இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது. பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக
முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதார ஆதிக்கம், மேற்கு அதிகாரத்தால் தவிர்க்க முடியாத, புதிய பொருளாதாரச் சுற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது. 1949 இல் உறுதியான பொருளாதாரச் சுற்று, 1970 களில் நெருக்கடிக்குள்ளான போது மறுபடி ஒழுங்கமைக்கப்பட்டது.
பிரித்தானியப் பிரதமர் மாகிரட் தட்சர் மற்றும் அமரிக்க அதிபர் ரொனாட்ல் ரீகன் ஆகியோரது தலைமையில் உருவான இவ்வமைப்பு முறையானது புதிய தாராளவாதப் பொருளாதரக் கொள்கையை உருவாக்கியது. இதன் வளர்ச்சிக் கட்டமான உலகமயமாதல் என்ற ஒழுங்கமைப்பு இன்று தவிர்க்க முடியாத அமைப்பியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போது, அதன் முதற் பகுதியானது, படுகொலைகளும், ஆக்கிரமிபுக்களும், அவலங்களும், அசிங்கங்களும் நிறைந்ததாகவே காணப்பட்டது.
ஆயிரக்கணக்கில் மனித் உயிர்களைக் கொன்று குவித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி அதை வெற்றியெனக் கொண்டாடும் இலங்கை அரசின் இன்றைய நிலையானதும் அதற்கு இந்திய அரசு பின்புலமாக அமைவதும் இந்தப் புதிய ஒழுங்கமைவை அடையாளப்படுத்துகிறது.
இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.
அமரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்தியம் என்பது இன்றைக்குப் பல துருவ பிராந்திய ஏகத்துவப் பரவல்களாக விரிவடைந்து கொண்டிருக்க, புதிய அரசியற் சூழலை நோக்கி உலகம் நகர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆசியாவின் புதிய அதிகாரங்கள், ரஷ்யாவின் மறு உருவாக்கம், அமரிக்க அணியின் பொருளாதாரச் சரிவு, இலத்தீன் அமரிக்காவின் மேற்குல எதிர்ப்பியல், மத்திய கிழக்கின் புதிய அணி சேர்க்கை என்பவையெல்லாம் இப்புதிய உலக ஒழுங்கு விதியின் பிரதான அரசியற் பொருளாதாரக் கூறுகள்.
மேலெழுந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச சக்திகளானது 20ம் நூற்றாண்டில் அமரிக்காவின் சக்திக்கும், 19ம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த ஜேர்மனியின் சக்திகும் இணையானதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறும் அமரிக்க தேசிய உளவுத் துறையின் அறிக்கையானது, இந்தப் புதிய சர்வதேச சக்திகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவிவந்த புவிசார் அரசியலின் தன்மையை மாற்றத்திற்குள்ளாகிவிடும் என்கிறது.
அமரிக்க முன்னாள் இராஜங்கச் செயலாளர் ஹென்றி கிசிங்ஸர் கூறுவது போல்,அமரிக்க முன்னைப் போல சக்திவாய்ந்த அர்சாக இல்லாது போனாலும், புதிய ஒழுங்கமைப்பை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகிக்கும் என்கிறார்.
அமரிக்காவும் ஐரோப்பாவும் தனது அதிகார பலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், இவ்வொழுங்கமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதே தம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரே வழிமுறை என உணர்ந்து கொண்டுள்ளன.
28/03/2009 இல் பிரித்தானியாவில் நடந்தேறிய G20 மாநாட்டில் பல வெளிப்படையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டலும், அமரிக்க அதிபர் ஒபாமாவின் நோக்கம் என்பது சீனாவுடனான பேச்சுக்களுக்கும் உடன்படிக்கைகளுக்குமான மீளமைப்பே என்பதை பிரித்தானிய எகொனமிஸ்ட் சஞ்சிகை கூறுகிறது.
உலக நிதியொழுங்கு உலக மூலதனக் கட்டுப்பாடு என்பன பற்றியே அதிகம் கவனம் செலுத்தப்பட்ட இம் மாநாட்டில், இதுவரை உலகம் கண்டிராத புதிய அங்கீகாரங்களும், அணிசேர்க்கைகளும் வெளிப்படையாகத் தெரிந்தன.
