வவுனியாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் வன்னி மக்களும், புலம்பெயர் தமிழர்களின் கடமைகளும்

கடந்த மூன்று சகாப்த காலங்களாக ஈழத்தமிழர்கள் இழந்த சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஆயதப் போராட்டத்தில் கடந்த மாதம் 17ம் திகதி வரையான காலப்பகுதிவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்திய விடுதலைப் புலிகள் இயக்கம், உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றிற்கும் முன்னுதாரணமாக திகழக் கூடிய வகையில் வன்னியை கடந்த 19 வருடகாலமாக பிரகடனப்படுத்தப்படாத, அதே நேரம் சர்வதேச அங்கீகாரம் இல்லாததும்

ஆனால் ஒரு சுதந்திர தேசத்திற்குரிய சகல உட்கட்டுமானங்களையும் நிறுவி ஏறக்குறைய ஒரு இறைமையுடைய தனி நாடாகவே நிலைநிறுத்தியதோடல்லாமல் சர்வதேச கவனத்தையும் ஈர்ந்து சர்வதேச ஆதரவுடனான சமாதான ஒப்பந்தத்தினையும் சமசாரப் பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்த வேளை பிராந்திய வல்லரசுகளின் சதி வலைப் பின்னல்களாலும், துரோகங்களாலும் இன்று வன்னியை சிங்களத்தின் இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்டுச் சிதைக்கப்பட்டு வன்னியின் தென் நகரான வவுனியாவில் மூன்றரை இலட்சம் வன்னி மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வன்னி மீது ஓகஸ்ட் 2007 இல் தொடங்கப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றரை வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகவும்,மிகக்கடுமையாகவும் இந்திய, சீன, பாகிஸ்தான், ரஸ்யா ஆகிய நாடுகளின் நவீன ஆயுத தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தியதோடல்லாமல், உலகத்தினால் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி 30 ஆயிரம் வரையிலான வன்னி மக்களைப்படுகொலை செய்து வன்னியின் வளங்களைச் சின்னாபின்னப்படுத்தி மக்களைத் தொடர்ச்சியாக இடம்பெயரச் செய்து ஈற்றில் பாலைவனப்பகுதிக்கு ஒப்பான மாத்தளன் - முள்ளிவாய்க்கால் இடையில் ஒதுங்கி கடந்த 17ஆம்திகதி மேற்கொண்ட ஈவிரக்கமற்றி தாக்குதலோடு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை முள்ளிவாய்கால்ப் பகுதியில் படுகொலை செய்து வன்னியை சிங்களத்தின் இராணுவப்பிடியில் கொண்டுவந்ததோடல்லாமல், மே 17 என்பது வன்னியில் கறைபடிந்த கறுப்பு நாளாக உலகத்தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கிவிட்டுச் சென்றுவிட்டது.

கடந்த மே மாதம் 17, 18, ஆம் திகதியுடன் வன்னியில் இருந்த மூன்றரை இலட்சம் மக்களையும் மீட்டுவிட்டதாகவும், அம்மக்களுக்கு ஏதோ சுபீட்சமான வாழ்வு ஏற்படப் போவதாகவும் வெளி உலகுக்கு பிரச்சாரப்படுத்திய அரசு வவுனியா நகரப்பகுதியின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடி அங்கு மக்களை முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்ட பாடசாலைக் கட்டடங்களுக்குள் அடைத்து பாடசாலைகளையே நவீன சிறைச்சாலைகளாக மாற்றியிருக்கிறது. மேலும் புதிய முகாம்களை அமைப்பதாகக் கூறிக்கொண்டு செட்டிகுளம் பிரதேசத்தில் 3000 ஏக்கர் காட்டுப்பிரதேசத்தை அவசர அவசரமாக புல்டோசர்கள் மூலம் அழித்து மிகச்சிறிய பரப்பினுள் நெருக்கமான கூடாரங்களை நிறுவி எந்தவிதமான சுகாதார வசதிகளோ குடிநீர் வசதிகளோ இல்லாத பகுதியில் மக்களை அடைத்து, வைத்திருக்கிறது. அத்தோடு இம்முகாம்களுக்கு தமிழினத் துரோகிகளான கதிர்காமர், இராமநாதன், அருணாசலம், நீலன் போன்றவர்களின் பெயர்களை முகாம்களுக்குச் சூட்டி மக்களை வதைப்பதற்கும் தமிழினத்துரோகிகளின் பெயர்களை பயன்படுத்துவது தமிழீழ மக்களை எவ்வளவு தூரம் இழிவுபடுத்த அரசு முயல்கிறது என்பது தெளிவாகிறது.

வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கின்ற முகாம்களின் இன்றைய நிலை என்ன? என்பதை நோக்கினால் மிகவும் ஆச்சரியமான திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். பொதுவாக எல்லா முகாம்களிலும் உணவு விநியோகம் என்பது மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. மக்களுக்கான உணவினை அரசினால் சீராகச் செய்யமுடியவில்லை. அப்படியாயின் அதனை வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமே?. ஆனால் அதையும் அரசு செய்ய மறுக்கிறது. ஏனெனில் தொண்டு நிறுவனங்கள் உட்சென்றால் அங்குள்ள நிலமைகள் முழுவதும் வெளி உலகுக்குத் தெரிந்துவிடும். எனவேதான் அரசு செய்கின்ற இனப்படுகொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காகவே முதற்கட்டமாக வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியது. தற்போது இரண்டாம் கட்டமாக முகாம்களுக்குள் இருக்கும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவுவதைத் தடுக்கிறது.

முகாம்களில் உள்ள மக்களுக்கான நிவாரணப்பணிகளை செய்வதற்கு உள்ளூர்ப் பணியாளர்களைக் கொண்ட இராணுவ மேற்பார்வையில் இயங்குகின்ற சேவாலங்கா நிறுவனத்தையும் சில இடங்களில் போறூட் நிறுவனத்தினையும் அனுமதித்திருக்கிறது. இந்நிறுவனங்கள் போதியளவு ஆளணிவளமோ, நிதி வளமோ இல்லாமல் தம்மால் இயன்றளவு மக்களுக்கான உணவு விநியோகத்தை செய்ய முனைகின்றன. சில முகாம்களில் காலை உணவைப் பெறுவதற்கு வரிசையில் காத்துநிற்கும் மக்கள் மதிய உணவு நேரத்தை அண்மிக்கின்ற பொழுதே காலை உணவைப் பெறமுடிகின்றதென்றால் உணவு விநியோகத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மினிப்பாம் முகாமில் உணவு விநியோகத்தை மேற்கொண்ட போறூட் நிறுவனத்திற்கு ஒருநாள் உணவு விநியோகத்திற்கான நிதி கிடைக்காமையால், அன்றைய தின உணவை நிறுவனம் வழங்கவில்லை. முகாம் மக்கள் யாவரும் அன்றையதினம் பட்டினி. இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த ஒரு வன்னிவாசி 'இதிலும்விட முள்ளிவாய்க்கால் வசதியாக இருந்தது என்றார்'. அந்தளவிற்கு மக்களின் வாழ்வியல் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமா காலைக்கடன்களை கழிக்கக்கூட மலசலகூடத்திற்கு முன் நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருக்க வேண்டுய கொடூரம் வேறு எங்காவது உண்டா?.

மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை. உறையுள் என்பவற்றில், உணவுதான் இப்படி என்றால் உடை மிகவும் மோசமான கட்டத்திலேயே உள்ளது. மாற்றிப்போட உடையின்றி மக்கள் வாரம் முழுவதும் ஒரே உடையை அணியவேண்டிய நிலையில் உள்ளனர். குளிப்பதற்கான வசதிகள்மிகக்குறைவே. பொது இடத்தில் ஆண்கள் பெண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி மிருகங்களைப் போல குளித்து உடைமாற்ற வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்தி இனப்படுகொலையின் ஒரு வடிவமான கலாச்சார அழிப்பினை அரசு மேற்கொண்டுள்ளது. அத்தோடு பல்லாயிரக்கணக்கான வன்னி மாணவர்களின் கல்வி கடந்த ஒன்றரை வருடங்களாக முற்றாகத் தடைப்பட்டுள்ளதோடு மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இதன் மூலம் வன்னி மாணவர்களின் கல்வியை புறக்கணித்து எதிர்காலத்தில் கல்வியறிவற்ற ஒரு தமிழ்சமுகத்தை உருவாக்க முனைகிறார்கள்.

மேலும் மக்களை முகாம்களில் அடைத்து வைப்பதற்கென்று இறுக்கமான முட்கம்பி வேலிகளையும், இராணுவத்தினரையும் சுற்றிவர நிறுத்தி, அதனுள்ளே தகரத்தினாலும், பிளாஸ்ரிக் மற்றும் பொலிதீன் கூரைகளால் உருவாக்கப்படும் சிறிய குடிசைகளில் நீண்ட காலத்திற்கு மக்களை அடைத்துவைத்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவே தோன்றுகிறது. மக்களினுடைய பேச்சுச் சுதந்திரத்தையும், நடமாடும் சுதந்திரத்தையும் பறித்து மக்களை முகாம் சிறைக்குள் அடைத்து அவர்களின் மனவுறுதியை சிதைத்து எதிர்கால வாழ்வுபற்றி சிந்திக்கவிடாது உளவளப்பாதிப்பை ஏற்படுத்தி வன்னி மக்களை அடிபணிய வைக்க முயல்கிறது.

