போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும்: நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து;வெள்ளைக் கொடியுடன் வருபவர்கள் மீது சுடுவது

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு

இலங்கையில் நடைபெற்ற மோதல்களின் போது மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றன என்பதை உறுதி செய்யும் விசாரணைக்கு உதவி செய்ய ஐக்கிய நாடுகள் சபை தயாராகவுள்ளது.

மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அங்கு முழுமையான தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை.

இலங்கையில் நீதி, தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஏற்பட மனித உரிமைகள் மீறல் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியமானது என்றார்.

அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதியளிக்கப்படவேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

வெள்ளைக் கொடியுடன் வருபவர்கள் மீது சுடுவது தவறு

வெள்ளைக் கொடியுடன் வருபவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்
மிச்சலே மொன்டஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தவேளை சுடப்பட்டது யுத்தக்குற்றம் என ஐ.நா. கருதுகிறதா? என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நடைபெற்றதா இல்லையா என்பதை ஆராய்ந்த பின்னரே இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கலாம் எனவும் மொன்டஸ் மேலும் தெரிவித்தார்.

Comments