அன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் - தயா மோகன்

மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன். இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

Comments