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கின்ற மக்களில் புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர், போராளிகள் குடும்பங்கள், முன்னாள் உறுப்பினர்கள், இந்நாள் உறுப்பினர்களில் துறைசார் பகுதிகளாக வகுத்து அவர்களை வெவ்வேறு முகாம்களுக்கு வகைப்படுத்தி குடும்பங்களிலிருந்தும் உறவுகளிலிருந்தும் பிரித்து வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளும், பாலியல் துன்புறுத்தல்களும் தொடர்ச்சியாக அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் வெளி உலகிற்கு பெரியளவில் எட்டுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் மூன்றரை இலட்சம் அளவிலான மிகப்பெரிய சனத்தொகையினுள் இடம்பெறுகின்ற விடயங்களை வெளிக்கொணர்வதும், தெரியப்படுத்துவதும் மிகக்கடினமானது. ஏனெனில் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினர் மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதனால் யாரும் எக்கருத்தினையும் கூற முன்வரமாட்டார்கள்.

வன்னி ஆக்கிரமிப்பின் போது சரணடைந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அரசியல்த்துறைப் போராளிகளில் முக்கியமானவர்களை ஸ்தலத்திலேயே படுகொலை செய்ததோடல்லாமல் ஏனையவர்களை மனிதாபிமானப் பண்புகளற்ற முறையில் உடைகளின்றி வெறும் உள்ளாடைகளுடன் அடைத்துவைத்து ஒரு நேர உணவினை மாத்திரம் கொடுத்து சித்திரவதை செய்கின்றனர். சரணடைந்த போராளிகளின் தொகையினை பல ஆயிரமாக அரசு கூறிக்கொண்டாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணமான குடும்பஸ்தர்களாகவும், சண்டையிடும் வலுவற்ற அங்கவீனர்களாகவுமே உள்ளனர். உண்மையில் சரணடைந்த அரசியல்த்துறைப் போராளிகளை யுத்தக் கைதிகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க யுத்தக் கைதிகளுக்கு உரிய பாதுகாப்பும், கௌரவமும் வழங்கப்பட வேண்டும். ஆனால் போரில் இறந்தவர்களுடன் புணர்ந்தும், இறந்தவர்களின் கல்லறைவெறி இராணுவத்திடம் மனிதாபிமானங்களையும், சர்வதேச சட்டநியமங்களையும் எதிர்பார்க முடியாததுதான்.

இது இவ்வாறு இருக்க, வன்னியின் மக்கள் சொல்லணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து எதிர்கால வாழ்வே சூனியமாகி மறு நாள் விடிகின்ற பொழுது நாம் எப்படியிருப்போம் என்றே தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களிடம் ஜனநாயகத் தேர்தல் பற்றிப் பேசுவதற்கு வவுனியா நகரத்தில் முகாமிட்டுத் தங்கியிருக்கின்றன துரோகக் கும்பல்கள். தமிழ்த் துரோகிகளான டக்ளஸ் தேவானந்தா, சிர்த்தாத்தன், கருணா மற்றும் பல உதிரிகள் என கோடாலிக் காம்புகள் பலவும் தமக்குத் துணையாக கோத்தாபாய ராஜபக்சவையும் அழைத்துக்கொண்டு ஆட்கடத்தல் கப்பம் என பண வேட்டை முடிந்து, தற்போது வாக்கு வேட்டையில் அகதி முகாம்களுக்குள் இறங்கியிருக்கிறார்கள் என்றால் தமிழன் தலைவிதியை எப்படித்தான் நொந்துகொள்ள.

