சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ஈழ மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்னக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு.
மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண்டு, எங்கெங்கோ இருக்கிற அரசுகளெல்லாம் பதை பதைத்து குரல் கொடுத்த வேளையில் இன்னும் எத்தனை பிணங்கள் விழுந்தாலும் நாங்கள் சிங்கள அரசின் பக்கம்தான் நிற்போம் என ஐ.நா.சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வெட்க்ககேட்டிற்கு என்ன பெயரிட்டு அழைப்பது?
இப்படி இந்த ஈனச் செயலில் இறங்குவதற்கு முன்னர் இந்திய மக்களின் ஒப்புதலைப் பெற்றார்களா?அல்லது நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதித்து ஒப்புதல் பெற்று வாக்களித்தார்களா? யாரின் அனுமதி பெற்று இந்த அநீதிக்குத் துணை நின்றது மத்திய அரசு?
மத்திய அரசு பச்சையாகச் சொல்ல வரும் விஷயம் இதுதான்:
‘ஆமாம். அப்படித்தான் செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்? மீறி மீறிப் போனால் ஒரு ஆர்ப்பாட்டம்... ஒரு உண்ணாவிரதம்... ஒரு நாள் கடையடைப்பு... அவ்வளவுதானே. உங்களால் முடிந்ததைப் பாருங்கள்.' இதுதான் இப்படி என்றால், நாம் இவ்வளவு காலமும் நேசித்து வந்த பொதுவுடைமைக்குச் சொந்தக்காரர்கள் என நம்பியிருந்த நாடுகளோ... அவைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இனப்படுகொலையைக் கண்டிக்காமல் ஆயுதங்களை அள்ளி வழங்கி ஆசி வழங்கியதோடு, ஐ.நா.வில் அந்த மூட அரசுக்கு முட்டுக் கொடுத்து நின்றிருக்கின்றன.
நாம் இதுவரை யார் யாரையெல்லாம் தோழமை உறவுகள் என்று நம்பினோமோ அவர்களெல்லாம் அயோக்கியர்கள் பக்கமே நிற்கிற அவலத்திற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? கியூபா, சீனா, ரஷ்யா என பொதுவுடைமைச் சித்தாந்தம் பூத்த பூமிகள்கூட, பொறுக்கிகள் யார்? செத்து மடியும் பாட்டாளிகள் யார்? என்கிற அடிப்படை அறிவின்றி படுகொலையாளர்கள் பக்கம் நின்ற படுபாதகச் செயலுக்கு என்ன நியாயம் வைத்திருக்கிறார்கள்?
ஒரு தேசிய இனம் அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு ஆளாகும்போது, எவர் பக்கம் நிற்க வேண்டும் என்கிற அரிச்சுவடியை பேராசான் மார்க்ஸும், மாமேதை லெனினும், மாமனிதன் மாவோவும் நேரில் வந்தே போதித்தாலும் புரிபடப் போவதில்லை இந்த மரமண்டைகளுக்கு. இனப்படுகொலை நிகழ்ந்ததாக இவர்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகக்கூட இவர்களால் முணுமுணுக்க முடியவில்லையே ஏன்?
கோபாலபுரத்துக்கும்... போயஸ்கார்டனுக்கும்... ஏன் விஜயகாந்த் வீட்டிற்கும்கூட தேர்தல் காவடி தூக்கும் உள்ளூர் ‘கம்யூனிஸ்ட்டு'களைப் போலத்தான் இம்மூன்று நாடுகளின் ‘கம்யூனிஸ்ட்டு'களும் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் இருக்க முடியும்? இன்குலாப் ஜிந்தாபாத். தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை கட்டுரை அனுப்பியாக வேண்டுமே என்கிற அவசரம்... அடுத்த இதழில் கண்டிப்பாக எழுதுவேன் என்று தந்திருந்த உறுதிமொழி... மாலை ஆறு மணிக்குள் அனுப்பி விட்டால் அச்சேற்றி விடுவார்கள் என்கிற பரபரப்பு... சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்ல எனது இரு சக்கர வாகனத்தினை திருப்புகிறேன்.