உலகப் பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இவை அனைத்தினதும் சாராம்சமாக அமைந்திருந்தது, சீனாவினதும் இந்தியாவினதும் தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆசியப் பொருளாதாரத்திடமிருந்து மேற்குலகம் எதிர்பார்க்கும் மூலதன ஒத்துழைப்பேயாகும்.
தெற்காசியாவின் ஒரு மூலையில் கொடிய ஆயுதங்களைக் கொண்டு அப்பாவி மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது மா நாடு இரண்டு பிரதான முடிபுகளை வெளிப்படுத்திற்று.
1. ஆசியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் துருவ வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா போன்றவற்றிற்கான மேற்குலகின் அங்கீகாரம்.
2. இந்த அங்கீகாரத்தின் அடிப்ப்டையில் இவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஒத்துழைப்பு.
புதிய ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கம்.
அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனைக் குழுவிலிருந்து ஸ்ரிகிலிட்ஸ், அமேர்திய சென் போன்ற செல்வாக்கு மிக்க பல பொருளியலாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் 2020 இல் இந்த ஆசியப் பொருளாதாரம் திட்டவட்டமான அரசியல் பொருளாதார எல்லைகளுடன் உருவாகிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஆக, சர்வதேச அரசியல் சூழ் நிலை என்பது,
1. அமரிக்க ஐரோப்பிய அணியின் பொருளாதாரச் சரிவு.
2. சீனா இந்தியா போன்ற துருவ வல்லரசுகளின் பொருளாதார வளர்ச்சி.
3. ஏனைய செல்வாக்குச் செலுத்தும் துருவ வல்லரசுகளாக வளர்ச்சியடையவல்ல ரஷ்யா பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்ச்சியும்.
4. இவ்வல்லரசுகளிடையேயன அரசியல் பொருளாதார முரண்கள்.
என்பவற்றை அடிப்படையாக முன்வைத்தே ஆராயப்பட வேண்டும்.
2020 இல் சீனாவின் தேசிய உற்பத்தி என்பது ஐரோப்பாவின் ஒவ்வொரு தனித்தனி அரசுகளின் தேசிய உற்பத்தியை விட அதிகமாகும் என்பதையும் இந்திய உற்பத்தி என்பது ஐரோப்பிய சராசரி உற்பத்தியிலும் அதிகமாகும் எனபதையும் தேசிய உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வுகூறுகிறது.
2020 இன் சீனாவினுடைய எதிர்பார்க்கப்படும் சனத்தொகையானது 1.4 பில்லியனாகவும் இந்தியாவினுடையது 1.3 பில்லியனாகவும் எதிர்வு கூறப்படும் நிலையில் இவ்விரு நாடுகளினதும் மக்களின் சராசரி வாழ்க்கைத் தரம் மேற்கத்திய வாழ்க்கைத் தரத்தின் உயர் நிலையை எட்டியிருக்காதாயினும், இது வல்லரசுகளாக நிர்ணயிக்கப்படுவதன் அளவு கோலாக அமையாது என்கிறது அமரிக்கப் பாதுகாப்புச் சபையின் அறிக்கை.
“புதிய வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாதல் என்பது தவிர்க்கமுடியாத மறுதலையான உறுதியெனினும், சர்வதேச அளவில் அமைந்திருக்கும் எனைய வல்லரசுகளுடன் போட்டி போட்டியாகவா, அல்லது ஒத்துழைப்புடனா தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் என்பது முற்றிலும் நிச்சயமற்றதாகவே உள்ளது” என்கிறது அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனை மையம். இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து உருவான அமரிக்க-ஐரோப்பிய அரசியலென்பது மூன்று பிரதான காரணிகளை உள்ளடக்கியது.
1. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு.
2. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள்.
3. துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள்.
மேற்கின் ஆதிக்கமற்ற புதிய உலகம்.
மத்திய ஆசியாவில் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் அரசியற் செல்வாக்கின் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இன்று எந்த அரசியல் ஆய்வாளரும் தயாராகவில்லை.
