ஐ.நா.வின் கள்ள மௌனம்!

சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம்.

ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழுதி மனிதருக்கு முதுகுவலி வந்ததுதான் மிச்சம். இவர் எழுதியபோது அவர் போய் படுத்துக்கொண்டார். அவர் வெளியேவந்தபோது இவர்போய் படுத்துக்கொண்டார். என்ன செய்வது, சிதம்பரத்துக்கு இருந்த அதிர்ஷ்டம் ஈழத்தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

கலைஞரை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? அவர் செய்ததைத்தான் உலக நாடுகளும் செய்தன. போரை நிறுத்தும்படி அறிக்கை விட்டன.. மீண்டும் அறிக்கை விட்டன... மீண்டும் மீண்டும் அறிக்கைவிட்டன. முள்ளிவாய்க்காலில் கடைசித் தமிழனும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தான், இவர்களும் அறிக்கை விட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.இந்தியாவில் தேர்தலும் இலங்கையில் போரும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பத்தே நாளில், போருக்கு ஆதரவுகொடுத்த சோனியாவுக்கும் மன்மோகன்சிங்குக்கும் மனமுவந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ராஜபக்ஷேக்கள்.

ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களை வீழ்த்தி இந்தியாவுக்கே நீதி வழங்கியிருப்பதாக பாணா சுற்றுகிறார்கள். மடியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த பூனை வெளியே வந்துவிட்டது. இலங்கையில் நாங்கள் போரில் வென்ற அதே நேரத்தில் இந்தியாவில் நீங்கள் தேர்தலில் வென்றது குறித்து மகிழ்ச்சி. புலிகளை ஆதரித்தவர்களுக்குத் தமிழக மக்கள் பாடம் புகட்டியதில் பெருமகிழ்ச்சி என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார் ராஜபக்ஷே.

தனது வாழ்க்கையில் ராஜபக்ஷே உண்மை பேசியிருப்பது இதுதான் முதல்முறை. இரண்டும் ஒரே நேரத்தில்தான் நடந்தது. தமிழினப் படுகொலையைக் கொண்டாட சிங்கள இனவெறியர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோதுதான், அண்ணா அறிவாலயத்தின் முன்பும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். ஊசிவெடி வெடித்தால்கூட பங்கருக்குள் ஓடிப்போய் பதுங்கிக்கொள்ளும் எங்கள் சொந்தங்களின் காதில், இந்தப் பட்டாசு சத்தமெல்லாம் கேட்டிருக்காது. ஏனென்றால், அதற்குமுன்பே அவர்களது பதுங்குக் குழிகள் எல்லாம் சவக்குழிகளாக மாறிவிட்டிருந்தன.

54 வயது பிரபாகரன் உயிரோடு இருக்கவேண்டியதன் அவசியம் கருதி, மகன் சார்லஸ் கரும்புலியாக மாறிக் காப்பாற்றியதாக அங்கிருந்து செய்தி வந்த நேரத்தில்தான், மகனுக்கு எப்படியாவது மந்திரி பதவியை வாங்கிக்கொடுக்கும்படி தள்ளாத வயது தலைவரைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனது தமிழ்நாடு. பழைய எண்ணிக்கையில் கொஞ்சம் தள்ளுபடி ஆனாலும் பரவாயில்லை, சொல்லும்படி ஒரு இலாகாவை மதுரைவீரனுக்குக் கொடுங்கள் என்று காவடிச் சிந்து எழுதாத குறை.

நமக்கெதற்கு வம்பு என்று நாம் வாயை மூடிக்கொண்டோம்.இப்போது, நம்மையெல்லாம் மிஞ்சும் விதத்தில் மௌனம் சாதிக்கிறார், ஐ.நா.வின் செயலர் நாயகம் பான் கீ மூன். கடைசி ஓரிரு நாளில் மட்டுமே 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற விவரம் தெரிந்திருந்தும், இலங்கை விஜயத்தின்போது அதைப்பற்றி மூச்சுவிடாமல் திரும்பிச் சென்ற அவரது மௌனம், ஐ.நா.வையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது.

ஐ.நா.வின் இந்தக் கள்ள மௌனத்தை அம்பலப்படுத்தியிருப்பவர், ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர். பெயர், பிலிப் போலோபியான். இலங்கையின் கொலைவெறிக்கு ஐ.நா. துணைபோனதையும், மிகப்பெரிய இனப்படுகொலை நடந்திருப்பதை மறைக்க அது முயல்வதையும் லீமாண்ட் என்கிற பிரெஞ்சு நாளேட்டில் அவர் விவரித்திருக்கிறார். ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் நிலையில் இருக்கும் விஜய் நம்பியார்தான் இதற்கெல்லாம் காரணம் என்பது அவரது குற்றச்சாட்டு.விஜயின் இளவல் சதீஷ் நம்பியார், இலங்கை ராணுவத்தின் ஆலோசகராகப் பதவி வகிக்கிறார்.

இதிலிருந்து ஐ.நா.எப்படி வளைந்துகொடுத்தது என்ற ரகசியம் அம்பலமாகிறது.கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை முழுமையாக அறிந்திருந்தும் ஐ.நா. அதை மறைத்-திருக்கிறது. உண்மையான தகவல்களை வெளியிட்டால் ஐ.நா. அலுவலகமே கொழும்பில் செயல்படமுடியாது போய்விடுமென்றும், ஐ.நா. அலுவலர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படுவார்களென்றும் விஜய் நம்பியார் அங்குள்ள ஊழியர்களிடம் கூறியிருக்கிறார்.

இங்கே தொடர்ந்து இருக்கவேண்டுமென்றால், இலங்கையோடு ஒத்துப் போகவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார் என்கிறார் பிலிப் போலோபியான் தனது செய்திக் கட்டுரையில்.போலோபியானின் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. அது உண்மையா பொய்யா என்பதை விளக்கவேண்டிய நிரூபிக்க வேண்டிய அவசியம், சர்வதேச நம்பிக்கையான ஐ.நா.வுக்கு இருக்கிறது.

அது உண்மைதான் என்றால், நம்பியார்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களது பச்சைத் துரோகத்துக்கு அதிக பட்சத் தண்டனையான தூக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று பரிசீலிக்கவேண்டும். இப்படியொரு நிலையில் ஐ.நா. தேவையா என்பதைக் கூட பரிசீலிக்கலாம். இப்படியொரு உயிரற்ற அமைப்பு இருந்தென்ன? இறந்தென்ன?இவ்வளவுக்குப்பிறகும் பிலிப் போலோபியானின் குற்றச்சாட்டை ஐ.நா.வால் மறுக்கமுடியவில்லை.

சரியான புள்ளிவிவரங்களை உறுதிசெய்ய முயன்று கொண்டிருக்கிறோம், மோதல் நடைபெற்ற பகுதிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் எதையும் உடனடியாக உறுதிசெய்ய முடியவில்லை என்கிறது வெட்கமேயில்லாமல். செய்து முடித்த இனப்படுகொலையை எந்தத் தடயமும் இல்லாமல் இலங்கை மூடிமறைத்தபிறகு, நம்பியாரும் பான் கீ மூனும் முள்ளிவாய்க்காலுக்குப் போய் தொல்பொருள் ஆராய்ச்சியா நடத்தப் போகிறார்கள்?

மோதல் நடந்த பகுதிகளுக்குச் செல்ல இலங்கை அனுமதி மறுக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம் என்பதுகூடத் தெரியாத பச்சைக்குழந்தைகளா அவர்கள்?அப்பாவி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இராது என்றது இலங்கை. நம்மூர் பரப்பிரம்மம் பிரணாப் நம்பினார். போரே நின்றுவிட்டது என்றார் ப.சிதம்பரம்.

சூதுவாது என்றால் என்னவென்றே தெரியாத கலைஞர் அதை நம்பி சாகும்வரை உண்ணாவிரதத்தையே கைவிட்டார். இப்போது, மோதல் நடந்த பகுதிக்குள் போவது ஆபத்து என்கிறது இலங்கை. ஐக்கிய நாட்டு அசட்டு அம்பிகள் அதையும் நம்புகிறார்கள். உடலின் வெவ்வேறு பாகங்கள் பிய்ந்து தொங்க, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வெளியேற, தங்களது மரணத்துக்குத் தாங்கள் மட்டுமே சாட்சியாக இருந்தார்களே ஆயிரமாயிரம் தமிழ்ச் சொந்தங்கள், அவர்களது மரணத்துக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

அவர்கள் கொல்லப்பட்டதற்கு சாட்சியும் இல்லை. நடந்த கொலை-களுக்-குத் தடயமும் இருக்கப் போவதில்லை. காங்கிரஸ் அரசு முதல் ஐ.நா. அமைப்பு வரை அத்தனைப் பேரும் சேர்ந்து நீதி கேட்டுப் போராடிய ஓர் இனத்தை ஒட்டு-மொத்தமாக அழித்துவிட்டார்கள். கால் வேறு கை வேறு தலை வேறாகப் பிய்த்துப் பிய்த்து எறிந்துவிட்டார்கள். அடிமையாய் இருக்க ஆசைப்படு என்று அடித்துத் துவைத்துக் கற்பித்திருக்கிறார்கள்.

தப்பிப் பிழைத்து மிச்சமிருக்கிற மக்கள், தாங்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அச்சத்தின் காரணமாய் பதுங்குக் குழி தோண்டினால்கூட ஆச்சரியப்படு-வதற்கில்லை.தடை செய்யப்பட்ட நச்சு ஆயுதங்களை இனி எந்த நாடுவேண்டுமானாலும் நியாயம் கேட்கும் மக்கள் மீது பயன்படுத்தலாம். அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்துவிட்டு, நம்பியாரின் தம்பியை ஆலோசகராய் வைத்துக்கொண்டு ஐ.நா.வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.

ஆயுதம் கொடுக்காதே என்று சொந்த நாட்டிடம் கெஞ்சினோம். நானாவது கொடுப்பதாவது என்று நம்மிடம் சத்தியம் செய்தது பாரதம். பாரதமாதாவின் பொம்மை, சோனியாவின் கையில். பாரதம் என்ன செய்யமுடியும்? நாம் ஐ.நா.வை நம்புகிறோம். ஐ.நா. விஜய் நம்பியாரை நம்புகிறது. சர்வதேசம் என்ன செய்யமுடியும்?இப்படி மற்றவர்களை நோக்கி விரலை நீட்டும் போது, நம்முடைய லட்சணம் என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கத் தவறக்கூடாது.

மரணத்தின் விளிம்பிலிருந்த அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றத் தவறியதில், மற்றவர்களுக்கு மட்டும்தான் பங்கிருந்ததா? நமக்கு இல்லையா? ஒரு மதப்பிரசாரகர் கொல்லப்பட்டதும் பற்றியெரிகிறது பஞ்சாப். நூறு நூறாய் ஆயிரம் ஆயிரமாய் நமது சொந்தச் சகோதரர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, இங்கே பற்றியெரிந்தது நம்வீட்டு அடுப்பு நெருப்பன்றி வேறென்ன?

வெறும் சோற்றுப் பிண்டங்களாய் உண்டு உறங்கி உடலுறவுக் கொண்டு உலவினோமே என்பதை எண்ணிப்பாருங்கள்... மனத்துக்குள் யாரோ மலம் கழித்ததைப்போல் அருவருப்படைவோம். இந்தக் குற்றவுணர்வு நம்மைச் சும்மாவிடாது. முத்துக்குமாருக்காவது பெட்ரோல் தேவைப்பட்டது. நம்மை இந்த சுய விசாரமே சாம்பலாக்கிவிடும்.மனித உரிமையும் இலங்கையும்!மனித உரிமைகளைப் பேணுவதில் 192 நாடுகளில் 164வது இடத்தில் இருக்கிறது இலங்கை.

பத்திரிகையாளர்களுக்கு அதிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் ஈராக்கும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. இந்த இலங்கை தான் மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது.ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளில், 44 நாடுகள் ஆசிய நாடுகள். மனித உரிமைகள் கவுன்சிலில் ஆசியாவுக்கு 13 இடங்கள். இதில் இலங்கையை எப்படியாவது உறுப்பினராக்க வேண்டுமென்று தலைகீழாய் நின்றது, நமது பாரத தேசம் தான்.

மிகச் சரியாக ஓராண்டுக்குமுன், 2008 மே மாதம் நடந்த தேர்தலில் இலங்கையை வெற்றிபெறச் செய்ய படாதபாடுபட்டது இந்தியா. அப்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஆசியப் பிரிவில் காலியாக இருந்த 4 இடங்களுக்கு இலங்கையுடன் சேர்த்து 6 நாடுகள் போட்டியிட்டன. இலங்கையை அந்தத் தேர்தலில் தோல்வியடையவைத்து இந்தியாவின் முகத்தில் கரி பூசியவர்கள், நோபல் பரிசு பெற்ற மூன்று மாமனிதர்கள்.

ஒருவர், தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டூடூ. தீண்டாமை ஒழிப்புக்காக ஆற்றிய பணிக்காக நோபல் விருது பெற்றவர் அவர். இன்னொருவர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர். மத்தியக் கிழக்கு நாடுகள், வட கொரியா போன்ற நாடுகளில் அரசியல் பதற்றங்களைத் தணித்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அவர்.

மூன்றாமவர், அர்ஜென்டைனாவின் மனித உரிமைப் போராளி அடால்ப் பரேஸ் எஸ்கியூவல். உள்நாட்டுத் தீவிரவாதிகளை ஒடுக்குவதாகக் கூறி அர்ஜென்டைனா ராணுவ அரசு நடத்திய சித்திரவதைகள், படுகொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களைத் துணிவுடன் எதிர்த்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் அவர். "சொந்த மக்களையே கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் இலங்கைக்கு மனித உரிமைகளைக் காப்பதற்கான ஓர் அமைப்பில் இடம்பெறும் தகுதி இல்லை.

ஒட்டுமொத்த உலகத்திலேயே, மனித உரிமை கவுன்சில் உறுப்பினராகும் தகுதி கொஞ்சமும் இல்லாத நாடு இலங்கைதான்" என்று வெளிப்படையாகச் சொன்னார் டெஸ்மாண்ட் டூடூ.சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சொந்த மக்கள் மீதே நடத்தப்பட்ட சித்திரவதை, ஆள்கடத்தல் மற்றும் படுகொலைகள் அச்சு அசலாக இலங்கையில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார் எஸ்கியூவல்.

இலங்கையைத் தோற்கடிப்பதன் மூலமே, லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கை மக்களுக்குப் பெரும் நன்மையைச் செய்யமுடியும் என்றார் அவர்.இவ்வளவு பேரின் எதிர்ப்பிலிருந்த நியாயம் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இலங்கைக்குத் தேர்தல் வேலை பார்த்தது இந்தியா. அந்தத் தேர்தலில், ஜப்பான், பஹ்ரைன், தென்கொரியா, பாகிஸ்தான் ஆகியவை வெற்றிபெற்றன. இலங்கை தோல்வியடைந்தது.

புகழேந்தி தங்கராஜ்

"தமிழக அரசியல்" வார இதழிலிருந்து

www.tamilkathir.com

Comments