இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!

நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர்.

தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம்.

அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர்.

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.

இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்?

வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது?

நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை?

எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான்.

”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்?

ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்?

நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை.

நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு.

இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

- க.அருணபாரதி (arunabharthi@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Comments