நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…

அண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க', ‘ஒழிக'எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே

நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்த கிறக்கத்துடனும் என்னால் உச்சரிக்கப்பட்டதையுணர்ந்து நிறுத்திக்கொண்டேன். ஏதோவொரு கணத்தில் வெறுமையும் உண்மையும் சூழ்ந்துகொண்டநிலையில் அயர்ச்சி மேலிட மௌனமாக அந்தக் கூட்டத்தில் நடந்துபோனேன். ‘எனது சொந்த மக்கள் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்படும்போது, ஊனமாக்கப்படும்போது, சிறைகளுள் சித்திரவதை செய்யப்படும்போது, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும்போது, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தான்களின் முன்னால் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் கையேந்தி நிற்கும்படியான பிச்சைக்காரர்களாக்கப்படும்போது எதுவும் செய்யத் திராணியற்றுப் போன அரசாங்கம் ஆண்டுகொண்டிருக்கிற இந்த மண்ணில் இப்படியான கூட்டங்கள் வியர்த்தமானவை’ என்ற எண்ணம் தந்த அயர்ச்சியே அது.

‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா விடுவான்?’என விண்டுவிளம்பி விலாவாரியாக எழுதிவைத்துவிட்டு, முத்துக்குமார் என்ற இளைஞன் தன்னையெரித்துக் கருகி மறைந்தது இந்த மண்ணில்தான் என்பதை அறிந்திருக்கிறபோதிலும்- முழுமையான அரசியல் புரிதலுடனோ அன்றேல் ‘என்னினம் அழிகிறதே’என்றொரு கணம் எழுந்த உணர்ச்சிவேகத்திலோ முத்துக்குமாரைத் தொடர்ந்து அந்தத் தீயின் தடத்தில் மேலும் சிலர் தம் வாழ்வை முடித்துக்கொண்டார்கள் என உணர்ந்திருக்கிறபோதிலும்- அரசியல் இலாபங்களுக்காக, அதிகார வேட்டைக்காக, ஈழத்தமிழர் பிரச்சனையைத் தோளில் தூக்கிவைத்துக் காவடியாடியவர்கள் மத்தியில், தனிப்பட்ட வாழ்வைத் தள்ளிவைத்து வீதிகளில் இறங்கித் தடியடிபட்டவர்களும் இன்னமும் சிறையிருளினுள் சித்திரவதைப்படுபவர்களும் இருக்கவே இருக்கிறார்கள் என்று நினைக்குந்தோறும் நெஞ்சினுள் பரிவின் கண்ணீர் திரண்டு தளும்புகிறபோதிலும்- ஈழத்தமிழருக்கு நல்லது நடக்காதா என்ற நப்பாசையினால், எப்போதும் அதிகாரத்தின் குரலிலேயே பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதா அம்மையாரையே விதந்தேற்றவும் வியந்துபோற்றவும் வேண்டிய கெடுவிதிக்கு தேர்தல் காலத்தில் தள்ளப்பட்ட இனவுணர்வாளர்களின் உள்ளக்கொதிப்பை உணரமுடிகிறபோதிலும்- ஈழத்தமிழர் கதை தற்காலிகமாக துயரத்தில் முடிந்தாலும் விடியும்வரை எமது பணி தொடருமென்று மதிப்பிற்குரிய சீமானும் மணியரசனும், தாமரையும், அறிவுமதியும் பாரதிராஜாவும், கொளத்தூர் மணியும், நெடுமாறன் ஐயாவும், வை.கோ அவர்களும் இவர்களைப்போன்ற பலரும் துடித்துக்கொண்டிருக்கிறபோதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை,‘அதிகாரங்களை அசைக்க முடியாது’என்ற மொட்டைச்சுவரிலேயே வந்து மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு நிற்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆம்! நாங்கள் செவிட்டு மலைகளிடம் வியர்த்த வார்த்தைகளால் உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் யாரை எதிர்த்து ஊர்வலங்களை நடத்துகிறோமோ அவர்கள் அந்நேரம் பல்லிடுக்கில் குச்சி வைத்துக் கிண்டிக்கொண்டோ, உண்ட களைப்பில் ஏப்பம் விட்டபடியோ வாயு பறிந்தபடியோ இத்தகைய கூட்டங்களை அசுவாரசியத்தோடும் அலட்சியத்தோடும் பார்த்துக்கொண்டிருப்பர் என்ற நினைப்பை அழிக்கமுடியவில்லை. தமிழகத்தையும் இந்தியாவையும் பொறுத்தவரை இப்போது வேண்டியிருப்பது ஆட்சி மாற்றங்களல்ல; மனோரீதியிலான அடிப்படை மாற்றங்களே. காட்சி மாற்றங்களல்ல; இங்கே வேண்டியது கருத்தியல் மாற்றங்களே.

