புலிக் கொடி

புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டங்களைப் பார்த்து சிங்களமும் அதன் அருவருடிகளும் சற்று ஆடிப் போய்த்தான் கிடக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டு மொத்தமாக அனைத்து தமிழர்களும் திரண்டு நின்று நடத்துகின்ற போராட்டங்கள் பல நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது.

வன்னியில் தமிழினத்தின் மீது இன அழிப்பு யுத்தத்தை மகிந்தவின் அரசு தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் அறப் போராட்டங்கள் வெடித்தன. புலம்பெயர் நாடுகளில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு தமிழர்கள் ஒன்று கூடினார்கள்.இந்தப் போராட்டங்களை சிங்களமும் அதன் அருவருடிகளும் வேறு மாதிரிச் சித்தரித்தன.

தேசியத் தலைவரின் படங்கள் இல்லாது புலிக் கொடி இல்லாது ஊர்வலங்கள் நடந்ததாலேயே பெருந் தொகையான மக்கள் கூடினார்கள் என்றும் புலிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் எழுதித் தள்ளினார்கள். சர்வதேச சமூகத்திடமும் இத்தகையை கருத்துகளை ஊட்டுவதற்கு இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற அனைத்துப் போராட்டங்களிலும் புலிக் கொடிகளும் தேசியத் தலைவரின் படங்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஊர்வலங்களில் கலந்து கொள்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. புலிக் கொடிகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டு போகின்றன.

தமிழ் மக்களின் அணிவகுப்பை விட புலிக் கொடிகளின் அணிவகுப்பு சிறிலங்கா அரசை பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புலிக் கொடிகளை தடை செய்வதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமிழிர்களின் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களம் போர் தொடுத்திருக்கின்ற இந்த நேரத்தில் தேசியத்தின் அடையாளமாக இருக்கும் புலிக்கொடியை உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பது இயல்பாக நிகழ்கின்றது.

தமிழினத்தின் போராட்டத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது என்னும் செய்தியையே இந்தப் புலிக் கொடிகள் சொல்கின்றன.இதுவே சிங்கள அரசின் பதட்டத்திற்கும் காரணமாக இருக்கின்றது.பயங்கரவாத இயக்கமாக பட்டியிலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்னும் கருத்தை புலம்பெயர் நாடுகளின் ஊடகங்களில் பரப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகங்கள் கடும் முனைப்பைக் காட்டின.

இதன் மூலம் மேற்குலகுக்கு அழுத்தங்களை கொடுத்து புலிக் கொடியை தடை செய்து விடலாம் என சிறிலங்கா அரசு கணக்குப் போட்டது. ஆனால் இது சிறிலங்கா அரசுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது.புலிக் கொடியை கொண்டு செல்வதும் அதை ஏற்றுவதும் சட்ட விரோதம் அன்று என கனடிய காவல்துறையினர் அறிவித்து விட்டனர்.

புலிக் கொடி சட்டவிரோதமானதா என்று ஆய்வு செய்வதாகச் சொன்ன கனேடிய காவல்துறை கடைசியில் புலிக் கொடி சட்டவிரோதம் அன்று எனக் கூறி விட்டது. பிரித்தானியக் காவல்துறையும் புலிக்கொடி சட்டவிரோதமானது இல்லை எனச் சொல்லி விட்டது.பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்ட பின்பு பிரித்தானிய போன்ற நாடுகளில் புலிக் கொடிகளை காவற்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.

இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும் கூட தமிழர்கள் அதைச் செய்யவில்லை. காவற்துறையோடு மோதற் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்னும் சமரசக் கொள்கையோடு இருந்து விட்டனர்.இதை விட காவற்துறையினர் சொல்லாது விட்டாலும் கூட எம்மவர்களும் தாங்களாகவே புலிக்கொடிகளை தவிர்த்துக் கொண்டனர்.

உலக நாடுகள் எம் மீது தடை போட்டால் அதற்கு மேலால் தமக்கு தாமே தடை போடுவதில் எம்மவர்கள் வல்லவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் புலிக்கொடியும் தேசியத் தலைவரின் படங்களும் தடைசெய்யப்பட்டு விட்டதாகவும் தமக்கு தாமே கற்பனை செய்து கொண்டு அதன்படி நடக்கத் தொடங்கி விட்டார்கள்.