ஆசியாவின் வரலாறு நினைத்துப் பார்த்திராத மனிதப் படுகொலையை இந்தியாவும் இலங்கையும் கூடுச்சேர்ந்து வன்னி மண்ணில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது மேற்கின் தலையீடு நன்கு திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றது.
ஐம்பதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் எந்தச் சாட்சியுமின்றி ஒரு சில சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு, புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்ட போதும் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் காரணமின்றித் தடுத்து வைக்கப்பட்டு மனித குலத்திற்கெதிரான வன்முறைகளைக் அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட போதுள்ள போதும் ஐரோப்பிய அமரிக்க சார் எந்த சக்திகளுமே அங்கு அனுமதிக்கப்படவில்லை.
அமரிக்க ஐரோப்பிய அரசுகள் சார் மனித உரிமை அமைப்புக்கள், சமூக உதவி அமைப்புக்கள், அதிகார அமைப்புக்கள், அரசின் பிரதினிதிகள் என்று அனைத்துத் தரப்பினருமே இப்பிரச்சனை பற்றி “மூச்சுவிடக் கூட” அனுமதிக்கப்படவில்லை.
கியூபா,சீனா,ஈரான்,இந்தியா,ரஷ்யா என்ற மேற்கின் அரசியற் செல்வாக்கிற்கெதிரான ஒரு புதிய அணி இலங்கையின் பக்கம் ஐரோப்பிய அமரிக்க நாடுகளைத் எட்டிக்கூடப் பார்க்கக்கூடாது என்று விரட்டியடித்திருக்கின்றன.
ரஷ்யாவினதும் சீனாவினதும் பொருளாதார இணைவு, இந்தியா, ஈரான் ஆகியவற்றை மேற்கின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்வது மட்டுமன்றி திட்டவட்டமான புதிய இணைதலுக்கு வழிகோலுகின்றன.
சீனா,ரஷ்யா, இந்தியா,ஈரான் ஆகிய நாடுகளின் இணைவு என்பது மேற்கல்லாத புதிய பொருளாதார விசையைத் தோற்றுவித்திருக்கிறது என்கிறார் இந்திய பொருளியல் வல்லுனரான அஜய் சிங்.
“இந்தப் புதிய உலகம் முழுவதுமாக ஒருங்கு சேர இன்னும் பொருத்தப்படவில்லை. அரசுகள், தன்னார்வ அமைப்புக்களிலிருந்து தனிப்பட்ட வர்த்தக நிறுவனக்கள் வரையிலான அரசு சாரா சக்திகள் இன்னமும், இந்தப் புதிய உலகினுள் தம்மை உள்ளடக்கிக் கொள்வதற்கு இன்னமும் போராடிக்கொண்டே இருக்கின்றன” என்கிறது அமரிக தேசிய உளவுத்துறை ஆலோசனை நிறுவனம்.
ஆசியப் பொருளாதரத்துள் இழந்து போன மேற்கின் ஆதிக்கம்.
அமரிக்காவின் வயதாகிப் போன ஆதிக்கம் 2020 களிலும் செல்வாகுச் செலுத்தும் காரணியாக திகழுமாயினும் மேற்கிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைவெளி தவிர்க்கமுடியாத பொருளாதாரக் காரணங்களால் குறைந்து கொண்டே செல்கிறது என்கிறார் பிரஞ்சு பொருளியல் ஆய்வாளர் தோமாஸ் பிக்கட்டி .
உற்பத்தித் துறையில் சீனா உலகின் மூன்றாவது இடத்தை வகிக்கும் உலக நாடாக இருப்பினும் இன்னும் சில வருடங்களில் உலகின் முதல் நிலைக்கு வந்துவிடும் என எதிர்வு கூறப்படுகிறது. இதன் பிரதான உற்பத்திப் பகுதிகள் நான்கு வீதத்திலிருந்து பன்னிரண்டு வீதமாக கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது.
புதிய தலை முறைத் தொழில் நுட்பமான நானோ பயோ வின் உருவாக்கத்தில் உலகில் இந்தியா முதலிடம் வகிகும் என எதிர்வு கூறப்படுகிறது.
நீர் மின் உற்பத்தியில் ஐரோப்பா சீனாவைத் தங்கியிருக்க வேண்டி நிலை உருவாகிவிட்டது.
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் உற்பத்தி அருகிப் போய்விட்டது. வங்கிக் கடன் பொறிமுறையிலும், உற்பத்தித் திறனற்ற சந்தைப் பொருளாதாரத்திலும் தங்கியிருந்த மேற்கு நாடுகள், இப்பொருளாதாரப் பொறிமுறை நிரம்பல் நிலையை எட்டிய போது, சரிந்து விழ ஆரம்பித்து விட்டன. இன்று இவ்வலரசுகள் நடாத்திக் கொண்டிருப்பது தற்காலிக தற்காப்பு யுத்தங்களே தவிர வேறேதுமில்லை.
ஆசிய ஆபிரிக்க நாடுகளுடனான வியாபார மூலதனம் வங்கிகளை நிரப்பிக்கொண்டிருந்த போது அம்மூலதனத்தச் சுற்றிய இயக்கும் சக்திகளாக, வங்கிக் கடன், சொத்துச் சந்தை, சேவைத் துறை என்பன அமைய மக்களின் தொழில் சார் நடவடிக்கைகளும் இவற்றைச் சுற்றியே அமைந்திருந்தன.
ஆசியாவை நோக்கிய மூலதனத்தின் நகர்வின் பின்னர், ஐரோப்பாவினதும் அமரிக்காவினதும் பணமூலதன இருப்பு வற்றிப்போகவாரம்பித்தது. முதலீடுகள் கட்டுப்பாடின்றி ஆசியாவை நோக்கி நகர்ந்தது. இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மூதலீடுகளின் தளமாக அமைய மேற்கத்தைய பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.
இந்த நெருக்கடிக்குத் தற்காலிகத் தீர்வாக, ஆசியாவை நோக்கி நகரும் நிறுவங்களைக் கவரும் நோக்கோடு ஐரோப்பிய அரசுகள் தமது நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு வரிவிலக்கை வழங்கியதுடன் மட்டுமன்றி, அரச பணத்தை அவற்றில் முதலீடு செய்தன. வங்கிகளுக்கு மில்லியன் கணக்கில் முதலீடுகள் வழங்கப்பட்டன. புதிய ஒழுங்குமுறைகள் புகுத்தபடுகின்றன. சேவைத்துறைக்கு பண இருப்பு மேலும் பயன்படுத்தப்பபடுகின்றது.
இவையெல்லாம் பொருளாதாரச் சரிவிலிருந்து ஐரோப்பாவையும் அமரிக்காவையும் தற்காத்துக் கொள்வதற்கான தற்காலிக நடவடிக்கைகளே.
இந்தத் தற்காப்பு யுத்தத்தின் அடிப்படை என்பது, பலத்தை மறுபடி நிலைநாட்டிக்கொண்டு ஆசியப் பொருளாதாரத்துடன் சமரசத்திற்கு செல்வதே என்பதைப் பல பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஏப்பிரல் 2009 வரையான நிதி வருடத்தில் பிரித்தானியாவில் சீனாவின் முதலீடுகள் 13 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2009 இல் அமரிக்க திறைசேரியில் சீனாவின் முதலீடு தொடர்பாக கருத்து வெளியிட்ட ஹில்லரி கிளிங்டன், இரு நாடுகளும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலை உருவாகிவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆக, மேற்கின் பொருளாதாரம் ஆசியப் பொருளாதாரத்தின் உதவியின்றி உயிர்வாழ முடியாத நிலை உருவாகிவிட்டத.
மேற்கின் அரசியல் அதிகார அமைப்பு தனது பொருளாதாரத் தேவைகளுக்கும் நலன்களுகும் ஏற்றவாறு எவ்வாறு பொது விதிமுறைகளையும் ஒழுங்கமைப்புகளையும் ஆசியப்பொருளாதாரத்துடன் ஏற்படுத்திக் கொள்வதென்ற நடைமுறைத் தந்திரோபாயங்களே இன்று வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆசியப் பிராந்தியத்தின் இன்றைய அதிபதிகளான இந்தியாவும் சீனாவும் மேற்கின் இந்தப் பலவீனத்தின் அடிப்படையிலேயே தமது அரசியல் பொருளாதரத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்கின்றன.
ஆசியப்பிராந்தியத்தில், அது ஆப்கானிஸ்தான் ஆகவிருந்தாலும் இலங்கை அல்லது பாக்கிஸ்தான ஆகவிருந்தாலும் இந்தியாவினதும் சீனாவினதும் அரசியல் பொருளாதர பிராந்திய நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மேற்கு தயாராகவில்லை.
இலங்கையில் விடுத்லைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையிலான இறுதி யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து விடுதலிப் புலிகளின் தலைவர்கள் முற்றாக அழிக்கப்படும் காலப்பகுதிவரை ஆயிரக்கணக்கான அப்பவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், யுத்தக் குற்றங்களை வெளிப்படையாகவே இலங்கை அரசு புரிந்திருக்கிறது, யுத்தத்தில் அப்பாவிக் குழந்தைகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள், இரசாயன் ஆயுதங்களின் பாவனைக்கு ஆதாரங்கள் உள்ளன, இனப்படுகொலையின் வரையறைக்குள் படுகொலைகள் அடக்கப்பட அனைத்து சாத்தியங்களும் உள்ளன.
ஆனால் அமரிக்கா உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்த அழிப்பின் நேரடி நெறியாளனாகத் தொழிற்பட்ட இந்தியாவையோ, இராணுவப் பின்புலமாக அமைந்த சீனாவையோ மேற்குலகம் பகைத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
இலங்கை என்ற குட்டித்தீவு பல ஐரோபிய இராஜ தந்திரிகளையும், அரசியற் தலைவர்களையும் அதன் எல்லைக்குள் அனுமதிக்கவே மறுத்திருக்கிறது.
இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அழிப்பும் அதன் தொடர்ச்சியும் இந்திய - சீனப் பொருளாதரங்களுக்கான எதிர்காலத் தளமாக இலங்கை தொழிற்படும் என எதிர்வுகூறப்பட்டாலும், இந்த யுத்தம் என்பது அமரிக்க ஐரோப்பிய ஏகபோகங்களுக்கெதிராக ஆசியப் பொருளாதாரம் நடாத்திய பலப் பரீட்சையே!
இப் பலப்பரீட்சை புதிய உலக ஒழுங்கமைப்பைப் படம் போட்டுக்காட்டுகிறது.
இங்கு முதிர்வடைந்த மேற்கின் ஏகாதிபத்தியம் தோற்றுப் போனது. புதிய இராட்சதப் பொருளாதார வல்லரசுகள் மக்களின் பிணங்களின் மீது வெற்றியை நிலை நாட்டிக்கொண்டுள்ளன.
சர்வதேசத்தின் பலபபரீட்சைக்கான விளையாட்டு மைதானம் தான் வன்னி! அங்கிருந்த ஆடுகருவிகள் தான் வன்னி மக்கள்!! புலிகளின் அரசியல் அம் மைதானத்திற்கான திறவுகோல்!!!
இந்திய - சீன உறவு
இந்திய - சீன உறவின் மிகவும் சிறந்த காலகட்டம் இது என்கிறார் இந்தியாவுக்கான சீனத் தூதுவர் ஸ்கான் யான். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எந்த விதமான அடிப்படை முரண்பாடுகளும் இப்போது இல்லை என்று மேலும் குறிப்பிடும் அவர், முரண்பாடுகளைவிட பொதுமைப்பாடுகளே அதிகம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
பொதுவான பொருளாதாரத் தளமொன்றில் மேற்கின் ஆதிக்கத்திற்கெதிராகத் தன்னை நிலை நாட்டிக்கொள்ளும் சீனாவினதும் இந்தியாவினதும் பொதுவான எதிர்ப்பு சக்தி “தனது இழந்து போன பலத்தை நிலை நாட்டிக்கொள்ள முனையும்” மேற்குலகமேயாகும் என்பதை பல சர்வதேச ஆய்வாளர்கள் குறித்துக்காட்டுகின்றனர்.
அமரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் முதல் தடவையாக இந்தியாவைச் சூழவர சீன அரசு தனது கடற் பாதுகாப்பு மையங்களாக துறைமுகங்களை நிறுவிக்கொண்டிருகிறது என்பதையும் அதன் ஒரு பகுதியாக இலங்கையிம் ஹம்பாந்தோட்ட என்னுமிடத்தில் சின அரசு நிறுவிவரும் துறைமுகம் அமைந்துள்ளது என்றும் எதிர்வு கூறியது. ஆனால் இதன் எதிர் வினையாக இந்திய அரசு எந்த இரணுவ நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக சீன அரசுடனான மேலதிக ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
2009 இன் ஆரம்ப நாட்களில் சினாவில் உற்பத்தியாகும் விளையாடுப் பொருட்கள வர்த்தக அமைப்பின் (WTO) ஈடற்றதாக இலாத காரணத்தால் தடைசெய்வதாக இந்தியா அறிவித்திருந்தது. இது பற்றிக் குறிப்பிட்ட பைனாசியல் டைம்ஸ் என்ற பிரித்தானிய இதழ், சீன இந்திய பொருளாதார முறுகல் நிலை என வர்ணித்திருந்தது.
இறுதியாக இந்தியாவும் சீனாவும் ஒரு முடிபுக்கு வந்தன. இவ்விரு நாடுகளதும் வர்த்தக அமைச்சர்கள் ஒவ்வொரு மாதமும் புது டெல்கியில் பொதுவான தளம் தொடர்பாக விவாதிப்பதென்றும் இரு நாடுகளும் ஒரு வேலைக் குழுவை அமைப்பது என்று அதற்கும் மேலாக ஐ அடைவதற்கு முன்பதாக தாமே தர நிர்ணயம் செய்வதாகவும் முடிபுக்கு வந்தன.
இந்தப் பிரச்சனை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சீன உதவி வர்த்தக அமைச்சர், இரு நாடுகளும் நடைமுறைக்கூடாகப் பொதுத் தளத்தில் இயங்குகின்றன என்றார்.
16/06/2009 நடைபெற்ற BRIC அமைப்பின் பின்னதான சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகியவற்றின் கூட்டறிக்கையில் WTO மறு சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளன.
ஆக, மேற்கின் பலவீனம் இந்தியா,சீனா போன்ற நாடுகளை இறுக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. ஆசியப் பொருளாதாரம் மேற்கின் ஆதிக்கத்திற்கெதிராக உருவாக ஆரம்பித்து விட்டது.
இலங்கைப் பிரச்சனையில் மேற்கு தலையிட முனைந்த போதெல்லாம் சீனாவும் இலங்கையும் ஒருங்கு சேர்ந்தே மூர்க்கமாக எதிர்த்தன.
இலங்கை என்பது ஆசியப் பொருளாதாரத்தின் பரீட்சாத்தக் களமே. ராஜபக்ஷ குடும்பத்தின் இலங்கை அரசு இந்தியாவின் பொம்மை அரசு என்பது மேற்கு நாடுகளுக்குத் தெரியாத ஒன்றல்ல.
அழைப்பின்றியே பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்னேர் மற்றும் பிரித்தானியப் வெளிவிகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் உக்கிரமாக நடை பெற்றுக்கொண்டிருந்தது.
ஐரோப்பாவின் இரண்டு முக்கிய வெளி விவகார அமைச்சர்கள் மூன்றாமுலக நாடொன்றுக்கு அழைப்பின்றி மேற்கொண்ட பயணம் எந்தப் பயனுமின்றி அவமானமுடையதாக முடிவடைந்தது. இன்நடவடிக்கை இலங்கை என்ற பலவீனமான நாடொன்றின் தனிப்பட்ட நடவடிக்கையாக ஒரு போதும் கருத முடியாது. இது போன்றே டெஸ் பிரவுணிலிருந்து பொப் ரே வரையிலான மேற்கு இராஜதந்திரிகளை அவமானப் படுத்தும் செயலானது இதற்கு முன்னர் எந்த ஆசிய நாட்டிலும் நடைபெற்றதாக வரலாறில்லை.
இலங்கை அரசின் அரசியற் இராணுவ பின்புலமாக அமைந்துள்ள இந்தியாவினதும் சீனாவினதும் மேற்குலகிக்கெதிரான அரசியலின் வெளிப்பாடே இலங்கையின் மேற்கெதிர்ப்பாகும்.