அன்றாட வாழ்வுக்குப் பங்கம் வராமல் சில அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு, இலவசத் தொலைக்காட்சியைக் கொடுத்து அவர்களைச் சரிகைக் கனவுகளுள் ஆழ்த்திவிட்டு, கேள்வி கேட்பவர்களின் வாய்களை பணத்தினாலோ அடியாள்தனத்தினாலோ அடைத்துவிட்டு தமிழகம் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இலஞ்சம், ஊழல், அடியாள் அரசியல், ஒற்றையாதிக்கம் இவைகளல்லாத நீதியான ஆட்சியமைப்பை நிறுவுவதென்பது பல நூறாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை சிலரைத் தவிர யாரும் உணரவில்லை. எனது நண்பர்களிடம் பேசும்போது அடிக்கடி சொல்வேன் “ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அழிந்துவிட்டோமென்றே வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் அரசுகள் வஞ்சகத்தினால் எங்களை அழித்துவிட்டன. ஆனால், நாங்கள் எப்படியோ துளிர்த்துவருவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால்… நீங்கள்தான் பாவம். அழிவது தெரியாமல் அழிந்துகொண்டிருக்கிறீர்கள்”என்று. உண்மையில் தமிழகத்திற்கும் ஒரு புரட்சி வேண்டியிருக்கிறது. இங்கே நான் ஆயுதப்புரட்சியைச் சொல்லவில்லை; ஜெயமோகன், சாரு நிவேதிதா வகையறாக்கள் அஞ்சவேண்டியதில்லை. ‘அரசியல்வாதிகளுக்கான மக்கள்’ என்பதிலிருந்து ‘மக்களுக்கான அரசியல்வாதிகள்’ஐ உருவாக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. நீங்கள் நடந்துகொண்டிருப்பது பொருக்கேறிக் கெட்டிப்பட்ட பாதை… கீழே புதைகுழி இருக்கிறது என்பதை யாராவது உணர்த்தியாக வேண்டியதாயிருக்கிறது. இறுகிய பனிப்பாளங்களின் கீழ் உயிரை வெட்டும் குளிர்நீர் இருக்கிறதென்பது பொறிந்து விழும் காலம் வந்தால்தான் புலப்படும்.

‘இதோ கைக்கெட்டும் தொலைவில் இருக்கிறது கடவுளின் உலகம்’என்ற மதவியாபாரிகளின் வாக்குறுதிகள் போன்றதல்ல அந்த ஆதர்ச உலகம். பொறுமையும் தொலைநோக்கும் எதிர்கால சந்ததிக்காக இன்றைய நாட்களை இழக்கத்தகு தியாகமும் வேண்டும் மக்களிடத்தில். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெரியாரைப் போன்றதொரு மானமும் தீரமும் கொண்ட, தீர்மானங்களை எடுக்கத்தகு தலைவன் ஒருவன் உருவாகவேண்டும். அவன் ஏற்கெனவே பிறந்துவிட்டான். அவனை மக்கள்தான் கண்டெடுக்கவேண்டும்.

தமிழகம் ஆதர்ச பூமியாக வேண்டும் என்ற விருப்பின் பின்னால் சுயநலம் இல்லாமலில்லை. விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற பேராதிக்கத்தின் காலடியில், பூகோள ரீதியாக கண்ணீர்த்துளி வடிவில் எமது இருப்பு அமைந்துவிட்டது துரதிர்ஷ்டமே. புயல் கடந்தாலும் மழை பொழிந்தாலும் பூகம்பம் வந்தாலும் அது ஈழத்தமிழர்களையும் பாதிக்கவே பாதிக்கும். அதன் அக,புறநிலைகள் எங்களுக்குச் சாதகமாக்குவதையன்றி வேறு வழியில்லை நமக்கு. மாடு காலால் உதைக்கிறதென்பதற்காக பால் கறக்காமல் விட்டுவிடுகிறோமா என்ன?

எங்கள் விடுதலை பற்றிய கனவு ஒரு புகையைப் போல கலைந்துபோவதைப் பார்த்தோம். பல இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் போலவே எங்களது நாடும் நாடுகடத்தப்பட்டுவிட்டது. அது எங்களைப் போலவே அகதியாகிவிட்டது. ‘நாடு கடந்த அரசாங்கம்’என்பதைப் பற்றிப் பேசவாரம்பித்திருக்கிறோம். கட்டியெழுப்பிய அரசாங்கத்தைக் கடைசியில் ஒருநாள் கட்டித்தூக்கிக்கொண்டு இங்குதான் வந்தாகவேண்டும். இந்தியாவின் காலடியில் கண்ணீர்த்துளியாக அல்லாமல் சமுத்திர அலைகளாகத் திரும்பிவரவேண்டும்.

மரத்தை நடுகிறவன் பழங்களைச் சிந்திப்பதில்லை. வலசைப் பறவைகள் தூரத்தை அஞ்சுவதில்லை. நாங்களும் விதைகளைத் தூவி வைப்போம். விருட்சமாகட்டும்


அன்புடன்,

தமிழன்.

தமிழா,
பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்

Comments