கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கையை ஐ.நா. திட்டமிட்டு மறைக்கவில்லை; அதிக தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை: பான் கீ மூன் ஒப்புதல்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உண்மைதான். தமிழர்களின் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டு மறைக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விளக்கமளித்திருக்கின்றார்.

இலங்கை, பஹ்ரெய்ன், ஜெனீவா ஆகிய நாடுகளில் தாம் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் குறித்தும் அப்போது அந்த நாடுகளில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆட்சியாளர்களுடன் நடத்திய பேச்சுக்கள் குறித்தும் நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பான் கீ மூன் விளக்கினார்.

அப்போது, இலங்கை போரில் சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும், இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அவரின் சிறப்புத் தூதுவரான இந்திய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரிடமும் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறியபோதிலும் அதனை அவர்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள் என்றும் 'த ரைம்ஸ்' நாளிதழில் வெளியான குற்றச்சாட்டுக்கு பான் கீ மூன் விளக்கமளித்தார்.

இலங்கைப் போரில் சிறிலங்காப் படையினரின் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று 'த ரைம்ஸ்' நாளிதழின் செய்தி, ஐக்கிய நாடுகள் சபை அளித்த தகவல்களின்படி வெளியிடப்பட்டதில்லை. சாவு எண்ணிக்கை குறித்து எங்களிடம் உள்ள தகவல்களுக்கும், அந்த செய்திக்கும் ஒற்றுமை இல்லை.

மேலும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மறைத்துவிட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அதே நேரத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் அதிகம் என்பது உண்மைதான். இதனை நான் ஏற்கெனவே பலமுறை மீண்டும் மீண்டும் கூறி வந்திருக்கின்றேன் என்று பான் கீ மூன் தெளிவுபடுத்தினார்.

கடந்த மே மாதம் 22, 23 ஆம் நாட்களில் நான் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது இலங்கைப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகள் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தினேன்.

இலங்கைப் போரின்போது என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நான் வலியுறுத்தினேன். அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த வேண்டுமானால் அதற்கு முதலில் சிறிலங்கா அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பு அவசியமாகும்.

இரண்டாவதாக அத்தகைய விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை மூலமாக உலக நாடுகள் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டியதும் அவசியமாகும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில் பான் கீ மூன் கூறினார்.

அதே நேரத்தில் இலங்கையில் நீதியை நிலை நிறுத்தவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் சபையால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றும் பான் கீ மூன் அறிவித்தார்.

Comments