சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான மகிந்தவின் நடவடிக்கை கொடூரமானது: 'கொரியா ரைம்ஸ்'

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாததும் இரக்கமற்றதுமாகும் என 'கொரிய ரைம்ஸ்' ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இந்தியா உலகின் பெரிய ஜனநாயக நாடு. ஆனால், இலங்கையில் நடைபெற்ற இரத்தக்களரியை அது தடுக்க தவறிவிட்டது. அங்கு நடைபெற்ற அழிவுகளை கேட்க விருப்பமற்று செவிடாக அது இருந்து கொண்டது.

வழமையாக அந்தப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசு இந்தியா, அந்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அதுவே பொறுப்பானது என தன்னை நிலைப்படுத்தியிருந்தது.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க முன்வரவில்லை. அங்கு நடைபெற்ற இரத்தக்களரிகள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் தெரிவித்த போதும் இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த பல வாரங்களாக அங்கு மோதல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தன.

பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரம் மக்கள் பாரிய அவலங்களைச் சந்தித்திருந்தனர். 1 லட்சத்து 88 ஆயிரம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த மே 13 ஆம் நாள் தெரிவித்திருந்தது.

1,700 காயமடைந்ததாகவும் மேலும் 50 ஆயிரம் மக்கள் மோதல் நடைபெறும் பகுதியில் உள்ளதாகவும் அது தெரிவித்திருந்தது. இன்று வரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை பணியாளர்கள், உதவி நிறுவனப் பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான அனுமதிகளை அரசாங்கம் வழங்காததால் உண்மையான விபரங்களை பெறமுடியவில்லை.

எனவே, உண்மையான தொகை மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

அருந்ததி ராய் என்ற ஊடகவியலாளரால் வெளியிடப்பட்ட படங்களில் தலை அற்ற சிறுவனின் உடலமும், இறந்த கர்ப்பிணித்தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த குழந்தையும் காண முடிந்துள்ளது.

உடலின் பல பாகங்கள் சிதறிக்காணப்படுகின்றன. இந்த அழிவுகளில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடூரமானதும் மனித நேயமற்றதுமான நடவடிக்கையாகும்.

அதாவது, சிறிலங்காவில் உள்நாட்டுப் போரில் இது மிகப்பெரும் இன அழிப்பாகும். சிறிலங்காவின் ஜனநாயகம் இனவாதக் குழுவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக சிறுபான்மை மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா புத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. அங்கு இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாகும்.

சிறிலங்காவானது முன்னாள் திரைப்பட நடிகர் மகிந்த ராஜபக்சவினால் ஆளப்படுகின்றது. அவர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாததும், இரக்கமற்றதுமாகும்.

தன்னை பாதுகாத்துக்கொள்ள சிறிலங்காவுக்கு உரிமை உண்டு ஆனால் அரசு அமைதியான அரசியல் வழிமுறைகளை விடுத்து வன்முறைகளில் இறங்கியிருந்தது.

அமைதியான தீர்வை பொறுத்தவரையில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வேண்டும். அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரங்களை பிரதிநித்துவப்படுத்தும் சுயாட்சியை வழங்கவேண்டும். இந்த உடன்பாடே நியாயமானதும், ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமாகும்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை கொடூரமானது, மனிதாபிமானமற்றது, அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அது உடனடியாக நிறுத்த வேண்டும். மறுபக்கம் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது.

மேலும் இரத்தக்களரியை தடுப்பதற்கு பிராந்திய வல்லரசு முன்வரவேண்டும். தென் ஆசியாவில் இந்தியாவுக்கே பங்கு உண்டு. அனைத்துலக சமூகமும் இரத்தக்களரியை நிறுத்த முன்வரவேண்டும்.

இந்தியாவும் இத்தகைய மனித உரிமை மீறல்களை முன்னர் மேற்கொண்டிருக்கலாம். முஸ்லிம் மக்களுக்கு எதிராக குஜராத்திலும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரிசாவிலும் இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனவே, இந்த இரத்தக்களரியை நிறுத்த இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதியற்றது.

ஆனால், இது ஒரு தனிமனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் என்பது மட்டும் தெளிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments