இது தொடர்பாக ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் இனவெறிக்கு எதிரான சுவிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் கார்ல் குறுண்பேர்க் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடல் கடந்த தமிழீழ அரசை நிறுவுவதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது.
பல வாரங்களாக நடைபெற்று வந்த மனிதப் படுகொலைகளின் பின்னர், சிறிலங்கா அரசும் இராணுவமும் இணைந்து மே 17 ஆம் நாள் எதிர்த்தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி இடமான வன்னியில் எதிர்ப்பை நசுக்கியுள்ளன.
அனைத்துலக சமூகம் பரிதாபகரமான முறையில் அந்த அவலத்துக்கு உதவியுள்ளது அன்றில் அதனைத் தடுப்பதற்கு தவறிவிட்டது.
இத்தாக்குதலில் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சகாக்கள், சாதாரண குடிமக்களான பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள், காயமடைந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த 3 லட்சம் குடிமக்கள் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, சிறிலங்காவில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையினருக்கு சட்ட உரிமை வழங்க மறுத்து வருகின்றமை போன்றவை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான போரையே நடத்தி வந்திருப்பதைக் காட்டுகிறது.
சுதந்திரம் அடைந்த நாள் முதலான 61 வருட கால அனுபவம் ஒரு கசப்பான யதார்த்தமாக உள்ளது. பல வருடங்களாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இனவாத அடக்குமுறைகளும், 1983 இல் நடைபெற்ற பயங்கரமான இனப்படுகொலையுமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றமைக்கு காரணமாகும்.
இந்த வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய நூறாயிரக்கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாகத் அடைக்கலம் புகுந்ததுடன், புலம்பெயர் அமைப்புக்களை உருவாக்கி தங்கள் வேட்கைகளைப் பிரதிபலிக்கும் சட்பூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவில் வாழ்ந்த தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் மிக மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளார்கள். ராஜபக்ச அரசு போராட்ட இயக்கத்துக்கு மறுத்த எதனையுமே தமிழ் மக்களுக்குத் தருவதற்குத் தயாராக இல்லை.
சிறிலங்கா இராணுவத்தின் குற்றங்களுக்கு சாட்சியாகவும், எறிகணை வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று உழைத்த 3 தமிழ் மருத்துவர்களை அவருடைய அரசு கொழும்பில் சிறை வைத்திருக்கிறது.
நாடு கடத்தல், அடக்குமுறை, காணாமற் போதல், சரியாகச் சொல்வதானால் இனச் சுத்திகரிப்பு, ஆகிய கொடுமைகளில் இருந்து தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒடுக்குமுறை, பாரபட்சம் என்பன இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களின் சுயநிர்ணய உரிமை, அடிப்படை மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் யாவையும் தமிழ் மக்களுக்கு சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய அடிப்படையில் கடல் கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது
சுவிஸ் நாட்டு அரசு சாரா அமைப்பான இனவெறிக்கு எதிரான அமைப்பு சகலவிதமான இனப் பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இலங்கையில் தங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரம் காரணமாக 80-களின் தொடக்கத்தில் நாட்டை விட்டு வெளியேறி ஏனைய நாடுகளில் அடைக்கலம் புகுந்ததைப் போலவே சுவிற்சர்லாந்திலும் தமிழ் மக்கள் அடைக்கலம் புகுந்தார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஏன் என்றுமே காலனித்துவ நாடாக விளங்கியிராத சுவிற்சர்லாந்து நாட்டில் கூட காலனித்துவ காலங்களில் உருவாகிய இனவெறி நிலவுகிறது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் இனவெறிக்குத் தப்பி இங்கு வந்த மக்கள் இங்கும் இனவெறிக்கு ஆளாகிறார்கள்.
இந்நிலையில், தமிழ் மக்கள் எழுதவிருக்கும் புதிய அத்தியாயாத்துக்கு ஆதரவாக இனவெறிக்கு எதிரான அமைப்பு விடுத்துள்ள அழைப்புக்கு அனைத்துலக பொது சமூகம் நேசக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments