"வணங்காமண்" கப்பல் கடற்படையினரின் முடிவுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார் முன்னாள் போர் நிறுத்த கண்காணிப்பாளர்

"கப்டன் அலி" (வணங்கா மண்) கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் வந்து நிற்பது குறித்து சர்வதேச கப்பல் போக்குவரத்து விதிகளின் கீழ் சாதாரண விசாரணைகள் நடத்தப்படுகின்றன. ஆவணங்கள் சரி பார்க்கப்படுகின்றன. கப்பலைச் சோதனையிடுவதற்காக இலங்கைக் கடற்படையினர்......

வந்த போதிலும் அதனைப் பறிமுதல் செய்திருப்பதாக எமக்கு அறிவிக்கவில்லை. எங்களைப் பண்பாக நடத்துகிறார்கள். அவர்களின் முடிவுக்காக நாம் காத்திருக்கிறோம். இவ்வாறு அந்தக் கப்பலில் வந்திருக்கும் முன்னைய போர் நிறுத்தக் கண்பாணிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டன் வூச்னன் தெரிவித்தார்.

இதேவேளை, வணங்காமண் கப்பலில் சுமார் 894 மெ.தொன் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்த அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் இப் பொருட்கள் புலம் பெயர் தமிழ் மக்களினால் சேகரிக்கப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டே அனுப்பியுள்ளதாகவும், அக்கப்பலில் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் கிறிஸ்டன் வூசனன், லண்டன் குடியுரிமை பெற்ற தமிழ் தொண்டர் ஒருவர் உட்படப் 15 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப் பொருள்களை உள்ளே கொண்டு செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும், தமது உறவுகளின் நிலை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் புலம் பெயர் மக்களுக்காகவேனும் இப் பொருள்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதிக்கும் எனத்தாம் நம்புவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

அத்துடன் இந் நடவடிக்கைகளில் தாம் இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்பட விரும்புவதாகவும், அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும்,
அரசுடன் சேர்ந்து செயற்படுவதன் மூலம் இந்த உதவிப் பொருள்களை வழங்கிய புலம் பெயர் மக்களுக்கு மரியாதை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை வணங்காமண் கப்பல் தற்போது பாணந்துறை மீனவர் துறைமுகப் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருப்பதாகவும், அதை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments