ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.
உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம், மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தியம்,அகிம்சை,கொல்லாமை பற்றி வாய்கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின்
ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்கமிக்கவர்களின் கண்களுக்கு, ஈழத்தமிழர்கள் துடிதுடிக்க கொன்றொழிக்கப்பட்டது தெரியவில்லையா? அல்லது ஒரு ஈயை விடக் கேவலமானவர்கள் தமிழர்கள் எனக்கருதி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா???
விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றின் சுதந்திரத்தினைப் பறிப்பதற்கே பாய்ந்தடித்து, பதறியடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விடும் ஈரநெஞ்சத்தவர்கள் , புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசின் கொலைக்கூண்டுகளில் எந்த அடிப்படை வசதியுமின்றி, சுதந்திரமுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் அப்பாவித் தமிழர்கள் விடயத்தினைக் கண்டுகொள்ளாமல் கல்நெஞ்சக்காரர்களாக இன்னும் இருப்பது ஏன்???
இவை மட்டுமல்ல... பல்வேறு சந்தர்ப்பங்கள், சம்பவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது... ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகின்றது. பாரபட்சமான உலகநீதிக்குள் பழிவாங்கப்பட்டிருக்கின்றது ஈழத்தமிழினம்.
தமிழர்களிற்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.
வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனது ஈழத் தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது.
இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் சுயநலன்களுக்கு அப்பாவித் தமிழினம் இரையாகி இழந்தது அதிகம். குறிப்பாக இந்தியாவின் பழிவாங்கல் துரோகத்தனத்தினை என்றுமே ஈழத்தமிழினம் மறக்காது, மன்னிக்காது. அரவணைக்கும் என்று நம்பியிருந்தவர்களின் எதிபார்ப்பையும் எதிர்காலத்தையும் அழித்தொழிக்க சிங்களத்தோடு கூடிநின்று குழிபறித்தது.
சந்தர்ப்பம் பார்த்து ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியது. சிங்களவெறியர்களின் கொலைவெறியாட்டத்தினை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது சோனியா அம்மையார் தலைமையிலான இந்தியக் காங்கிரஸ் அரசு. புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை நினைத்து அகமகிழ்ந்து தன் கணவர் இராஜீவ் காந்தியின் சமாதியில் கடந்த மே 21 இல் அவரது நினைவு தினத்தன்று மனநிறைவோடு அஞ்சலி செலுத்தினாராம்.
அதற்கு அவர் பலியெடுத்த அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்கள்தான் எத்தனை ஆயிரம்? அதைவிட சீனாவின் ஆதிக்கப் போட்டியார்வத்தில் அது சிங்களத்துக்கு அள்ளிக் கொடுத்த கொத்துக் குண்டுகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டது தமிழினம். "பொய்வித்தை வியாபாரி" சீனாவின் வர்த்தக, வல்லாதிக்க நோக்கத்தினால் நொடிக்கப்பட்டது அப்பாவித் தமிழினந்தான்.
இவையோடு சேர்த்து ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் தென்னாசிய நாடுகள் பலவும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழரின் குரல்வளையறுக்க கூடித் திட்டம் போட்டன. அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இதில் குறைவைக்கவில்லை. அவையும் தம் பங்கிற்கு தமது அதிகாரத்தினை ஆசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தம்நிலை மறந்து தாளம் போட்டன. இவர்களின் இரட்டை வேட நாடகங்களின் மத்தியில் தன் கொலைவெறியாட்டத்தினை கச்சிதமாக நடத்தி முடித்திருந்தது சிங்களம்.
பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்த பின்னரும் சிங்களத்தின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை. தினமும் கொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள், கைதுகள், சித்திரவதைகள் என்பன இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஈழத்தமிழரின் பாரம்பரிய விழுமியங்கள், அடையாளங்களை இல்லாதொழிப்பதில் சிங்களம் கருத்தாய் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்மக்களின் பிரதேசங்களை பெளத்த சிங்கள மயமாக்குவதுடன், தமிழர்களுக்கான ஒரு ஆளுமைமிக்க தலைமையை இல்லாமற் செய்வதன்மூலம் தமிழர் என்ற தனித்துவத்தினை, அதிகார பிரதிநிதித்துவத்தினை இழக்கச் செய்வதும், இளம் சமுதாயத்தினர் மத்தியில் கலாச்சாரச் சீரழிவினை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் விடுதலையுணர்வை அடியோடு இல்லாமற் செய்வதற்கும் முன்னெடுப்புக்கள் நடக்கின்றன.
மொத்தத்தில் இலங்கையில் தமிழினம் என்பது ஒரு தனித்துவ அடையாளமில்லாத அடிமைப்படுத்தப்பட்ட இனமாக ஆக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதையெல்லாம் மீறி தமிழினத்தின்பால் அக்கறைகொண்டு சுதந்திரமிக்க நியாயமான தீர்வொன்றை சிங்கள பேரினவாதிகளிடமிருந்து எதிர்பார்த்தோமானால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
இவ்வாறான கீழ்த்தரமான நிலைமை ஈழத்தமிழினத்திற்கு வராமல் தடுக்க என்ன வழி?
ஈழத்தமிழர்கள் அகிம்சை வழியில் போராடி முடியாமல் போக, ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று முடிவெடுத்து இற்றைக்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடி ஒன்றரை இலட்சத்துக்கு மேலான மக்களையும், முப்பதினாயிரத்துக்கும் மேலான விடுதலைப் போராளிகளையும் இழந்தும் சர்வதேசத்தின் கரிசனை ஈழத்தமிழர்மீது முழுமையாக ஏற்படாத நிலையில், இவ்வளவு காலமாய் ஈழத்தமிழரை தலைநிமிர்ந்து நடக்க வைத்த ஆயுத்தப் போராட்டமும் முடிவடைந்து விட்டதான கருத்து எல்லாமட்டத்திலும் எழுந்து வருகின்றது.
ஆயுதப் போராட்டம் இனிமேலும் தொடரப்படுவதற்கும் இனி சாத்தியக் கூறுகள் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவற்றின் உண்மைத்தன்மைபற்றியும், இக்கருத்தினை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களின் வாதப் பிரதிவாதங்களையும் தாண்டி இனிமேல் தமிழர்களின் போராட்டம் எந்த வழியில், யார் தலைமையில் தொடரப் போகின்றது? அது எவ்வகையான போராட்டமாக அமையும் அல்லது அமையவேண்டும்? தற்போதைய தோல்விகளின் பின் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் ? தனி ஈழம் என்ற இலட்சியத்தினையும் நியாயமான தீர்வினையும் அதன்மூலம் அடைய முடியுமா? என பலவாறான கேள்விகள் வரிசையாகக் காத்திருக்கின்றன.
ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள், இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது.
உங்களது போராட்டம்தான் உங்கள் உறவுகளை சிறைக் கூண்டுகளிலிருந்து விடுவிக்கும், காப்பாற்றும். உங்கள் உரிமைகளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.
புலிகள் தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டதன்மூலம் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பை சர்வதேசத்தின் தலையில் போட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் அதை விரும்பியோ விரும்பாமலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
தொடரும் உங்கள் போராட்டங்கள் அதனை அவர்களுக்கு மேலும் வலியுறுத்தும். அதை நாம் செய்ய வேண்டியது நமது தலையாய கடமை. இன்றைக்கு உலக நாடுகள் கொஞ்சமேனும் ஈழமக்களுக்காக குரல்கொடுக்கின்றது என்றால் அது புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்களினால்தான். இந்நிலையில் நமது ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு நமக்குள் நாமே கருத்துப்பிளவுபட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை... பிரயோசனமுமில்லை.
வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் காலம் தன் பாதையில் அனைத்தையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிகாரபூர்வமற்ற அநாமதேய அறிக்கைகளைக் கண்டு மனமுடைந்து சோர்ந்து போகாமல் நமது தலைவனின் வரவுகாய் காத்திருப்போம்! அதுவரை விடியலின் வரவுக்காய் உழைத்திடுவோம்! சர்வதேசத்தினை நோக்கி தமிழர்தரப்பு தொடங்கியிருக்கும் இராஜதந்திரப் போரினால் சிங்கள அரசு பலத்த அடிவாங்கப் போகின்றது என்பது நிச்சயம்.
ஆனால் இதனை வார்த்தைகளில் மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் நமது போராட்டங்கள் செயன்முறைகள் மூலம் அமுல்படுத்துவதன் மூலமே அடையமுடியும். ஒற்றுமை என்பதை நமக்குள் உள்வாங்கி ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் நம் உறவுகளுக்காகவும்,நம் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போமானால் வெற்றி என்றுமே நம் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.
இருக்கும் - இருக்காது, நடக்கும் - நடக்காது, இருக்கின்றார் - இல்லை என்ற தேவையில்லாத விவாதங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நமது வரலாற்றுக் கடமையை நாம் தவறாது செய்வோம். காலம் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுவரை நம்மை முற்று முழுவதுமாக அர்ப்பணிப்போம் நம் தேசத்தின் விடிவுக்காக.
தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் வெளிவரும் செய்திகளின் பின்னணியில் பல ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவே தென்படுகின்றது. அந்த நகர்வுகளின் நகர்வுகளை நமது போராட்டத்தினைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். போர்வெற்றிகள் தீர்மானிக்க முடியாத தீர்வினை இராஜதந்திர வெற்றிகள் தீர்மானிக்கும்.
கடந்த காலங்களில் விடப்பட்ட இராஜதந்திர இடைவெளிகளை இம்முறை தமிழர் தரப்பு சரிவர நிவர்த்திசெய்யும். இதன் ஆரம்பப் படிகளாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒருசில விடயங்களினாலேயே சிங்கள அரசு பயங்கொள்ளத் தொடங்கிவிட்டது எனில், இந்த இராஜதந்திரப்போராட்டம் இன்னும் பல அதிசயங்களை தமிழர்களுக்காக செய்வதற்கு காத்திருக்கின்றது.
இவ்வாறான இராஜதந்திரப் போருக்கு உலகம் பூராவுமுள்ள தமிழர்களின் ஆதரவு மிக மிக அவசியம். ஆதலால் நமக்குள் உள்ள கருத்துவேற்றுமைகளை மறந்து ஒன்றாய் களம் புகுவோம். வென்று தலை நிமிர்வோம்!
இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்...
இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்...
வாழுகின்ற நம் தலைவனை மீண்டும் வராமலே வைத்துவிடும்.
தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.
எனவே உண்மையறிந்து,
களமறிந்து,காலமறிந்து நாம் களம் புகுவோம்! இனிவரும் போர்... இராஜதந்திரப்போர்!
Comments