இந்தியா தனது நிலைப்பாட்டைதெளிவுபடுத்த வேண்டும்

இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து 28 நாட்கள் நிறைவடையும் தறுவாயிலுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறப்பட்டபோதும் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான முன்னெடுப்பு என்று கூறியே இந்த யுத்தத்தை முன்னெடுத்தது.

இந்த யுத்தத்துக்கு இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகள் உதவியுள்ளதாகவும்அந்த நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இந்தியாவின் போரைத்தான் இலங்கை நடத்தியிருப்பதாக ஜனாதிபதியே மிக வெளிப்படையாகக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போரின் முடிவுடன் மனிதாபிமான நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்ட மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு இந்த மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனரோ அதேபோல் அவர்களது அரசியல் அபிலாஷைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ள விடயமாக அல்லது மறக்கப்பட்ட விடயமாக போயுள்ளன.

ஆனால், இலங்கையின் மனிதாபிமானப் போரினை முன்னெடுப்பதற்கு ஒத்தாசை வழங்கிய இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய கடமைப்பாடு உள்ளது. அதாவது முட்கம்பிகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களின் சுதந்திரத்தையும் அவர்களது அபிலாஷைகளையும் உறுதிப்படுத்த வேண்டிய பாரிய கடமைப்பாட்டையும் இந்த நாடுகள் கொண்டுள்ளன.

குறிப்பாக இந்தியா பாரிய பொறுப்பினைச் சுமந்துள்ளது. அந்தப் பொறுப்பினை மிக இலகுவில் இந்தியாவால் தட்டிக் கழித்துவிட முடியாது. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக மேற்கொண்ட அனைத்து வழியிலான அஹிம்சை வழிப் போராட்டங்களும் தோற்றுப் போன நிலையிலேயே ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இந்த ஆயுதப் போராட்டத்தினை எண்ணெய் ஊற்றி வளர்த்த முழுப் பொறுப்பையும் இந்தியாவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, இந்தத் தீவிரவாதத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இன்று பதவி வகிக்கும் கே.என். நாராயணன் அவர்களது பங்களிப்புப் பற்றிக் கூறத் தேவையில்லை. அது பரம ரகசியமுமல்ல. இந்தியா தொடக்கி வைத்த தீவிரவாதத்தை இந்தியாவே முடிவுக்குக்கொண்டு வருவதற்குக் காரண கர்த்தாவாக இருந்துள்ளது. இதுவரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்துப் பேசிய இந்தியா போரின் முடிவுடன் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமெனக் கூறுவது விசித்திரமாக இருக்கின்றது.

இந்தியத் தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் காட்டிய அக்கறையும் ஆர்வமும் அந்தக் கட்சியின் வெற்றியுடன் முற்றுப் பெற்று விட்டது போல் தெரிகின்றது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்குமென்றும் முன்னர் புதுடில்லி அரசு கூறிவந்தது.

இதற்கு மேல் ஒருபடியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத்தும் சில நம்பிக்கைகளை தமிழ் மக்களிடம் வளர்த்திருந்தார். கிழக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு மேலாக தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். ஆனால், தற்போது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை, கவலைகளைத் தீர்த்து வைக்க இலங்கை அரசாங்கமானது தனது மனஆற்றலையும் உறுதியான தீர்மானத்தையும் வெளிப்படுத்தும் என்று தான் மனப்பூர்வமாக எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன். "இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே முன்வைக்க வேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பிலும் இந்தியா அழுத்தத்தை இலங்கை மீது பிரயோகிக்கப் போவதில்லை'' என்று கூறியுள்ளமையானது, இந்தியாவின் இலங்கை விவகாரம் குறித்த நிலைப்பாட்டில் பாரிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியத் தேர்தல் காலத்தின் போது இந்தியா கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும் இன்றைய நிலைப்பாட்டுக்குமிடையே பாரிய இடைவெளி இருப்பதாகவே உணர முடிகிறது. இந்தியத் தேர்தல் முடிவுகளும் இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தும் தமிழ் மக்களை இந்தியா கைவிட்டு விட்டதோ என்ற கேள்வியே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க, போரினை முடிவுக்கு கொண்டுவர உதவிய அனைத்து நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் மக்கள் இலங்கைக்கு உதவிய நாடுகளிடம் கேட்பதெல்லாம் தமது அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு தீர்வினை பெற்றுத் தரவேண்டுமென்பதே. குறிப்பாக, இந்தியாவிடமும் மிக உரிமையுடன் இந்தக் கோரிக்கையினை தமிழ் மக்கள் முன்வைக்கின்றனர்.

ஏனெனில் நீங்கள் கூறுகின்ற பயங்கரவாதப் போர் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உதைத்து தூக்கி வீசப்பட்டதன் விளைவாக உருவானதாகும். பயங்கரவாதமும் போரும் முற்று பெற்றாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான நிரந்தரத் தீர்வோ அல்லது முற்றுப்புள்ளியோ இன்னும் வைக்கப்படவில்லையென்பதனை இந்தியா உட்பட இலங்கைக்கு உதவிய அனைத்து நாடுகளும் உணர்ந்தாக வேண்டும்.

அந்த வகையில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதி செய்ய வேண்டிய பாரிய கடமைப்பாடு உண்டு என்பதனைத் தமிழ் மக்கள் சார்பில் கூறிக் கொள்ள விரும்புகிறோம். இந்தியா, இலங்கை இன விவகாரம் தொடர்பாக தனது இறுதியானதும் உறுதியானதும் இதய சுத்தியுடனுமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்பதே தமிழ் மக்களின் இன்றைய கோரிக்கையாகவுள்ளது.

ஆசிரியர் தலைப்பு

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

(14.06.2009)

Comments