திசைமாறிப்போகிறதா புலம்பெயர் மக்களின் போராட்டம்?

இதுபோன்றதொரு குழப்ப நிலையை ஈழப்போராட்ட வரலாற்றில் என்றுமே கண்டதில்லை. இந்தியா-சிறீலங்கா புலனாய்வுப்பிரிவுகளின், நாசகாரச் செயற்பாடுகளை மிஞ்சுமளவிற்கு மின்னஞ்சல் போர்களும், ஊடகங்களை வெருட்டும் உத்திகளும் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

எதிரி யாரென்பதை மறந்துபோகுமளவிற்கு அறிக்கைச் சமர்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. பெருந்தேசிய இனவாதத்தின் அடக்குமுறைக்குள் சிக்கிச் தவிக்கும் மக்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை துரோகிகளாகவும், தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எங்கோ திசைதிருப்பப்படுகின்றதுபோல் தெரிகின்றது. இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து சிங்களம் தப்பிச் செல்ல நாமே பாதை எடுத்துக்கொடுக்கின்றோம் என்று எண்ணத் தோன்றுகின்றது. தேசங்கடந்து தேசிய அரசு உருவாகுமுன், தேசமில்லாத மனிதர்களாகிவிடுவார்கள் தாயக மக்கள். சர்வதேசத்தின் சட்டதிட்டங்களுக்கூடாக, தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்
மையை நாட்டு எல்லைகள் கடந்த தேசிய அரசினூடாக உருவாக்க முனைபவர்கள் சமகால புவிசார் அரசியல் போக்கினைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
மேற்குலகிற்கும், ஆசிய வல்லரசினர்களுக்கும் இடையே நடைபெறும் ஆதிக்க விரிவாக்கப் போட்டியில் ஈழத் தமிழினம் சிக்குண்டிருப்பதை நோக்கவேண்டும்.

ஈழச் சிக்கலின் மேற்குலகம் தலையிடாமல் இருப்பதற்காக இந்தியாவும், சீனாவும் கூட்டுச் சேருகின்றன. ஐ.நா பாதுகாப்புச் சபையிலும், மனிதவுரிமைப் பேரவையிலும் இந்த மோதல்கள் எதிரொலித்தன.

பொருளாதாரச் சீரழிவிற்குள் அகப்பட்டுள்ள மேற்குலகச் சந்தையாளர்கள் ஈழத் தமிழினத்திற்காக இந்தியா, சீனாவுடன் முரண்பட விரும்பவில்லை. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதன்மூலம் சிறீலங்காவின் ஆதரவினைப் பெறலாம் என்று எண்ணிய மேற்குலகம் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளது. ஆகவே விடுபட்ட பிடியை மேலும் இறுக்கிக்கொள்ள நோர்வேயூடாக புதிய நகர்வினை உருவாக்க மேற்குலகம் முனைகிறது. தேசங்கடந்த தேசிய அரசு உருவாக்கும் முயற்சிக்கு, நோர்வே பின்புல ஆதரவு வழங்குமென்று சிலர் கருதுகிறார்கள். ஆனாலும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த சக்தியை அந்நாடு நிச்சயம் விரும்பாது.

சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் மேற்கொண்ட தவறான போக்கினை மறுபடியும் கடைப்பிடிக்க இவர்கள் முயற்சிப்பார்கள். அதேவேளை மேற்குலகை மையப்படுத்திய புறநிலை அரசு சிறீலங்காவிற்கு ஆதரவு தெரிவித்துவரும் மேற்குலகு எதிர்ப்பு அணிகளுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்படலாம். வன்னிப் படுகொலைகளின் இறுதிநாட்களில் இந்த மேற்குலக ஆதரவுகொண்ட மனிதாபிமானச் சட்டங்களால் எதுவுமே செய்யமுடியவில்லை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள முரண்பட்ட தேசங்களான இந்தியாவும், சீனாவும் ‘மனிதாபிமானம்’ என்கிற விடயத்திற்கு அப்பால் சென்று தமிழின அழிப்பை ஏற்றுக்கொண்டிருந்தன.