இங்கு தமிழரின் தாயக பூமியை இரண்டாகப்பிரித்து வடக்கே டக்ளஸ், கிழக்கே கருணா எனப்பங்கு போட்டு 30 ஆண்டு காலத்திற்கு முந்திய நாடாளுமன்றக் கதிரைப் போட்டி நிலைக்குப் பின்னோக்கிச் சென்றிருக்கிறார்கள். அத்தோடல்லாமல் அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த அதே பாணியிலான தேர்தல்ப்பிரச்சாரங்களில் ஈடுபடுவது எவ்வளவு நகைப்பிற்குரியது. தமிழீழ மக்கள் இன்றும் அரசியல்த் தெளிவில்லாதவர்களாக இருப்பதாகவே இந்தக் கூட்டம் நினைத்துக் கொண்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க தமிழர்களின் அரசியல்ப் போராட்டகளம் தற்போது சர்வதேச தளத்திற்கு மாற்றமடைந்து சென்றிருக்கிறது. களத்திலே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட இராணுவப் பின்னடைவும், புலத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதனால் களமும் புலமும் சூனியப்பிரதேசமாகியிருக்கிறது. (புலம் என்றால் பூர்வீகமான வாழ்விடத்தினையே குறிக்கும்) இதனால் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தினை நெறிப்படுத்தி வழிப்படுத்தவேண்டிய கட்டாய தேவையை புலத்திலிருந்து குடிபெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. எனவே புலம்பெயர் தமிழர்களிடம் கடந்த மாவீரர் தின உரையின் மூலம் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இனங்க தற்போதைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வெகுஜனப் போராட்டங்களை மேற்கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்ப்பதோடு நாடுகடந்த தமிழீழ மக்களவையை உருவாக்கி புலம்பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தி உலக ஜனநாயக நியமங்களின் அடிப்படையில் சர்வதேச ரீதியில் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான அங்கிகாரத்தினை நோக்கி நகர்ந்து ஈற்றில் நாடு கடந்த ஈழப்பிரகடனத்தை மேற்கொள்வதற்கான அனைத்துவகையான பணிகளையும் செய்யவேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளது.

இவ்வாறு மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கையோ சிந்தனையே சிங்களத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு அடைத்து வைத்திருப்பதன் மூலம் வன்னிப்பகுதிக்குள் மக்களை அனுமதிக்காமல் ஒரு அதி உச்ச இராணுவ வலயமாக வன்னி நிலப்பரப்பை பிரகடணப்படுத்தி வன்னியினுடைய வளங்களை யுத்தத்தின் மூலம் அழித்ததோடல்லாமல் தொடர்ச்சியாகமக்களின்றிய பிரதேசமாக வைத்திருப்பதன் மூலம் மீண்டும் காடுகள் மண்டி வனவிலங்குகளின் தாக்கத்தினால் வன்னி மக்களின் பயன்தரு பல்லாண்டுப்பயிர்கள் அழிந்து போவதோடு வன்னியின் வாழ்வாதாரமான நீர்ப்பாசனக் குளங்களும் அழிவடைந்து எதிர் காலத்தில் வன்னி மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்ப முடியாத ஒரு நாசகாரத்திட்டத்தை ஒரு இன அழிப்பின் ஒரு பகுதியை ஓசை படாமல் சிங்களதேசம் செய்து கொண்டிருப்பதனையாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

பொதுவாக புவியியல் ரீதியாக நோக்கின் வளமான வன்னிமண்ணும், அதிகூடிய மழைகிடைக்கும் காலநிலையும் ஒரு ஐந்து வருடத்திற்கு மக்கள் இல்லைஎன்றால் அப்பகுதி மிகப்பெரும் காடாக மாறிவிடும். மீண்டும் அங்கு குடியேறுவதற்கான வாய்ப்புக்களை இல்லாமற் செய்துவிடும். இராணுவம் மேற்கொண்ட மிகக்கடுமையான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களினால் வன்னியில் பெரும்பாலான வீடுகளும் கட்டடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. அத்தோடு எஞ்சியிருப்பவற்றை அங்கு நிலைகொண்டிருக்கும் படையினர் உடைத்து அழித்தும், தமது தேவைக்கேற்ப பயன்படுத்துவர். எனவே வன்னியின் மக்கள் குடியிருந்தமைக்கான தடயங்கள் முற்றாக அழிந்துவிடும். அத்தோடு மீண்டும் குடியேற விரும்புவோரின் தொகையும் கனிசமாகக் குறைந்து ஒருசிலரே ஒரு கிராமத்தில் வாழ வேண்டிய துர்ப்பாக்கியநிலை எதிர்காலத்தில் வன்னியில் ஏற்படலாம்.

எனவே சிங்களத்தால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் வன்னி மக்களையும், போராளிகளையும் பாதுகாத்து அவர்களுடைய மீள் குடியேற்றம் மறு வாழ்வு முதலான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான பிரமாண்டமான சர்வதேச அழுத்தத்தினை சிறீலங்கா அரசுமீது மேற்கொள்வதற்கான நடவடிக்கையை புலம்பெயர் தமிழர்கள் மிக வேகமாக செயற்படுத்துவது இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.

-வன்னியன்

நன்றி: ஈழமுரசு

Comments