நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்

இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரு வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிக முக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித்தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

- தமிழர் ஓர் தேசிய இனம்
- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.

2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6. அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும்.

இச் செயற்பாட்டுக் குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா)

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)

பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)

பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)

கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா)

மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)

கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)

திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா)

திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து)

பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)

ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்.

இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.

மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

Comments