சட்டரீதியாகப் பார்க்கின்ற பொழுது ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒரு அமைப்பை தடை செய்வதற்கு பல படிமுறைகள் உள்ளன. ஒரு அமைப்பினால் தன்னுடைய நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்கின்ற போதுதான் அந்த அமைப்பை தடைசெய்வதற்கு அந்த நாடு முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதாக உத்தியோபூர்வமாக அறிவிக்கும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு இயக்கத்தை தடை செய்வதற்கும் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்ப்பதற்கும் சட்டரீதியான வேறுபாடுகள் உள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கமே தடை செய்யப்படாத போது புலிக் கொடி தடை செய்யப்பட்டதாக சிலர் கருதுவது வெறும் பிரம்மையே தவிர வேறு இல்லை.இன்றைக்கு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் புலிக் கொடிகளை தாங்கியபடி வீதிகளில் இறங்கியதன் பின்பு இந்த நாடுகளின் காவற்துறையினர் புலிக் கொடி சட்டவிரோதமானது அன்று எனும் உண்மையை ஒப்புக் கொள்கின்றனர்.

தமிழ் மக்களின் போராட்டமே இந்த உண்மையை வெளிக்கொணர்ந்தது.விடுதலைப் புலிகளின் கொடிக்கும் தேசியக் கொடியான புலிக் கொடிக்கும் வித்தியாசம் இருப்பது கூட பலருக்கு தெரிவது இல்லை. விடுதலைப் புலிகளின் கொடியில் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். தேசியக் கொடியில் அந்த எழுத்துகள் கிடையாது.

ஆயினும் இன்னமும் சில நாடுகளில் புலிக்கொடியை ஊர்வலங்களில் கொண்டு செல்வதை காவற்துறையினர் தடுத்து வருகின்றார்கள். இவர்கள் வெறுமனே புலிக்கொடியை தடை செய்யவில்லை. தமிழர்களின் அடையாளத்தை தேசியத்தை பண்பாட்டை தடை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயமலை வரை சென்று அங்கு தமிழர்களின் புலிக் கொடியை நாட்டினான். தொடர்ந்தும் தமிழர்களின் புலிக் கொடி பல வெற்றிகளை கண்டு தமிழினத்தின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்தது.

கிபி 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் புலிக்கொடி தெற்காசிய முழுவதும் பறந்தது. பின்பு ராஜேந்திர சோழனின் காலத்தில் அதன் பரப்பு மேலும் விரிவடைந்தது.இன்றைய இந்தியாவையும் ஈழத்தையும் தவிர வேறு பல நாடுகளையும் வென்ற தமிழர்களின் கொடி புலிக்கொடி ஒன்றுதான். தெற்காசிய கடல் முழுவதும் புலிக் கொடியோடு தமிழர்களின் கப்பற்படை வலம் வந்தது.

சங்க இலக்கியங்களும் புலிக் கொடியையும் புலிச் சின்னத்தையும் போற்றிப் புகழ்ந்திருக்கின்றன. இவ்வாறு புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பொழுது எத்தனையோ இயக்கங்கள் இருந்தன. இந்த இயக்கங்களை சேர்ந்தவர்களை தங்களின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் தமிழீழ மக்கள் "பொடியங்கள்" என்று அழைத்தனர். தமிழ் நாட்டு மக்கள் அனைத்து இயக்கங்களையும் "புலிகள்" என்றுதான் அழைத்தனர். எந்த இயக்கத்தை சார்ந்திருந்தாலும் தமிழினத்தின் பண்பாட்டையும் தேசியத்தையும் காப்பதற்கு வீரமுடன் போராடுகின்ற அனைவரும் "புலிகள்" என்பதுதான் இதனுடைய அர்த்தம்.

தமிழர்களை சிங்களமும் "கொட்டியா" என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.புலி,புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும் தேசியத்திற்கும் தாயகத்திற்கும் சொந்தமானவை.

எமது பண்பாட்டையும் அடையாளத்தையும் தடை செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் காவற்துறையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடை செய்ய முயற்சிப்பது உண்மையில் சட்ட விரோதமானதும் மனித உரிமை மீறலும் ஆகும். புலிக் கொடியை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு வலுவான காரணங்கள் தமிழர்களுக்கு உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு தமது தாயகத்தை கோருவதற்கு உரிமை உண்டு. அந்த தாயகத்திற்கு ஒரு கொடியை வைத்திருப்பதற்கு உரிமை இருக்கின்றது. தமது வரலாற்றோடும் பண்பாட்டோடும் கலந்திருக்கும் புலிக் கொடியை தேசியக் கொடியாக தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

www.tamilkathir.com

Comments