இந்தியாவும் சீனாவும் இன்னமும் இலங்கையில் நடத்திக் கொண்டிருக்கும் பரிசோதனையில் மேற்கின் எதிர்வினையை எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. மேற்கின் பலவீனம் ஐ.நா சபை வரை அம்பலமாகி, ஆசிய வல்லரசுகளின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆசியாவில் மேற்கின் பொருளாதார முன்நகர்வுகளுக்கெதிராக பொதுத் தளத்தில் இணையும் சீனாவும் இந்தியாவும் தேற்காசியப் பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பாக தமக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்கின்றன.10/06/2009 இல் இந்திய இராணுவ விமானமொன்று சீன இந்திய எல்லைப்பகுதியில் விழுந்து நொருங்கியதில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது சீனாவின் தாக்குதலா அல்லது தற்செயல் நிகழ்வா என பல்வேறு கருத்துக்கள் நிலவும் அதே வேளை, சீன எல்லையில் இந்தியத் துருப்புக்களின் தொகை 60 ஆயிரத்தால் அதிகரிக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் எதிர்வரும் காலத்தில் மேற்கின் பொருளாதரப் பலவீனமும், அதனை மறு சீரமைக்க ஆசிய-ஆபிரிக்க நாடுகள் மீதான ஆதிக்கமும் இந்திய சீன உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதே அதிக சாத்தியமானது.
இந்தியாவின் சர்வதேச அரசியல் சதுரங்கம்.
ஆளும் வர்க்கத்தின் மீது மூலதனச் சொந்தக்காரர்களான அதிகார வர்க்கம் நேரடியாகச் செல்வாகுச் செலுத்தும் மிகச்சில தேசிய அரசுகளின் இந்தியாவும் ஒன்றாகும்.
ஆக, பல்தேசியப் பெரு முதலாளிகளின் நலன்களின் அடிப்படையிலேயே இந்தியாவின் அரசியல் நகர்வு எப்போதுமே அமைந்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தளவில் மேற்கின் பார்வைக்கு சீனாவுடன் அரசியல் பொருளாதார முரண்பாடுகள் ஆழமடைந்துள்ளதாகக் தோற்றமளிப்பது போல காட்டிக்கொண்டாலும், சீனாவுடனான வர்த்தக உறவுகளும், மேற்கிக்கெதிரா சீனாவுடனான இணைவும் வலுவடைந்தே செல்கிறது.
2008 வரை ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கான கோரிக்கையை அமரிக்காவினூடாக முன்வைத்த இந்தியா, இன்று சீனாயுடன் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிக் மாநாட்டில் சீனா, இந்தியா, ரஷ்யா,பிரேசில் ஆகிய நாடுகள் இணைந்த கூட்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமென்றும் இந்தியாவும், பிரேசிலும் இணைந்த சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கான அங்கத்துவம் அவசியமானது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சீன அரசுகள் அரங்கேற்றிய இலங்கை இனப்படுகொலை
ஆசியாவை நோக்கி நகர்ந்த மூலதனதை எல்லா வகையிலும் தனது கட்டுப்பாடுகுள் மறுபடி உட்படுத்துவதே அமரிக-ஐரோப்பிய அரசுகள் மறுபடி சுதாகரித்துக் கொள்வதற்கான ஒரே வழி. இது சமரசத்தினூடாக மட்டுமல்ல மேற்கின் வழமையான அழிவரசியலூடாகவும் நடைபெறும்.
G20 மாநாடு உட்பட அதன் பின்னதான மேற்கின் நகர்வுகள் இதனையே தெளிவு படுத்துகின்றன.
ஆசியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மேற்கின் முதலாவதும் முக்கியமானதுமான நடவடிக்கையாக, இந்திய சீன இணைவைத் தடுப்பதும் அதனூடாக இவ்விரு நாடுகளுடனும் தனித்தனி பொருளாதார ஆதிக்கத்தையும் சந்தைக் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவதுமாகும்..
இந்தியாவும் சீனாவும் வெளித்தோற்றத்திற்கு முரண்பட்ட நிலையைக் கொண்டதாகக் காட்டிக்கொண்டாலும் இந்தியாவுன் மிகப்பெரிய வியாபாரப் பங்காளியாக சீனாவே திகழ்கிறது. 2008ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகங்களும் 34 வீதத்தால் அதிகரித்துள்ளது.
