வானம் கண்ணீர் மழை பொழிய மக்கள் எம்மக்களுக்காக தம் வாழ்வே போராட்டமாகமாறவேண்டும் என உறுதியெடுத்தனர்

மாணவர்களால் மக்களுக்கு விடுத்த அறிக்கை


அன்பார்ந்த பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களே!


தமிழீழ தாயகத்தில் மனித நாகரீகமற்ற ஓர் அரக்கத்தனமான இன அழிப்பும் இனச்சுத்திகரிப்பும் நடந்துகொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொடூரம் தாங்காது பொங்கியெழுந்து, உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப நாம் அனைவரும் திரண்டெழுந்து, எமது உரிமைக்காய் குரல் கொடுத்து, உலகளாவிய தமிழர் போராட்டங்களுக்கு வித்திட்டோம். எமது போராட்டங்கள் உலக மனச்சாட்சியை முழுமையாக மாற்றத் தவறினாலும், எங்களால் முடிந்தவரை காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதே உண்மை.


இருந்தபொழுதும், தமிழீழ தாயகத்தில் நடந்தேறிய - நடைபெறும் சம்பவங்கள் எங்கள் அனைவரது மனக்கூண்டினுள்ளும் மாறாத வடுவாக - உயிர் உள்ள வரை எம்முள் எரியும் வேதனைத்தீயாகவே, ஒவ்வொரு இன மானமுள்ள தமிழனுக்கும் இருக்கும். இந்த வடு அல்லது வலி என்பதை நாம் வார்த்தைகளாகவோ உணர்வுகளாகவோ வெளிக்கொணர முடியாதவர்களாக, தாயகத்தில் அந்த மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று அங்கலாய்த்துக்கொண்டு, இவைகள் யாவும் கனவாக இருந்துவிடக்கூடாதோ என்ற ஆதங்கத்தோடும், நாம் அனைவரும் செய்வதறியாது மனப்புழுக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமிது.


இந்த நிலையில் இங்கு கடந்த 73 நாட்களாக தங்களை வருத்தி உண்ணா நோன்பிருந்து இவர்களுக்கு பக்கபலமாக அடையாள உண்ணாவிரதமிருந்து இவர்கள் அனைவருடனும் சேர்ந்து தினமும் இந்த சதுக்க முன்றலில் உலகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப தினமும் அயராது அனைவரும் சோர்ந்து குரல் கொடுத்து, போராட்டங்கள் செய்து, வேதனை மிகுதியால் இந்த நாட்டில் வீதிமறியல்களையும் செய்து, நாம் காட்டிய தீவிரம் இன்று துயர் சூழ்ந்து இழப்புகளுக்கு மத்தியில் இழப்பதற்கு ஏதுமின்றி வாழும் மக்களுக்கு ஆறுதலாகவும் எதிரிக்கு வெறுப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


தமிழன் என்ற ஒரு இனம் காலம் காலமாக அடிமைப்பட்டு சேவகம் செய்து வந்த நிலையில் தமிழன் தன்மானம் கொண்டவன் வீரமிக்கவன். இனத்துக்காய் தன்னுயிர் கொடுப்பவன். மாற்றானை நேசிப்பவன். மண்டியிடமாட்டான். போராட்டகுணமும் பண்பும் கொண்ட எமது விடுதலைப் பேராளிகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் எம்மை ஒரு பண்பானவர்களாகவும் உலகத்தின் முன் தலை நிமிரவும் வைத்துள்ளது. இன்னும் தமிழன் என்றால் அவன் யார் என்று அடையாளம் காட்டியுள்ளது.


நாங்கள் எந்த இனத்திற்கோ எந்த நாட்டிற்கோ எதிராக எமது போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. நாம் எமது மக்களுக்காக, நாம் காலம் காலமாக வாழ்ந்த மண்ணுக்காக, எமது விழுமியங்களுக்காவே குரல் கொடுத்து புகலிட தேசங்களில் அந்தந்த நாட்டின் சட்டவிதிகளுக்குட்பட்டு முரண்படாது எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இனிவரும் காலங்களிலும் இதையே தொடருவோம்.

இன்று 73ஆவது நாளில் தற்காலிகமாக இந்த இடத்தில் இருந்து மட்டும் நாம் இந்தப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவருகின்றோம். எம்மோடு தோளோடு தோள் நின்ற அனைத்துறவுகளும், தொடர்ந்தும் எம்மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் விடாது கலந்து கொண்டு போராடவேண்டும் என்பதே எமது அவா. எமது மக்கள் இன்று விலங்குகளாக முகாம்களில் சிக்கி உலகத்தின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ளார்கள். எதிரி செய்யத்துணியும் அனைத்துக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றான். இன்று எமது மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை புலம்பெயர் மக்கள் என்பதை நாம் எல்லோரும் மறந்து விடக்கூடாது. மானமுள்ள தமிழன் ஒருவன் எஞ்சியுள்ளவரை எம்மக்கள் நிம்மதியாக தங்கள் பூமியில் தங்கள் வாழ்கையை தாமே தீர்மானித்து வாழும் வரை குரல் கொடுக்கவேண்டும்.


அன்பார்ந்த தமிழ் மக்களே! நாம் அனைவரும் இனிவரும் காலங்களில் நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடுபெரிதென்று வாழ்ந்து வரலாறு விட்ட வழிகாட்டலில், காலமிட்ட கட்டளையில் அனைவரும் ஒன்றிணைந்து எமிமினத்தின் விடிவை நோக்கி பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழ் மாணவர்கள்
பிரித்தானியா

Comments