தமிழர் படுகொலைக்கு கடும் கண்டனம்; இனப்படுகொலைக்கு எதிராக நடவடிக்கை: உலக நாடுகளுக்கு பராக் ஒபாமா வலியுறுத்தல்
![](http://www.puthinam.com/d/p/2009/may/may/lr/obama_1.jpg)
இலங்கை, சூடான் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளுக்கு பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
யேர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் 56 ஆயிரம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட புக்கன்வால்ட் நகரில் உள்ள வதை முகாமை பார்வையிட்டார்.
பின்னர் நேர்காணல் அளித்த அவரிடம், ஹிட்லர் காலத்தில் நிகழ்ந்தது போன்ற இனப்படுகொலைகள் எக்காலத்திலும் நடைபெறக்கூடாது என்ற கொள்கை இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும், சூடான் நாட்டில் டார்பர் பகுதியில் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளுக்கும் பொருந்துமா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பராக் ஒபாமா, இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த வதை முகாம் நமக்கு வலியுறுத்துகிறது.
இனப்படுகொலை என்ற கொடுமைக்கு எதிராக நாம் போராட வேண்டும். அநீதி, சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு போன்றவை எந்த வடிவங்களில் இருந்தாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டியது நமது கடமையாகும்.
இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. இனப்படுகொலைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உலக நாடுகளுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சூடானில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒபாமா மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த மே மாதம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிறிலங்காப் படையினர் கொன்று குவித்தனர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த பராக் ஒபாமா, இலங்கை போர்ப் பகுதியிலும் மருத்துவமனைகளிலும் வாழ்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு காரணமான குண்டுவீச்சை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், அதனை பொருட்படுத்தாத சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி நாள்தோறும் 1,000 தமிழர்கள் என்ற அளவில் இனப்படுகொலையை மேற்கொண்டது என்றும் இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் பல்வேறு நிழற்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments