேரத்தில் இறக்கப்போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை. அரசியல் துறைப்பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஓரிடமும் இருக்கவில்லை போலும். நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே போடுகிறோம் - செய்மதித் (சேட்டலைட்) தொலை பேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுப் பகுதிக்குள் இருந்து, 17-05-2009 ஞாயிறு பின்னிரவு நடேசன் என்னிடம் கூறினார். பின்புறத்திலிருந்து இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்கள் தெளிவாக எனக்குக் கேட்டன.
ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்ப்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா? என்று அவர் கேட்டார். புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையிலான 26 வருட போரில், வெற்றிகண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
8 வருடங்களுக்கு முன்பிருந்தே நடேசன், புலித்தேவன் ஆகியோரை எனக்குத் தெரியும். அப்போது இலங்கைத் தீவின் 3இல் 1 பங்கு புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தது. இப்போது, இவர்கள் இருவரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந் தார்கள்) காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர்.
கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நா.வுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து வந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நா.வுடன் பறிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தாம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தமது பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தமிழர்களுக்கு மற்றுமொரு அரசியல் தீர்வு எடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிரித்தானிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக் கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்த நடவடிக்கை சமாதானம் வருவதற்கான ஓர் அறிகுறியாகவே எனக்குத் தோன்றியது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குக் குழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். கடைசி ஞாயிறு இரவில், சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கி வந்த போது, புலிகளிடம் இருந்து, எந்தவித அரசியல் கோரிக்கை யும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை. முன்னர் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார்.
நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக அய்.நா.வின் இந்திய பிரதிநிதி நம்பியாரைத் தொடர்பு கொண்டேன், அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலுக்கான பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.
சரணடைதலின் சாட்சிக்காக நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார். லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்.
தென் ஆசியத் தொடர்பிலிருந்து திங்கள் காலை 5.00 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று. அன்று மாலை, சிறிலங்கா இராணும் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதல் பிழையாகிப் போனது ஏன்? விரைவில் இதனை நான் கண்டுபிடிப்பேன்.
ஞாயிறு இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்சேவுடன் தொடர்பு கொண்டதாக அறிகிறேன். பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஜனாதிபதி தான் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தாரே...? தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள்.
நான் ஜனாதிபதியிடம், நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன் எனக் கூறினேன். அதற்கு ராஜபச்சே, இல்லை எங்கள் இராணும் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள்ளாக்கத் தேவையில்லை என்று கூறினார். பசில், ஜனாதிபதியின் சகோதரர், என்னை அழைத்து, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும் என்றவர், அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் கூறினார். இப்படிச் சந்திரநேரு என்னிடம் கூறினார்.
சந்ததிரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டாராம். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்ததாம். நாங்கள் தயார், நடேசன் சந்திரநேருவிடம் கூறினார். நான் வெளியே வந்து வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன் என்றார். சந்திரநேரு, கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே- அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன் என்று கூறியிருந்ததாக அறிகின்றேன். கொலையிடத்தில் இருந்து தப்பித்து கூட்டத்துடன் வந்திருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்பதை விவரித்தார். இவர் பின்னர் உதவிப் பணியாளர் ஒருவரோடு கதைக்கும்போது.
நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது. நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி, அவர் சிங்களத்தில் கத்தினார். அவர்கள் சரணடையத் தானே வந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்களே என்ற அவரது மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள். விபரம் கூறிய அந்தத் தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால், சந்திரநேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் சகோதரர், சதிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகராவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சதிஷ் பாராட்டியுமுள்ளார்.
சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையே காண விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள். இவ்வாறு லண்டன் ""சன்டே டைம்ஸ்'' செய்தியாளர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.
Comments