மானுட தர்மம், நீதி நியாய தர்மங்களெல்லாம் விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கைகள் கடந்த மாதம் தகர்ந்து போயுள்ளன. ஆனாலும் இந்த அறநெறிகளை இழக்க விரும்பாத ஈழத் தமிழினம் தொடர்ந்து போராடும் என்பதைச் சிங்களம் புரிந்துகொள்ளும். அழையா விருந்தாளிகளாகச் சென்ற பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சர் பேர்னாட் குஷ்னர், பிரித்தானிய அமைச்சர் டேவிட் மிலிபான்ட் போன்றவர்களை சிறீலங்கா நடாத்திய விதமும், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப்றே அவர்களுக்கு விசா வழங்காமல் புறக்கணித்த திமிர்த் தனமும் ஆசிய வல்லரசுகளின் செல்லப்பிள்ளையாக சிறீலங்காவை வெளிக்காட்டியது. மேற்குலகால் எதையுமே செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய நிதிய உபகாரத்தையிட்டு சிறீலங்கா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பின் நிலையில்தான் சிங்களம் இருக்கிறது. ஆகவே சிங்களத்திற்கு ஆதரவு வழங்கும் வல்லரசு அணிகளுக்குள் மோதல் ஏற்படமல் அடுத்தகட்ட நகர்வுகள் எதுவுமே தமிழினத்திற்குச் சாதகமாக அமைய வாய்ப்பில்லை.

அந்தந்த நாடுகளில் உருவாக்கப்படும் மக்களவையூடாக போராட்ட முனைப்பினைத் தக்கவைத்து எம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளும் நாடுகளுடன் சரியான உறவினை நாம் ஏற்படுத்தவேண்டும். புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான கட்டமைப்புக்கள் யாவும் மேற்குலகிற்குச் சார்பான அணி என்கிற பரப்புரையை சிங்களமும், இந்தியாவும் கட்டவிழ்த்துவிட்டுள்ளதென்பதை புரிந்துகொள்ளவேண்டும்.இதன் எதிர்வினைத் தாக்கத்தினை, அண்மையில் நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறப்பு அமர்வில் தரிசித்தோம்.

சடுதியாக முன்வைக்கப்பட்டுள்ள தேசம் கடந்த தேசிய அரசு என்கிற விவகாரமும் இத்தகைய மேற்குலகக் கண்ணாடியூடாகவே பார்க்கப்படுகின்றது. இந்த அரசிற்கு மேற்குலக நாடுகளின் நேரடியான ஆதரவு கிடைக்குமென்று கற்பிதம்கொள்ள முடியாது. ஏனெனில் ஆயுதப் போராட்டமானது நாட்டினைப் பிளவுபடுத்திவிடுமென்பதால் அதனை எதிர்த்த மேற்குலகத்தால், தமது ஆதிக்கம் சிறீலங்காவில் நிலைநாட்டப்படாத பட்சத்தில், பிரிவினைக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று இந்த அரசு உருவாக்கிகள் கருதுகின்றனர். ஆனாலும் பொருளாதார நிமிர்வொன்று மேற்குலகத்தில் ஏற்படும்வரை அதற்கான சாத்தியப்பாடுகளும் அரிதாகவே இருக்கும். மேற்கு நிமிரமுன் காலூன்றி தம்மைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் சீனா மிக வேகமாக நகரும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மாரில் கட்டும் துறைமுகங்களைவிட, சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகமே சீனாவின் எதிர்காலத் திட்டதில் முதன்மைவாய்ந்த மையமாக அமையப்போகிறது. ஆகவே மேற்குலக மற்றும் அதற்கு எதிராகத் தோற்றம் பெறும் அணிகளுடன் சமாந்தரமான அணுகுமுறை ஒன்றினை நாம் முன்னெடுக்கவேண்டும். இரு துருவ நிலை நோக்கி நகரும் புவிசார் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் மேற்குலக நாடுகளில் புறநிலை அரசு உருவாக்க நிலைநோக்கி நகர்ந்தால் எம் தாயகம் இன்னுமொரு பலஸ்தீனம் போலாகும்.

அதேவேளை, எந்தவொரு அரசியல் கட்டமைப்புகளும் பரந்துபட்ட மக்களின் உள்ளார்ந்த பங்களிப்பில்லாமல் வெறும் நான்கு சுவர்களுக்குள் உருவாக்கப்படுமாயின் தேக்கநிலையையடைந்து சிதைந்துபோகும். காகிதப் புலிகளும், நாற்காலிப் புரட்சியாளர்களும் எமக்காக விட்டுச்சென்ற பல வரலாற்றுப் படிப்பினைகள் உண்டு. தலைவர் குறித்த விவகாரத்தில் மீண்டும் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தால் சிங்களத்தின் இனப்படுகொலைகள் மூடி மறைக்கப்படும். அதனையே மகிந்தரும் எதிர்பார்க்கின்றார்.

இதயச்சந்திரன

ஈழமுரசு (20.06.20009)

Comments