நாடுகளிடையேயான முரண்பாடுகளைக் கையாள விரும்பும் மேற்கு நாடுகள் இந்நாடுகளின் உள் முரண்பாடுகளையும் மறுபுறத்தில் கையாள முற்படுகின்றன. சமூக முரண்பாடு, தேசிய இன முரண்பாடுகள், அடையாள அரசியல் தொடர்பான மிகைப்படுத்தல்கள், மத முரண்பாடுகள் ஆகியவறைக் கையாள்வதனூடாகவும், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற ஏனைய தன்னார்வ அமைப்புக்களின் அழுத்த அரசியலைக் கையாள்வதனூடாகவும் தனது உள்ளீட்டை ஆசிய நாடுகளில் நடத்தும் மேற்கு நாடுகள் அவற்றின் அரசுகளைப் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன.
தன்னார்வ அமைப்புக்கள், எதிர்ப்பியக்கங்களுகான நேரடிப் பண உதவி, மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றினூடாகவே இவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் இந்தியா இணைந்து நடாத்திய இனப்படுகொலை தான் முதல் மறைமுக எச்சரிக்கை.
மிகவும் வெளிப்படையாகவே மனிதகுலத்தின் ஒருபகுதியை சாட்சியமின்றி கொன்று குவிக்க இலங்கை அரசிற்கு புதிய இந்திய சீன ஏகபோகங்கள் வழங்கிய ஆதரவினைக் கூட தனது அரசியலுகுச் சாதகமாக மேற்கு நாடுகள் கையாள முடியாத நிலைக்குப் பலவீனமாகிவிட்டன.
பல ஆய்வாளர்கள் கூறுவதுபோல பயங்கரவாதத்தை அழிப்பதில் தான் மேற்கின் நலன்கள் இந்திய இலங்கை அரசுகளோடு ஒன்றுபட்டிருப்பது உண்மையென்றால், இன்று தடுப்பு முகாம்களில் ஏற்பட்டிருக்கின்ற மனித அவலத்திற்கெதிராகக் கூட மேற்கின் தன்னார்வ அமைப்புக்கள் குரல் கொடுக்க முடியாத நிலைக்குள் முடக்க்ப்பட்டுள்ளன என்பதற்கான காரணம் அர்த்தமற்றதாகிவிடும்.
3 லட்சம் மனித உயிர்கள் பட்டினியாலும், தொற்று நோய்களாலும் பலிக்காக வளர்க்கப்பட்ட மிருகங்களைப் போல செத்துக்கொண்டிருக்கும் போது இந்திய முதலாளிகள் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தென்னாசியாவில் சீனாவின் இராணுவ நிலைகள் தொடர்பாக அறிக்கைகளும் ஆய்வுகளும் சமர்ப்பிக்கும் அமரிக்க ஐரோப்பிய அரசுகள், இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனையை முன்வைத்துக் கூட தனது அரசியலையும் ஆதிக்கத்தையும் தெற்காசியாவில் நிலைனாட்ட முடியாத அளவிற்கு உலகின் புதிய படமாக்கல் அமைந்துள்ளது.
ஆசியப் பொருளாதாரம் நிகழ்த்திய முதல் மனிதப் படுகொலைதான் இது. இக்கொலைகள் ஒரு ஒத்திகை மட்டுமே. இந்த அரசியல் சமூகப் பகைப்புலத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், தெற்காசியாவின் இன்னொரு மூலையில் இதே மனித அவலத்தை புதிய வல்லரசுகள் நிறைவேற்றும். சமூகத்தின் விழிம்பிலுள்ள மக்கள் வேண்டப்படாதவர்களாகக் கொன்று குவிக்கப்படலாம்.
இந்த அடிப்படையிலிருந்து புதிய எதிர்ப்பியக்கங்களையும் புதிய எதிர்பரசியலையும் நோக்கி முற்போக்கு சக்திகள் இணைந்து கொள்ள வேண்டும்.
-சபா நாவலன்
snavalan@googlemail.com
Comments