கை காட்டாமல்... ஆனால் பின்னால் வரும் அந்த மனிதனுக்குத் தெரியுமா... இப்படி ஒரு கேணையன் முன்னால் சென்று கொண்டிருக்கிறான் என்று? தினத்தந்தி பாணியில் சொல்வதானால் அடுத்த நொடியே ‘டமார்' என்றொரு சத்தம். அவ்வளவுதான் தெரியும். சாலையின் மத்தியில் விழுவதும்... மக்கள் கூடுவதும்... யாரோ இருவர் கை பிடித்து எழுப்பி விடுவதும்... என ஏதேதோ என்னெதிரே நடந்து கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களிலேயே நண்பர்கள் வந்து சேர... அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனை. எக்ஸ்ரே... ஸ்கேனிங்... என நகர்கிறது நேரம். நண்பரும் மருத்துவருமான மகேந்திரன் காலுடைந்ததை உறுதி செய்கிறார். மறுநாள் அறுவை சிகிச்சை... நன்றாகக் கவனித்துக் கொள்ளச் சொல்லி ஆபரேஷன் அறையில் உள்ள மருத்துவருக்கே அலைபேசி வருகிறது இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடமிருந்து. மாற்றி மாற்றி மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்கிறார்கள்.
"முதுகுத் தண்டில் மயக்க ஊசி போட்டிருப்பதால் எழுந்து உட்காராதீர்கள்... மயக்கம் வந்துவிடும்..." "சாய்ந்து படுங்கள்." "இன்சூரன்ஸுக்கு சொல்லியாச்சு. வந்துரும்." "வலி சுத்தமா இருக்காது, அதற்கான மருந்து குடுத்திருக்கு." சுற்றிலும் புடை சூழ நண்பர்கள்... செவிலியர்கள்... மருத்துவர்கள்... ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கிறேன். அய்யோ என் மக்களே... உங்களுக்கு யார் இருக்கிறார்கள்? மருத்துவமனை உண்டா?
உண்டென்றாலும் அங்கு குண்டு விழாது என்கிற உத்தரவாதம் உண்டா? தொடையோடு துண்டாகிப் போன கால்களோடு... தோளோடு பிய்த்தெறியப்பட்ட கைகளோடு... மரண வேதனையில் தவிக்கும் உங்களுக்கு ஒரு வலி நிவாரணி உண்டா? அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உண்டா? என்னைப்போல சோற்றால் அடித்த பிண்டங்களுக்குக் கூட இருக்கிற இன்சூரன்ஸ் உண்டா? படுக்கையில் சரிந்தபடி அழுகிறேன். எங்கள் மக்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? ஏன் எங்கள் மக்களுக்கு மட்டும் இப்படி?
எனது அவலக்குரலும் சிங்கள அரசுக்குக் கேட்டி-ருக்குமோ என்னவோ... அடுத்த சில தினங்-களிலேயே மக்கள் இப்படி மருத்துவ-மனைகள்.... மயக்க மருந்துகள்... வலி நிவாரணிகள் இல்லாது துயரப்படு-கிறார்-களே என்கிற ‘மனிதாபிமானம்' மேலிட... கொத்துக் கொத்தாய் குண்டுகளை வீசி... அம்மக்களுக்கு வலியிலிருந்தும்... வாழ்-விலிருந்தும் ‘விடுதலை' அளிக்கிறது சிங்கள அரசு. வன்னிக்காடுகளிலும்... ஈழத்தின் முள்ளி வாய்க்காலிலும் கொல்லப்பட்டது பல்லாயிரம் தமிழ் மக்கள் மட்டுமில்லை. புத்தரும் சேர்த்துத்தான்.
"தமிழக அரசியல்" வார இதழிலில்
--- பாமரன் ---
www.tamilkathir.com
Comments